தோள் மீது கரம் போடும் தோழர் கதிரவேலு

திரும்பிய திசை எல்லாம் இலங்கை ஒலி/ஓளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரமுகர்கள், இலங்கை தூதுவராலய உதவிப் உயர்ஸ்தானிகர், இடதுசாரிக் கருத்தின் பால் ஈர்ப்புடைய அவர் வயது ஆட்கள்… இளம் தலைமுறையினர்… இடை வயதினர்.. மண்டபத்தை நிறைத்திருந்தனர்.

இத்தனைப் பேரா என்ற பிரமிப்பு சிலருக்கு எனக்கு அவ்வாறு இருக்கவில்லை. அவர் செய்த பணிகளால் இதனை எதிர்பாரத்திருந்தேன்.

கதிரை ஒன்றில் என்னுடன் அழைத்துச் சென்ற நண்பர் ஒருவருடன் அமைதியாக இருந்து கொண்டேன். இயல்பில் பொது சபையில் சற்று கூச்ச சுபாவம் உடையவன் என்பது குறையோ நிறையோ என்று அறியாத என் இயல்பால் அமைதியாக இருந்தேன்.

சற்று நேரத்தில் அவரின் மறைந்த மனைவியிற்கான 30 நாள் நிகழ்விற்கான சடங்குகள் அவரின் ஒரே மகளின் விருப்பப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பலரும் அம்மாவின் நினைவு உரையை ஆற்றத் தொடங்கினார்.

ஏற்கனவே ஒலி/ஒளிபரப்பு துறையில் கோலோச்சியவர்கள் தமது பல்வேறு அனுபவங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை இணைத்து அம்மாவிற்கான அஞ்சலி உரையை பேசினார் சீரிய செறிவான பேச்சுக்களால் வெளிப்படுத்தினர்.

ஒரு எனக்கு அருகில் பின்புறமாக வந்து ‘தோழர் நீங்களும் நினைவுப் பேருரை ஆற்ற வேண்டும்…’ என்ற வேண்டுகோள். அது வேறு யாரும் இல்லை கதிர்வேலு தோழர். நான் எதிர்பாராத அழைப்பு அது. இப்படியான அழைப்புக்களை மறுப்பது பிகு பண்ணுவது என் வழக்கம் அல்ல. ஏதோ ஒன்று எம்மிடம் இருப்பதினால் பேச அழைப்பதாக எனக்குள் உணருவேன்…. அவ்வளவே…?

என் பங்கிற்கு நான் பேச எழுந்தேன். எனக்கு முன்பு பேசிய ஊடக ஆளுமைகளுக்கு முன் நான் எம் மாத்திரம் என்று எனக்கு தெரிந்த அளவில் கதிர்வேலு தனது பொது வாழ்வை சிறப்பாக முழுமையாக தொடர்வதற்கு கடந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக அதுவும் இடதுசாரிக் கருத்தியலுடன் அதில் எந்த சமரசமும் இன்றி செயற்படுவதற்கும் இந்த அம்மாதான் காரணம். அந்த அம்மா இல்லாத தோரழர் கதிர்வேலு வாழ்வு இனிக் கடினமாக அமையலாம்…? நாம் அவருக்கு உறுதுணையாக இருப்போம்….. என்று பொருள்பட பேசி பேச்சை முடித்தேன்.

தனது தள்ளாத வயதிலும் ஓட்டமும் நடையுமாக என்னருகே வந்து சிறப்பாக பேசினீர்கள்…. இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசியிருக்கலாம் என்று வகையில் நிறைவாக இருந்தது உங்கள் பேச்சு தோழர் என்றார் கதிர்வேலர்.

எனது தந்தை வயதை ஒத்தவர் அவருடன் ஒப்பிடும் போது நாம் இளைஞர்கள். 30 வருடத்திற்கு முன்பு புலம் பெயர் தேசத்தில் அவருடன் பொது நிகழ்வு ஒன்றில் அறிமுகமானபோது எம்மை இளம் இடதுசாரிகளாக பாரம்பரிய இடதுசாரிப் இலங்கை பாரம்பரியத்தில் வந்தவர்கள் எம்மை ஏற்றுக் கொண்டு தம்மில் ஒருவாராக அணைத்து மதித்த நாம் சரியான திசைவழியில் பயணிக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தி எம்மை மேலும் செழுமைப்படுத்த உதவியவர்கள் இவர்களே.

