‘பனாமா’வாலோ ‘பண்டோரா’வாலோ எதுவும் நடக்கப்போவதில்லை

உலகின் பல நாடுகளில், அரசியல்வாதிகள், அரச தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் போன்றோர் இலஞ்சம், தரகு போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் சம்பாதிக்கும் சட்ட விரோத பணத்தை, வேறு சில நாடுகளில், பல்வேறு நிறுவனங்களிலும் வங்கிகளிலும் பதுக்கி வைக்கின்றனர். அதன்மூலம், அந்தப் பணத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை, தமது சொந்த நாடுகளின் வருமான வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடிகிறது. அத்தோடு, அப்பணத்தைப் பதுக்கி வைக்கும் நாடுகளில், அவர்களிடம் இருந்து வரி ஏதும் அறவிடப்படாது, அப்பணத்தை வைப்பில் வைக்கவும் வசதி கிடைக்கிறது.

இவ்வாறு, சட்ட விரோதமாகப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்த நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் ஆகியோரின் விவரங்களையே, சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் ஒன்றியம் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக, ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள், ஒரு கோடியே 19 இலட்சம் ஆவணங்களை ஆராய்ந்துள்ளனர். அவை 2.9 டெரா பைட் கணினி கொள்ளளவு கொண்டவையாகும்.

இவற்றின் மூலம், பல நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்ற 35 அரச தலைவர்கள், 100க்கும் மேற்பட்ட வர்த்தகத்துறை பெரும் புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட செல்வாக்குள்ளவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டும் இந்த ஊடகவியலாளர் ஒன்றியம், ஒரு தொகை ஆவணங்களை ‘பனாமா பத்திரங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டது. அப்போது ஒரு கோடியே 15 இலட்சம் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் கணினி கொள்ளளவு 2.6 டெரா பைட்களாகும். எனவே, ‘பண்டோரா’ பத்திரங்களே, இதுவரை உலகில் வெளியிடப்பட்ட மிகப் பெரும் இரகசிய ஆவணங்கள் ஆகும்.

வெளிநாடுகளில் சொத்துப் பதுக்கல் தொடர்பாக, ‘பனாமா பத்திரங்கள்’ மூலம் ‘அவன்ட் காட்’ நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 65 இலங்கையர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். ஆனால், ‘பண்டோரா பத்திரங்கள்’ மூலம், இரண்டு இலங்கையர்களே இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபயவின் நெருங்கிய உறவினரும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் நீர்வளத்துறை பிரதி அமைச்சராக இருந்தவருமான நிரூபமா ராஜபக்‌ஷவும் அவரது கணவருமான திருக்குமார் நடேசனுமே அந்த இருவராவர்.

தமது விசாரணைகளின் போது, தாம் பெற்ற தகவல்களின் விவரங்களைத் தெரிவித்து, அது தொடர்பாக நிரூபமாவினதும் நடேசனினதும் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டு, சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் ஒன்றியம் அவ்விருவருக்கும் கடந்த மாதம் 13 ஆம் திகதி, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அந்தக் கடிதத்தின்படி, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ‘ரொசெட்டி’ என்ற வெளிநாட்டு நிறுவனம், இலங்கையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்ட வேறு பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதோடு, லண்டன், சிட்னி ஆகிய நகரங்களில் சொத்துகளை (வீடுகளை) விலைக்கு வாங்கியுள்ளது.

இந்தச் சொத்துகள், ‘ரொசெட்டி’ நிறுவனம் ஆகியவற்றின் உங்கள் உரிமம் தொடர்பாக, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, உரிய அரச அதிகாரிகளுக்கு அறிவித்தீர்களா என ஊடகவிலாளர் ஒன்றியம், நிரூபமாவிடம் கேட்டுள்ளது.

அதேவேளை, உங்கள் நிறுவனத்தின் ஆலோசனை சேவையைப் பெற்ற அரச நிறுவனங்களுக்கு, உங்கள் நிறுவனத்தின் உங்கள் உரிமம் தொடர்பாக அறிவித்தீர்களா என்பது, மற்றொரு கேள்வியாகும். ஏனெனில், ஆலோசனை நிறுவனங்களை நடத்துவது சட்ட விரோதமானதல்ல; ஆனால், சொத்து விவரங்களை வெளியிடாமை சட்ட விரோதமாகும்.

நடேசன் தம்பதிகளுக்குச் சொந்தமானதென ஊடகவியலாளர் ஒன்றியம் குறிப்பிடும் பசிபிக் டிரஸ்ட் நிறுவனத்திடம், 51 மில்லியன் டொலர் பெறுமதியான கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறும் ஊடகவியலாளர் ஒன்றியம், அந்தச் சொத்து விவரத்தை வெளியிட்டீர்களா என்பது, நிரூபமாவிடம் கேட்ட மற்றொரு கேள்வியாகும்.

