ஜவஹர் ஐந்து

நேருவுக்கு பதிலாக பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் கஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது என்று

நம் பிரதமர் நாடாளுமன்றத்திலேயே சொன்னதை

யாரும் மறக்கமுடியாது.

2700 கோடி ரூபாயில் குஜராத்தின்

நர்மதா பள்ளத்தாக்கில் சர்தாருக்கு 597 அடி சிலை வைத்ததுதான் மிச்சம். ஒருமைப்பாட்டின் சிலை என்று பேர் வைத்தும், நேருவுக்கு எதிரான கருத்தில் மக்களை ஒருங்கிணைக்க ஏலவில்லை. நேருவையும் பட்டேலையும் எதிரிகளாக சித்திரிக்கும் சித்திரமும் இங்கே ரசிக்கப்படவில்லை.

காரணம், அவர்களுக்கிடையே

நிலவிய இதயங்கனிந்த நட்புறவு..

நேருவுக்கும் பட்டேலுக்கும்

கருத்து வேறுபாடுகள் இருந்தனவா?

இருந்தன. உண்மை.

நேருவுக்கும் சுபாஷுக்கும்,

நேருவுக்கும் ராஜாஜிக்கும்,

நேருவுக்கும் பல காங்கிரஸ் தலைவர்களுக்கும்,

ஏன், நேருவுக்கும் காந்திக்கும்கூட

கருத்து வேற்றுமைகள் இருந்தன.

அவை கொள்கை மாறுபாடுகள்தாம்.

பகைமுரண்கள் அல்ல.

சுதந்தரம் பெற்று நாடு அமைச்சரவையை எதிர்நோக்கியிருந்தபோது,

நேரு பட்டேலுக்கு எழுதினார் :

‘நீங்கள்தான் நம் அமைச்சரவையின் வலிமையான தூண். இது சம்பிரதாயக் கடிதம்தான். முறைப்படி அழைக்கவேண்டுமே அதற்காகத்தான். மற்றபடி

இந்தக் கடுதாசி ஒரு பெரிய விஷயமே அல்ல!’

அதற்கு நன்றி தெரிவித்த பட்டேல் எழுதினார் :

‘முப்பதாண்டு நட்பும் பாசமும் கொண்ட

நம் உறவுக்கு சம்பிரதாயங்களெல்லாம்

தேவையே இல்லை நேருஜி. நமது நட்பை,

ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது. உங்களைப்போல தியாகம் செய்தவர் யாருமில்லை. இனி எஞ்சியிருக்கும் என் வாழ்நாள்

உங்கள் சேவைக்கானது. களங்கமற்ற

முழு நம்பிக்கைக்கு உரியவனாக

நான் இருப்பேன்!’ என்றார்.

நேருவின் அறுபதாவது பிறந்தநாளில் –

‘நேரு அபிநந்தன் கிரந்த்’தில் – எழுதும்போது,

‘நேருவும் நானும் சந்திக்க முடியாமல்

இருக்கிற தருணங்களில், ஒருவருக்கொருவர்

எவ்வளவு இழப்பை உணருகிறோம் என்பதை

மக்களால் கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். மக்களிடம் நேருவைப் பாராட்டிப் பேசும்போது, எங்களுக்குள் இருக்கிற இந்த உறவு, நெருக்கம், சகோதரப் பாசம் போன்றவற்றை எளிமையாக சுருக்கமாக சொல்லிவிடலாமென்று பார்த்தால்,

அது எனக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. வருடங்கள் செல்லச் செல்ல எங்களிடையே

அன்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது,

நேருவின் எண்ணங்கள் சில சமயங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்.

ஆனால் அவர் வெளிப்படையான நேர்மையை, இளமையின் தன்முனைப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால்தான் ஜாதி மத இன வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படுகிறார்.

அவர் உயர்ந்த ஒழுங்குள்ள இலட்சியவாதி.

அழகுக்கும் கலைக்கும் பக்தன்.

பிறரை காந்தம் போல ஈர்க்கும், ஊக்குவிக்கும் எல்லையற்ற திறன் கொண்ட தலைவன்.

உலகின் மாபெரும் மனிதர்கள் திரண்டிருக்கும்

எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரிகிற ஆளுமை . இத்தகைய வலிமைகளால் பெரும் அரசியல் தலைவராகப் பரிமளித்தவர் நேரு.

நாட்டுக்காக அவர் எவ்வளவு துன்பப்படுகிறார்

என்பதை அறிந்தவர்கள் என்னைவிட எவருமே இருக்கமுடியாது. பொறுப்பின் சுமை,

தேசம் குறித்த கவலைகளால் அவருக்கு

முதுமை அதிகரித்துவருவதை

கவலையோடு பார்க்கிறேன்.

