தமிழ் மக்கள் யார் பக்கம்?

அமெரிக்கா என்பது, ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் இலகுவாக ஒன்றிணையும் புள்ளி ஆகும். அந்தப் புள்ளியில் இன்னமும், எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. யோகர் சுவாமிகளின் வழியில், ‘எந்தப் பொல்லாப்பும் இல்லை’ என்று இவர்கள், அமைதி காக்கிறார்கள்.

தமிழ் மக்கள், மேற்குலகை நம்பினால் தீர்வுகிடைக்கும் என்று, இன்றும் சொல்லப்படுகிறதுளூ அன்றும் சொல்லப்பட்டது. ஆனால், என்ன கிடைத்தது என்பதைத்தான், யாரும் சொல்லக் காணோம்.

இன்றைய நிலையில், தமிழர்களின் கண்மூடித்தனமானதும் பிற்போக்குத்தனமானதுமான மேற்குலக விசுவாசத்தின் வரலாற்றை நினைவுகூருவது தவிர்க்க இயலாதது.

பிரித்தானியக் கொலனியாட்சியைத் தொடர்ந்தும், தமிழர்களின் பிரித்தானிய எசமானிய விசுவாசம் குறையவில்லை. அதற்கு, இலங்கையில் பிரித்தானிய ஆட்சி போன பின்பே, தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று ஒரு வாதம் வைக்கப்படுவதுண்டு.

ஆனாலும், 1957ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்கா விமானத் தளங்களை, பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதைத் தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும், சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாக, கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீடு வரை, எதிலுமே பிரித்தானிய அரசு, தமிழருக்கு ஆதரவாக, எதையுமே செய்யவில்லை. ஆனால், தமிழரின் விசுவாசம் குறையவில்லை.

அமெரிக்கா-பிரித்தானிய-டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும், 1960இல் தேசிய மயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று, தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் சொன்னார். அந்த நன்றிக்காக, அமெரிக்கா ஏதாவது செய்ததா, இல்லை.

ஆனாலும், அத்தனை தமிழ் நாடாளுமன்றத் தலைமைகளும் இன்றுவரை அமெரிக்காவுக்கோ, ஏனைய மேற்குலக நாடுகளுக்கு எதிராகவோ வாய்திறந்ததில்லை.

அமெரிக்காவும் மேற்குலகும் யாருடைய நண்பர்கள் என்பது, 1977க்குப் பிறகு தெளிவாகி இருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து, மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும், பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாகவும் அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் வழி ஏற்பட்டதும், மீண்டும் மேற்குலகு பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன.

எனினும், கடந்த அரை நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும், இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு என்ற நமது கனவுகள், அடிப்படையின்றி விரிகின்றன. அதன் ஒருபகுதியே, இன்று கறுப்பின மக்களின் போராட்டங்கள் பற்றிய மௌனம்.

இதற்கிடையில், ‘அமெரிக்கக் கறுப்பர்கள் ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்தார்களா, நாமேன் குரல் கொடுக்க வேண்டும்’ என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு மற்றவர்கள் குரல் கொடுப்பது இருக்கட்டும்; ஈழத்தமிழர்கள் இதுவரை எந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்கள், யாருடைய பக்கம் நின்றிருக்கிறார்கள்?

ஈழத்தமிழர்களை இஸ்ரேலியர்களுடன் ஒப்பிடும் அபத்தமான போக்கு, இன்றும் இருக்கிறது. ஒடுக்கப்படுகின்ற பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்காத நாம,; ஒடுக்கும் இஸ்ரேலைப் போல, இருக்க விரும்புகிறோம். ஒடுக்கப்படும் காஷ்மீரியர்களுக்காகக் குரல்கொடுக்காமல், ஒடுக்குமுறையாளனான இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம். ஆனால், எல்லோரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இன்று கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஒலிக்கும் குரல், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரல்ளூ ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான குரல்.

இன்று உழைக்கும் மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் குரலாக, போராடுவோரின் குரலாக உலகெங்கும் குரல்கள் ஒலிக்கின்றன. அந்தக் குரல்களோடு, தமிழ் மக்களின் குரல்கள் இணைந்து ஒலிக்க வேண்டும். தமிழ் மக்கள் முடிவு செய்தாக வேண்டும். நாங்கள் யார் பக்கம்? அமெரிக்க அரசின் பக்கமா, அல்லது போராடும் அமெரிக்க மக்களின் பக்கமா?

விடுதலையென்பது, ஆன்மாவை விற்று, உடலை வாங்குவதல்ல.