நடேசனுக்கு வெளிநாடுகளில் ஸ்ரீ நிதி டிரஸ்ட், பசிபிக் டிரஸ்ட், பசுபிக் கொமொடிட்டீஸ், பல்லீன், சலன் ஒயில், ரெட் ரூத் இன்வெஸ்ட்மன்ட் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாகவும் அவற்றில் நிரூபமாவின் வகிபாகம் என்ன என்றும் கேட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு, நடேசன் குடும்பத்தின் சொத்துப் பெறுமதி 160 மில்லியன் டொலர் என்றும் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ நிதி, பசிபிக் டிரஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் மொத்த சொத்துப் பெறுமதி, 18 மில்லியன் டொலர் என்றும் கூறும் சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம், அச்சொத்துகளைச் சம்பாதித்த முறையை நடேசனிடம் கேட்டுள்ளது. ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனங்களை இலங்கையில் நிறுவாது, வெளிநாடுகளில் ஏன் நிறுவினீர்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

சுமிடொமோ கோர்ப்பரேஷன், ஜேர்மன் நிறுவனமான கொன்டிராக்ட் ஜீ.எம்.பீ.எச் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் என்ன என்றும் அந்நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பங்களைப் பெற்றுக் கொள்ள, ராஜபக்‌ஷ குடும்பத்துடனான உங்கள் உறவைப் பாவித்தீர்களா என்றும் நடேசனிடம் கேட்கப்பட்டுள்ளது.

ரொசெட்டி நிறுவனத்தின் மூலம், லண்டனிலும் சிட்னியிலும் 40 இலட்சம் டொலர் பெறுமதியான மாடி வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை சொந்தப் பெயரில் வாங்காது, ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கியது ஏன் என்பதும் லண்டன் சொத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தை பணமாக (in cash) ஏன் பெற்றீர்கள் என்பதும் கேட்கப்பட்டிருந்த கேள்விகளாகும்.

ராஜ் ரவி வர்மா, ஜோர்ஜ் கீட் ஆகிய உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் உள்ளிட்ட 40 இலட்சம் டொலர் பெறுமதியான 51 கலைப் பொருட்களை, சொந்தப் பெயரில் வாங்காது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் கொள்வனவு செய்ததற்கான காரணத்தையும் அவற்றை, ஜெனீவாவில் வரி அறவிடாத களஞ்சியசாலையொன்றில் வைத்ததற்கான காரணமும் கேட்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, மல்வானையில் பசில் ராஜபக்‌ஷவுக்காக காணியொன்றை விலைக்கு வாங்கியதைப் பற்றிய விவரங்கள் மற்றொரு கேள்வி மூலம் கேட்கப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், நடேசனின் ரொசெட்டி நிறுவனம், அவரது ரெட் ரூத் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனத்துக்கு 140,000 டொலர் கடன் வழங்கி இருப்பதாகவும் ரெட் ரூத் அதைத் திருப்பி நடேசனின் ஸ்ரீ நிதி நிறுவனத்துக்கு வழங்கியதாகவும் கூறும் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் என்ன என்றும், உங்களின் இந்த வருமானம் எங்கிருந்து கிடைத்தது என்றும் கேட்டுள்ளது.

இந்தக் கேள்விகள் மூலம், அவர்கள் ஊழல் என எதைக் கருதுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இப்போது ஜனாதிபதி கோட்டாபயவின் பரிந்துரைப்படி, இலஞ்ச ஆணைக்குழு இந்தத் தகவல்களைப் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆனால், கடந்த கால அனுபவங்களின் படி, எதுவும் நடக்கும் என்று கருத முடியாது. சிறிது காலத்தில், எல்லோரும் இதை மறந்துவிடுவார்கள்.

‘பனாமா பத்திரங்கள்’ வெளியான நாள்களில், குற்றஞ்சாட்டப்பட்ட 65 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என, அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். ஆனால், ஒன்றுமே நடைபெறவில்லை.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற எதுவும் பண்டோரா பத்திரங்களில் குறிப்பிடப்படவில்லை என ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அந்தக் காலத்திலேயே இவை நடைபெற்றுள்ளன என்பது, சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நடேசனுக்கும் நிரூபமாவுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் தெரிகிறது. இங்கு பிரச்சினை, ஊழல்கள் எந்தக் காலத்தில் இடம்பெற்றள்ளன என்பதல்ல; அவை, உண்மையிலேயே இடம்பெற்றுள்ளனவா, அவற்றைப் பற்றி முறைப்படி விசாரணை நடைபெறுமா என்பதேயாகும்.

இலங்கையில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில், அனேகமாக அவர்கள் குற்றவாளிகள் ஆவதில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடி மூலம், அரசாங்கம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை அடைந்தது. அதற்கு வழிவகுத்த அரசியல்வாதிகளுக்கு எதிராக, எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

யுக்ரெய்னிலிருந்து போர் விமானங்களைப் பெற்று, அதற்காக இல்லாத நிறுவனம் மூலம், இலங்கை அரசாங்கம் பணம் செலுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது; ஆனால் குற்றவாளிகள் இல்லை. வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ‘ராடா’ என்றதொரு நிறுவனத்தை அமைத்து, பணமும் வழங்கப்பட்டது. ஆனால், வீடுகள் கட்டப்படவுமில்லை; பணமும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை.

இலங்கையின் ‘நற்பெயரை’ வளர்ப்பதற்காக முன்னைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், இமாத் சுபெய்ரி’ என்ற ஒருவருக்கு 65 இலட்சம் டொலர் வழங்கியது. பின்னர், அவர் ஓர் ஊழல் பேர்வழி எனக் கூறி, அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை வழங்கியது. இங்கு அது தொடர்பாக விசாரணை இல்லை.

இதுபோன்ற நூற்றுக் கணக்கான பாரிய ஊழல் மோசடிகள், இலங்கையில் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்காக எவரும் தண்டிக்கப்படவில்லை. எனவே, பனாமா பத்திரங்களாலோ பண்டோரா பத்திரங்களினாலோ பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கையர்கள் அச்சப்படத் தேவை இல்லை.