ஈழத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக துரோகிகள் என்று ஒரு சாரரை எந்தவித முகாந்தரமும் இன்றி பழி சுமத்தப்பட்ட கூட்டத்தில் ஒருவனாக சமூக நீதி இனங்களுக்கிடையேயான சமத்துவம் சகோதரத்துவம் ஜனநாயகம் பன்முகப்படுத்தப்பட்ட தலமை ஐக்கியம் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தும் இடதுசாரிக் கோட்பாடு என்று விடாப்பிடியாக நின்ற எம்முடைன் கரம் கோர்த்தவர்கள் இந்த பாரம்பரிய இடதுசாரிகள்… பலம் சேர்த்தவர்கள் இவர்கள் வழி நடத்தினவர்கள் இவர்கள்.

பல் வேறு தொழிற்சங்கப் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி செயற்பாடுகள் என்று 1960 களிலிருந்து பல்வேறு முன்னிலை செயற்பாட்டாளர்களுடன் பல்வேறு இனங்களின் தலைவர்களுடனும் இணைந்து இலங்கையின் தலைநகரில் அதுவும் பொறியிலாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தவர்தான் கதிர்வேலு.

எல்லோரிடமும் வெளிபடையாக அன்பாக தான் கொண்ட கருத்தியலில் விடாப்பிடியாக செயற்பட்டதினால் பலருக்கு அறிமுகமானவர் எந்தக் கூட்டத்திலும் பேசுவதற்கான வாய்ப்பு அழிக்கப்படாவிட்டாலும் வாய்ப்பு அழித்தாலும் தனது தொழிற்சங்க போராட்ட அனுபவங்களை தானாக முன்வந்து பகிர்ந்து சிறந்த சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிக்க வரலாற்றுப் பல்கலைக் கழகம் அவர்.

‘ஒரு முதியவரின் மரணம் ஒரு நூலகத்தை எரித்து சாம்பல் ஆக்கியதற்கு சமன்” என்று கூறுவர். உண்மை என்பதை அவரின் மரணம் எனக்கு சொல்லி நின்றாலும்….?

அந்த சாம்பிலில் இருந்து எழும்பும் பீனிக்ஸ் பறவை போல் அவரின் கருத்துகக்ள் போராட்ட அனுபவங்கள் எம்முடன் தொடர்ந்தும் பயணிக்கும்…. அவ்வளவு வலிமையானவை… உறுதியானவை முற்போக்கானவை தோழர் கதிர்வேலு இன் போராட்ட அனுபவங்கள்… வரலாறுகள்….

தனது நடக்க முடியாத தள்ளாத வயதிலும் இங்கு நடைபெறும் முற்போக்காளர்களின் கூட்டங்களுக்கு எப்படியாவது கலந்து கொண்டு பார்வையாளராக அல்லாது கருதுரையாளராக தனது அனுபவங்களை எப்போதும் பகிரும் தோழர் கதிரவேலு தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார் என்பதை நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது.

எம்மைப் போன்ற ஏனைய பேச்சாளர்கள் கூட்டங்களில் பேசி முடித்த பின்பு எமது பேச்சுகளை பாராட்டி விமர்சித்து உற்சாகப்படுத்தும் ஆசானாக விரிவுரையாளராக பேராசியராக துள்ளலும்… அதுவும் முதுமையிலும் இளைஞனாக செயற்பட்ட கதிர்வேலருக்கு விடை கொடுத்து அனுப்புகின்றோம்.

சென்று வாருங்கள் தோழரே உங்கள் சிந்தனைகளை நாம் காவிச் செல்கின்றோம்….. எம் தோள் பற்றி தட்டிக் கொடுக்கும் எம் தோழர் எங்களுடன் வாழ்கின்றார் என்று எந்த பொது நிகழ்வுப் பேச்சுகளின் இறுதியிலும் உணரும் ஒரு கரம் அது தங்களுடையாத நாம் உணர்ந்து கொண்டே இருப்போம்… அந்த உற்சாகத்துடன் நாம் தொடர்ந்தும் பயணிப்போம் என்று விடை கொடுக்கின்றோம்.

Nov 22, 2021