தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)

நவரத்தினம் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளாளரும் கொஞ்சம் சாதிவெறியர்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.ஆனாலும் அயலில் உள்ளவர்கள் உண்மை நிலை தெரிந்ததால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.ஒவ்வொரு விசயத்திலும் நமது பகுதி கையே முந்துவதால் இரத்தினத்தை எப்படியாவது கொலை செய்ய தீர்மானித்தனர்.இதற்கு இப்போது வெள்ளாளர் ஒத்துழைப்பும் கிடைத்தது.

வெள்ளாளரின் ஒரு பகுதி நளவர்மீது ஆத்திரமாக இருந்தனர்.அது ஒரு கட்டுக்கதை விவகாரம்.எமது ஊரில் கந்தையா என்ற ஒருவர் இருந்தார்.எமது ஊரில் கொஞ்சம் தள்ளி வெள்ளாளர் வாழும் பகுதியில் இருந்து தோட்டமும் சீவல் தொழிலும் செய்து வந்தார்.இவர் ஒரு வெள்ளாளர் வீட்டில் சீவல் தொழில் செய்ய அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இவருக்கும் தொடர்பு என கதை கட்டி அந்தப் பெண்ணை வதை செய்தனர். உண்மையில் அது பொய்.கற்பனை.இவரகள் தொல்லை தாங்காத அந்தப் பெண் தன் ஒரே பெண் பிள்ளையுடன் கந்தையா வீட்டுக்கே வந்துவிட்டார் .உண்மையில் விரும்பி வரவில்லை .கோபத்தில் தன் உறவுகளை பழிவாங்கவே வந்தார்.அவரது வீடு மிகவும் தனிமையான காடும் வயலும் அண்டிய பகுதி.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

நேரம் கழித்து வெள்ளாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.தாயும் மகளும் அவர்களுடன் செல்ல விரும்பவில்லை.பலாத்காரமாக இழுக்க கந்தையா கத்தி எடுத்து அவர்களை விரட்டி விட்டார்.இது அவர்களுக்கு அவமானமாக கருதினர்.இது ஒரு தனி நபர் விவகாரம்.அந்தப் பெண்ணின் மகளை கந்தையா படிக்க வைத்து பல்கலைக் கழகம் அனுப்பினார்.( பின்னாட்களில் இவரும் கொல்லப்பட்டார்)

இவை எல்லாம் வெள்ளாளர் கோவியரகளோடு நெருங்க உதவியது.இதை அறிந்த முன்னாள் பொலிஸ் ஒருவர்(வெள்ளாளர்)இரத்தினத்தை எச்சரித்தார்.அப்போது இரத்தினம் சொன்னாராம் சொன்னதுக்கு நன்றி.முன்பு எனக்கு ஒரு சிலரே எதிரி.இப்போது எல்லோருமே எதிரி.என்னை விட மாட்டாங்கள்.ஒழிச்சு ஓடி சாவதைவிட ஓடாமல் நின்று சாவேன் என சொல்லி அவரை அனுப்பி வைத்தார்

இரத்தினத்துக்கு மிக நெருங்கிய நண்பர் கொடிகாம்ம் அய்யா. மற்றவர் பனியன்ராசன் என அழைக்கப்படும் இராசேந்திரம்.இவர் அப்போது யாழ்ப்பாணம் அநுராதபுரம் பஸ் டிரைவராக பணி புரிந்தார்.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்தி சபை தலைவர் நடராசாவின் தங்கையின் கணவர்.

நவரத்தினம் கொலை வழக்கு சில தவணை விசாரணைகள் முதலில் சாவகச்சேரி நீதி மன்றத்திலேயே நடந்தன.இவ் வழக்குக்கு நல்ல சாதகமானதாக தகவல்களை சத்தியேந்திராவுக்கு கொடுத்தவர் இளையதம்பி என்னும் சீவல் தொழிலாளி.இவர் இரத்தினத்தின் மாமனார்.

இந்த வழக்குக்கு சத்தியேந்திரா வந்தது தமிழரசுக் கட்சிக்கு பிடிக்கவில்லை .நவரத்தினத்தின் வாலான நடராசாவுக்கும் பிடிக்கவில்லை.இத்தனைக்கும. இரத்தினம் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் காலூன்றி இருக்க முடியாது.நவரத்தினம் கூட வெள்ளாளரகளால் இழிவு படுத்தப்பட்டவர்.அவரகளிலும் இரண்டு பிரிவு.என் காலத்தில் கூட பூவன்னா குறியை அழிக்க நினைக்கிறான் எளிய நாய் என பலர் இழிவாக பேச கேட்டிருக்கிறேன்.

(சாதிப் பெயர்களை பாவிக்க நண்பர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அவரகள் நியாயம் சரியானதே.தெளிவாக பிரச்சினைகளை விளங்கவே எழுதுகிறேன்.மன்னிக்கவும்.நான் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் அதில் நம்பிக்கை உடையவன்.வர்க்க ரீதியாகவே சிந்திக்க முயல்கிறேன்.இது நேர்மையான தகவல் சேகரிப்பு.சில விசயங்கள் விடுபடலாம். ஆனால் பொய்கள் இல்லை.)

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)