தீர்ப்புக்கு மூன்று வாய்ப்புகள்

(கே. சஞ்சயன்)

ஒக்டோபர் 26ஆம் திகதி – ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் – வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், சிக்கல்களாகவே மாறின. மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக, நியமித்ததன் மூலம், ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நெருக்கடி, அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முடக்குவதிலும் பின்னர், அதைக் கலைப்பதிலும் போய் முடிந்தது.

இந்தநிலையில் தான், நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களைச் சவாலுக்கு உட்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட 13 தரப்புகள் உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தன.

இவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம், நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடைவிதித்ததன் மூலம், ஜனாதிபதியின் ஆட்டத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது.

அதன்பின்னர், இந்த மனுக்களைப் பரிசீலனை செய்ய நாள் குறிக்கப்பட்டது. டிசெம்பர் 4, 5, 6ஆம் திகதிகளில் மனுக்களைப் பரிசீலனை செய்து, தீர்ப்பளிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், மூன்று நீதியரசர்கள் இந்த மனுக்களை விசாரிக்கக் கூடாது; உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களையும் கொண்ட குழாமே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மஹிந்த தரப்பும், ஜனாதிபதியும் சட்டமா அதிபர் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய, ஏழு நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் ஒன்றைத் தலைமை நீதியரசர் நளின் பெரேரா உருவாக்கினார். இந்தக் குழாம், கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் நேற்று வரை விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இன்று, இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பரவலாக உள்ளது. அதேவேளை, இன்று தீர்ப்பு வராது; எதிர்வரும் 10ஆம் திகதியே தீர்ப்பு அளிக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

எது எவ்வாறாயினும் இந்த வழக்கின் தீர்ப்பு, எப்போது என்பதை விட, எப்படி, யாருக்குச் சாதகமாக இருக்கப்போகிறது? என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

உயர்நீதிமன்றம் அளிக்கப் போகின்ற தீர்ப்பு, தனியே மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்தைத் தீர்மானிப்பதாக மாத்திரம் இருக்கப் போவதில்லை. மஹிந்த ராஜபக்‌ஷ – மைத்திரிபால சிறிசேன கூட்டின் இரகசியத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அங்கிகாரத்தையோ, அதற்குத் தடையையோ ஏற்படுத்துவதாக மாத்திரம் இருக்கப்போவதில்லை.

இலங்கையின் அரசமைப்பு எந்தளவுக்கு வலுவானது, அதைக் கையாளுவதில் எந்தளவு பக்குவமும் பொறுப்பும் இருக்க வேண்டும், ஒரு ஜனாதிபதி, அரசமைப்பை எந்தளவுக்குத் தன் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ள முடியும், அரசமைப்பை மீறிச் செயற்படுகின்ற போது, ஜனாதிபதி ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது செயற்படுவதற்கு நீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் உள்ள அதிகாரம் என்று பல்வேறு கேள்விகளுக்கான பதிலை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை வரை, எல்லோருமே 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் தான் சிந்தித்துக் கொண்டிருந்தனர். ஜனாதிபதி ஒருவர், அதை மீறிச் செயற்பட முடியாது; அளவுக்கதிகமாக நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றே எல்லோரும் கருதிக்கொண்டிருந்தனர். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால, தான் இப்படியெல்லாம் நடக்க க் கூடும், இதற்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற பாடத்தைக் கற்பித்துள்ளார்.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் அளிக்கப்போகும், தீர்ப்பு மூன்று விதமானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால ெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்படுவதற்கு முதல் வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசமைப்புக்கு உட்பட்டதுதான் என்ற தீர்ப்பை, அளிப்பதற்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.

இந்த இரண்டும் தவிர, இன்னொரு தீர்ப்பை அளிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அது ஜனாதிபதிக்குச் சாதகமான தீர்ப்பாகத் தான் இருக்கும்.

உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதே, சட்டமா அதிபர் ஒரு வாதத்தை முன் வைத்திருந்தார். “நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களைச் சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க, உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்பதே அவரது வாதம்.

ஆனாலும், மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம், அந்த வாதத்தைப் புறக்கணித்தே, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடைவிதித்ததுடன் அந்த மனுக்களை விசாரணைக்கும் ஏற்றுக் கொண்டிருந்தது.