இந்தத் தேசத்தின் அடையாளம் –

மக்களின் தலைவன் – நாட்டின் பிரதமர் – பொதுமக்களின் கதாநாயகன் …..

நேருவின் இத்தகைய மகத்தான

சிறப்புகளெல்லாம் உன்னதமான பதிவுகளாகவும்,

சிறந்த சாதனைகளாகவும் திறந்த புத்தகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்போது, என் பாராட்டுக்கு

எந்தத் தேவையுமே இல்லை! ‘

என்றுதான் பட்டேல் வாழ்த்தினார் .

இத்தகையதுதான்

அவர்களுக்கிடையே நிலவிய உறவு.

பட்டேலின் பிள்ளைகளை நேருவும் காங்கிரஸும் கைவிட்டுவிட்டார்கள் என்றொரு அப்பட்டமான பொய்யை நாம் அடிக்கடி கேட்கிறோம் அல்லவா?

உண்மை என்ன?

தெரிந்துகொள்ளவது நல்லது.

பட்டேலின் மகள் மணிபென் படேலுக்கு

1951 பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் நேரு. குஜராத்தின் தெற்கு கைரா பகுதியில்

கேடா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 1957இல் அதே குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வென்றார் மணிபென்.

1962 தேர்தலில் அதே தொகுதியில் அவர் தோல்வியுற்றபோது, பட்டேலின் மகளை

1964ஆண்டு முதல் 1970 வரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தது

நேருவின் காங்கிரஸ்தான்.

1953 முதல் 1964வரை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் என்று அவரை கவுரவித்தது அந்தக் கட்சி.

பட்டேலின் மகன்

தஹ்யா பாய் பட்டேலின் கதை என்ன?

1939ஆண்டுமுதல் பதினெட்டு வருடங்கள் – பம்பாய்ப் பெருநகர மாநகராட்சி உறுப்பினராகவும், மும்பையின் மேயராகவும் (1954) இருந்தார் அவர் .

1957இல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு வழங்கினார் நேரு .

ஆனால், அக்காவின் பேச்சைக் கேட்டு

அந்த வாய்ப்பை நழுவவிட்டார் தஹ்யா பாய்.

இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய

ஒரு சங்கதி இருக்கிறது.

பட்டேலின் மகனுக்கும் மகளுக்கும்

காங்கிரஸ் கட்சியில் போட்டியிட

வாய்ப்புகள் வழங்கப்பட்டபோது,

அதைக் கடுமையாக எதிர்த்தவை

இரண்டே இயக்கங்கள்தாம்.

ஒன்று ஆர்எஸ்எஸ். அடுத்தது,

இன்றைக்கு பாரதிய ஜனதா என்ற பெயரில்

இயங்கும் அன்றைய ஜனசங்கம்.

அறியாதோர் வரலாறின் ஏடுகளைப் புரட்டலாம்.

நேரு பட்டேல் நட்பை எழுத இடம் போதாது .

புத்தகம் போடுமளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.

தான் இறப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு

பட்டேல் மக்களுக்குச் சொன்னார் :

“மகாத்மா நம்மிடம் இல்லை. அவர் தன்

பிரதிநிதியாக நேருஜியை அறிவித்துச்

சென்றிருக்கிறார்.

அதன்படி நடப்பது நமது கடமை!”

என் சித்திரம் இதுதான் :

நேரு மார்க்சியத்தின்மீது நம்பிக்கையுள்ளவர். சோசலிசத்தின் அடிப்படையில்

இந்தியா எனும் தேசம் கட்டப்படவேண்டுமென்று எப்போதும் வலியுறுத்தி வந்தவர்.

பட்டேலோ, அவற்றில் நம்பிக்கையில்லாதவர்.

வலதுசாரி எண்ணங்களுக்கு ஆட்பட்டவர்.

ஆனால், ஒரு புதிய தேசம் கட்டப்படவேண்டுமென்ற கடமை முன்னின்றபோது, தன் சிந்தனைகளின்

போக்கை மாற்றிக்கொண்டார். காந்தியால் முன்னிறுத்தப்பட்ட நேருவின் பின்னால்

தேசமே ஒன்றுதிரண்டு நின்றபோது, அவருக்குத்

தன் முழு ஆதரவை வழங்கவும் முற்பட்டார். ஊசலாட்டங்கள் இருந்தபோதிலும்,

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை உள்துறை அமைச்சரான பட்டேல் தடை செய்து அறிவித்ததும்,

அதன் மீதான தன் கண்டனத்தை வெளியிட்டதும் அதற்கான ஓர் உதாரணம்தான்.