மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது.

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப்பட்டது. அது தொடர்பிலான நியாயப்படுகள், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

அரசியல் விடுதலைக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் சமூகமாக தமிழ் மக்களுக்கு தமக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்கான கடப்பாடும், அவர்களின் கனவுகள் மீதான நியாயத்தன்மையை பொறுப்புணர்வோடும் கள யதார்த்தத்தோடும் கொண்டு சுமப்பதற்கான பொறுப்பும் உண்டு. அந்த வகையில் உள்முரண்பாடுகள் தாண்டி நியாயமான வெளியொன்றை நோக்கி நகர வேண்டிய அவசியம் அவசரமானது. அதுதான், அடுத்த தலைமுறையிடம் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை சரியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் உதவும். அது, எந்தவித ஏற்றத்தாழ்வும் புறக்கணிப்பும் இன்றியதாக இருக்க வேண்டும். அதன்போக்கிலேயே தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நாளொன்றின் தேவை முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ்த் தேசியப் போராட்டம் ஆரம்பித்தது முதல் “தியாகிகள்- துரோகிகள்” வரலாற்று உரையாடலும் ஆரம்பித்துவிட்டது. பல நேரங்களில் ஆதிக்கம் பெற்ற தரப்புக்கள் விதிப்பவையே இறுதித் தீர்ப்பாக மொழியப்பட்டு பலரும் தியாகிகளாகவும், துரோகிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆனால், கால மாற்றம் தியாகிகள் அடையாளத்தை விமர்சன ரீதியில் அணுகவும், துரோகிகள் தொடர்பிலான உரையாடலின் வீரியத்தை குறைக்கவும் செய்தது. அல்லது, நியாயமான உரையாடலுக்கான களம் அதனை உருவாக்கியது.

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கான பொது நாளொன்றை அடையாளம் கொள்வதற்கு முன்னர், தமிழ் மக்களின் பொது உளவியலில் சில முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். அதில் முக்கியமானது, உயிர்நீத்தவர்களின் அர்ப்பணிப்பு எதற்கானது என்பது தொடர்பிலானது. அந்தச் சிந்தையே அடிப்படையான முன்னேற்றமாக இருக்கும். அஹிம்சை வடிவத்திலிருந்து தமிழ்த் தேசியப் போராட்டக்களம் ஆயுத வடிவம் பெற்ற தருணத்தில் உள்வந்த அனைவரும் தனி ஈழத்தினையும், தமிழ் மக்களின் விடுதலையையுமே பிரதானமாகக் கொண்டார்கள். அதற்காகவே அவர்கள் உயிரையும் அர்ப்பணித்தார்கள். அதனை, மனதார ஏற்றுக் கொள்ளாமல் நினைவுகூருவதற்கான பொது நாள் பற்றிய உரையாடல் அடுத்த கட்டத்துக்கு செல்லவே முடியாது.

உதாரணமொன்று, 1984ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் புளோட் அமைப்பின் போராளிகள் சிலர், இலங்கை விமானப்படையின் தாக்குதலில் உயிரிழந்தார்கள். அதில், உயிரிழந்தவர்களில் ஒருவரான க.ஜெயராசாவின் நினைவுத்தூபியொன்று, யாழ்ப்பாணத்தில் அவரது சொந்தக் கிராமத்தில் குடும்பத்தினரால் 1991ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதில், எந்தவிதமான இயக்க அடையாளமும் இருக்கவில்லை. ஆனாலும், அப்போது அது அனுமதிக்கப்படவில்லை. அவரின் படத்தை நீக்குமாறும் கோரப்பட்டது. அதனை ஏற்க குடும்பத்தார் மறுத்த தருணத்தில், அது பலவந்தமாக நீக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற இராணுவத்துடனான மோதலில் இரு போராளிகள் உயிரிழந்தார்கள். அதில், ஒருவர் சுமன். இந்த சுமன், புளொட் அமைப்பிலிருந்து உயிரிழந்த ஜெயராசாவின் ஒரே மகன். சுமனின் சடலம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தத் தகப்பனையும் மகனையும் தமிழ் மக்கள் எப்படி நோக்குவார்கள். ஒருவரை தேவையற்ற அடையாளத்துக்குள்ளும், இன்னொருவரை மாவீரராகவும் கொள்வது நியாயமாகுமா? தந்தையும் மகனும் ஒரே விடயத்துக்காக தங்களுடைய உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்.

மாற்று இயக்கங்களை விடுதலைப் புலிகள் தடை செய்த 1980களின் இறுதியில், தமிழ் மக்களின் மனநிலை, ஒட்டுமொத்தமாக புலிகளின் இயங்கு நிலைக்கு ஏற்ப இசையத் தொடங்கியது. அதில் நியாயங்கள் தொடர்பிலான காரணங்களும் நிறைய உள்ளன. ஆனால், போராட்டக்களத்தில் அர்ப்பணித்தவர்களை நினைவு கூருவதற்கான வெளியை அடைவது தொடர்பில், பெரும் சிக்கல் அப்போதும் இருந்தது. அது, 1980களின் இறுதியில் தோற்றம் பெற்று 1990களில் மூர்க்கம் பெற்று வளர்ந்தது. அந்த நிலையில், உண்மையிலேயே தமிழ் இன விடுதலைக்கான போராட்டத்தினை வாழ்க்கையாக ஏற்று மடிந்தவர்களையும் மறக்கவும், பல நேரங்களில் நிராகரிக்கவும் வேண்டி வந்தது. அந்த சூழ்நிலையின், எச்சமான மனநிலை இன்னமும் நீடிக்கின்றது. ஜெயராசா இறக்கும் போது தன்னுடைய இறப்பின் மேல் துரோகி அடையாளம் விழும் என்று நினைத்திருக்க மாட்டார். இப்படி, நூற்றுக்கணக்கானோரின் அர்ப்பணிப்புக்களையும் நாம் அங்கிகரிக்க வேண்டிய கடமையோடு இருக்கின்றோம். சுமன் மாத்திரமல்ல, அவரது தந்தையும் தமிழ்த் தேசிய வீரராக அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், சிலரின் தவறும், தவறான வழிநடத்தலும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான அர்ப்பணிப்பையோ, அவர்களின் உயிர்கொடைகளையோ மறுதலிப்பதாக இருந்தால், அதனைச் சரி செய்து அடுத்த கட்டங்கள் நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பதும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதும் இன்றுள்ளவர்களின் பொறுப்பாகும். அது உண்மையில் சுலபமானது அல்ல. பல விடயங்களுக்காக மன்னிக்கவும் பல விடயங்களுக்காக மன்னிப்புக் கோரவும் வேண்டியிருக்கும். ஆனால், அதனைச் செய்வதும் அவசியமானது. அது கட்சி, இயக்க, அமைப்பு சார் இயங்கு நிலைகளுக்கு அப்பாலிருந்து அணுகப்பட வேண்டியது.