எனினும், நேற்று முன் தினம் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போதும், சட்டமா அதிபர் அதேவாதத்தைத் திரும்பவும் வலியுறுத்தி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஏற்கெனவே வலுவிழந்த ஒரு வாதத்தை, சட்டமா அதிபர் திரும்பவும் வலியுறுத்தியமைக்குக் காரணம் இருக்கிறது. மூன்றாவது வகையான தீர்ப்பை, உயர்நீதிமன்றம் அளிப்பதற்கான திறவுகோலாகவே, அவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமாயின், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், தள்ளுபடி செய்யப்படக் கூடும். அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டால், அது மிகவும் ஆபத்தான ஒன்றாகவே இருக்கும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று அறிக்கப்படும் தீர்ப்பைவிட, ஜனாதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று அறிவிக்கப்படக் கூடிய தீர்ப்பு, இன்னும் கூடுதல் பாதகமானதாக இருக்கும்.

இன்னொருமுறை ஜனாதிபதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படக் கூடிய மனுக்கள், விசாரிக்கப்படாமலே நிராகரிக்கப்படுவதற்கு, அது காரணியாகி விடும். நிறைவேற்று அதிகாரத்தின் மீது, கேள்வி எழுப்பும் வாய்ப்பு இல்லாம் போய்விடும். அதனால்தான், இத்தகைய தீர்ப்புக்கான வாய்ப்புக் குறித்து அதிகம் கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேவேளை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வை தரும் என்று, எந்த வகையிலும் நம்பக்கூடிய சூழல் இருப்பதாகவும் கூறமுடியாது .

ஏனென்றால், இப்போது நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கு, தனியே சட்டரீதியான சந்தேகங்களும் கேள்விகளுமே அடிப்படையாக இருக்கிறது என்று தவறாக எடைபோடக் கூடாது.

அதிகார மோகம் ,தனிநபர் விருப்பு வெறுப்புகள் எல்லாமே தான் இதற்கு முக்கிய காரண‍ங்களாக இருக்கின்றன.

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவு, அரசமைப்புக்கு உட்பட்டது தான் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ரணிலை, ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற பிடிவாதத்தில், ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். அதேவேளை, ரணிலைத் தவிர வேறெவரையும் பிரதமராக நியமிக்குமாறு கோருவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐ.தே. மு இருக்கிறது.

இத்தகைய கட்டத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் போனால், அடுத்த பிரதமர் நியமனத்தில் நிச்சயமாகப் பெரும் குழப்பமும் இழுபறியும் நிலவுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன. இதனால் தான், தற்போதைய இழுபறி நிலைக்கு இந்தத் தீர்ப்பு, தீர்வைத் தரும் என்று தோன்றவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி இணங்கினாலும் கூட, இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் என்று ஒருபோதும் நம்பமுடியாது. அது குழப்பமான அரசியலையே உருவாக்கப் போகிறது.

அதேவேளை, நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு, சரியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தேர்தல் நடக்கும்; புதிய அரசாங்கம் அமையும். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று ஒரு போதும் எதிர்பார்த்து விட முடியாது.

ஏனென்றால், வரப்போகும் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எவ்வாறானதாக இருக்கும் என்று அனுமானிக்க முடியாது. ஒன்றரை மாத அரசியல் குழப்பங்கள் மக்களைப் பெரிதும் சினம் கொள்ளவும், வெறுப்படையவும் வைத்திருக்கின்றன. இந்த நிலைமை, மஹிந்த -மைத்திரி கூட்டுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், மீண்டும் ரணில் பெரும்பான்மை பலத்தை பெறக்கூடிய சூழல் உருவானால், ஜனாதிபதி மைத்திரிபால என்ன செய்வார், என்ற கேள்வியையும் ஒதுக்கித்தள்ள முடியாது.
எனவேதான், நாடாளுமன்றத் தேர்தல் தற்போதைய அரசியல் குழப்பத்துக்குத் தீர்வாக அமையும் என்ற வாதம் சரியானதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

இந்த இரண்டு வாய்ப்புகளுக்கும் அப்பால், உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமை மனுக்களைத் தள்ளுபடி செய்தாலும்கூட, தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு தீர்வைத் தருவதற்குப் பதிலாக, இன்னமும் நிலைமை மோசமடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதே தற்போதைய நிலைமை.