நினைவு கூருவதற்கான பொது நாளொன்றை வரையறுப்பது தொடர்பில் குறிப்பிட்டளவானவர்கள் உடன்படத்தான் செய்கின்றார்கள். ஆனால், அது என்ன நாள்? என்பதில் தான் சிக்கல் நீடிக்கின்றது. சிலர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஐ, தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலரோ, மாவீரர் நாளான நவம்பர் 27க்குள் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலரோ, இந்த உரையாடல்களை பெரும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நவம்பர் 27, என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கான நாள்.
இயக்கத்தின் மூத்த தளபதிகள் தொடக்கம் கடைநிலை போராளியாக இருந்து உயிர்நீத்தவர் வரை அனைவரும் பொதுவானவர்கள், ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாலானவர்கள் என்கிற அடையாளத்தோடு நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்கிற கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரின் நினைவு தினத்தை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தியதாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தன்னுடைய முதலாவது மாவீரர் தின உரையில் குறிப்பிடுகின்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஆற்றப்பட்ட அந்த உரையை இன்று திரும்பிப் பார்க்கின்ற போது, அதில் நிறைய குற்றங்களையும் குறைகளையும் காண முடியும்.

ஆனால், அது, போரியல் யுத்திகளை உள்வாங்கி வளர்ந்து கொண்டிருந்த இயக்கமொன்றின் தலைவராக, தன்னுடைய இயக்கத்தின் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கான தருணத்தில் ஆற்றப்பட்ட உரை. அந்த உரையின் பெரும் பகுதிகளிலிருந்து 2000க்குப் பின்னரான காலத்தில் தலைவரே மாறியிருந்தார். அவர், துரோகியாக விலக்கி வைத்த பலரையும் அரசியல் ரீதியாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கும் முயன்றார். அதனை சில விடயங்களில் நிகழ்த்தியும் காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதற்கான நிகழ்கால சாட்சிக் கூடம். அது, தெற்கில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் படுகொலைகளிலிருந்து ஆரம்பித்து முள்ளிவாய்க்காலுக்குள் வந்து நின்றது. அதன் தொடர்ச்சி பற்றிய அச்சுறுத்தல் இன்னமும் இருக்கின்றது. அது, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான நினைவுநாளாக கொள்ள வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும். மாறாக, அதனை, உயிரிழந்த போராளிகள் அனைவரையும் நினைவு கொள்வதற்கான நாளாக மாற்றுவது பொருத்தமானதல்ல.

நினைவுகூருவதற்கான பொதுநாள் பற்றிய உரையாடல்களில், தமிழ்த் தேசியப் போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் புலிகள் இயக்கப் போராளிகள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. ஆக, மாவீரர் நாளையே தமிழ்த் தேசிய வீரர்களை நினைவு கூருவதற்கான பொதுநாளாக கொள்வதுதான் சாத்தியமானது.
ஏனெனில், ஏற்கெனவே மக்கள் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஏனைய இயக்கங்கள், அமைப்புக்கள், கட்சிகளில் இருந்து உயிரிழந்தவர்களையும் மாவீரர் நாளுக்குள் உள்வாங்கிக் கொள்வது இலகுவானது. மாறாக, புதியதொரு நாளை நோக்கி நகர்வது மக்களிடமிருந்து அந்நியமாக செல்வதாக முடியும். அது, ஒப்புக்கு ஒரு நாளாக மாறும் வாய்ப்புண்டு. அதனை, வேறு தரப்புக்கள் சூழ்ச்சிகளைப் பின்னுவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும்.

இந்த இடத்தில், முதலாவது மாவீரர் தின உரையில் தலைவர் பிரபாகரன் “மாற்று இயக்கங்களை துரோகிகள்” என்று அழைத்தார் என்று கூறிக் கொண்டு வருபவர்கள், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னரான அவரின் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அவர் ஒரு காலத்தில் தடை செய்தவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கான கட்டத்தை அடைந்தார். அதனை கிட்டத்தட்ட நடத்தியும் காட்டியிருந்தார். அரசியலில் மாற்றங்கள் சாத்தியமானது. அத்தோடு, தலைவரும் உடன்பட்டிருந்தார். அப்படியான நிலையில், மாவீரர் நாளை, தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளாக கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். அது, எதிர்காலத்தில் சாத்தியப்படுத்தப்பட வேண்டும்.
(புருஜோத்தமன் தங்கமயில்)