‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது.

மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்டு தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்துவார்கள். தமிழில் இருக்கும் இவர்களின் முகப்புத்தகப் பதிவுகளைப் பார்த்து சர்வதேசம் இன அழிப்பு விசாரணை நடத்தும் என்பதில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. மறுபுறத்தில் இன அழிப்பா, இனப்படுகொலையா என்று தங்களுக்குள்ளேயே குடுமிப் பிடிச் சண்டையும் நடத்துவார்கள்.

அது ஏன் மே 18 என்பவர்கள் கார்த்திகை 26 என்கிறார்கள், பதிலாக வைகாசி 18 என்றோ, நவம்பர் 26 என்றோ சொல்வதில்லை என்று நீங்கள் முடியைப் பிய்க்கக் கூடும்.

காரணம் கார்த்திகைப் பூ!
நவம்பர் என்றால் கார்த்திகைப் பூ பற்றி பூரிக்க முடியாதே!
மே யில் இல்லாமல், கார்த்திகையில் வரும் தமிழ்ப் பற்றுக்கான காரணம் அது!

விசயம் தெரியாமல் இந்த நாட்களில் எவனாவது ஒரு நிகழ்ச்சியை நடத்தினால்… தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்.

கோயில் திருவிழா காலத்திற்கும் மாவீரர் திருவிழா காலத்திற்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. கோயில் திருவிழா காலத்தில் மரக்கறி உண்போர், திருவிழா முடிந்த மறுநாள் தான் ஆடு வெட்டிக் கொண்டாடுவார்கள். ஆனால் மாவீரர் மாதத்திற்கு முன்பாக, சுப்பர் சிங்கர் விருது கொடுக்காததற்காக திட்டித் தீர்த்த விஜய் டிவி விழாக்களுக்கும், இந்திய நட்சத்திரங்களின் களியாட்டங்களுக்கும் போய் பிரபலங்களுடன் போட்டோ எல்லாம் எடுத்து முதுகு வளைந்த பின்னால், கார்த்திகையில் இன உணர்வு பொத்துக் கொண்டு வந்து விடும். விரதத்தை ஆரம்பித்து விடுவார்கள்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முன்பு போல சனம் அள்ளுப்பட்டுப் போவதில்லை. அதிகாலை கோவில் திருவிழாவுக்குப் போனது போல, தேசியத் தலைவரின் மாவீரர் உரையைக் கேட்க அள்ளுப்பட்டது ஒரு காலம். இப்போது அந்தளவுக்கு இல்லை எனினும் இவர்களின் பிழைப்புக்கு மண் விழாத வகையில், றிசைக்கிள் பண்ணப்படும் பூவும் விளக்கும் வாங்கி காட்போட் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி தங்கள் வரலாற்றுக் கடமையையை நிறைவேற்றிய பூரிப்புடன் வர புலன் பெயர்ந்த ஒரு கூட்டம் இன்றும் உண்டு.

மாவீரர் மாதத்தில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்காமல் இருப்பதற்கும், கடைக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே, ‘இந்த வியாபார நிலையம் மாவீரர் தினத்தை ஒட்டி மூடப்படும்’ என்று நோட்டீஸ் ஒட்டி கடை பூட்ட வைப்பதற்கும் காரணம் இருக்கிறது. செலவிடும் பணத்தை, வேறு இடங்களில் செலவிடாமல், மாவீரர் களியாட்டத்தில் செலவிட வைத்து பணத்தைச் சுருட்டுவது மட்டும் தான். அதனால் தமிழ் வியாபாரிகளின் வியாபாரம் தொலைந்தால் அவர்களுக்கு என்ன? போய் மிரட்டினால் கடைக்காரர்கள் ஆயிரக்கணக்கில் அழுது தொலைப்பார்கள் தானே!

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கடைக்காரர்கள் விடுபட ஆரம்பித்து விட்டார்கள். கூத்தாடிகள் இரண்டு பட்டு விட்டால், ஊருக்குள் கொண்டாட்டம் தானே!

தற்போது மாவீரர் மாதம். அதே கூத்து ஆரம்பித்து விட்டது.

மிகவும் சுவாரஸ்யமான விடயம், இறந்த மாவீரர்களுக்கு நடத்தும் விழாவில், தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் அகவை விழாக் கொண்டாடுவது தான்.

இறந்து போன தலைவனுக்கு ஈமக் கிரியைகளோ, நினைவு அஞ்சலியோ நடத்த முடியாத கூட்டம் பிறந்த நாள் கொண்டாடுகிறது. வெள்ளைக் கொடி பிடித்துப் போய், உச்சந்தலைக் காயத்துடன் ஆடைகள் இன்றி இறந்த தலைவனை ‘வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்’ என்று கதை விட இவர்களால் மட்டுமே முடியும். காரணம் கேட்பதற்கு கேனயர்கள் இருப்பார்கள் என்ற தகர்க்க முடியாத நம்பிக்கை.

ஒரே ஒரு சந்தேகம், பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவார்களா, இல்லை, அவரது வயது எண்ணிக்கைப் பானைகளில் பொங்குவார்களா என்பது தான். (தவறினாலும், கொத்து ரொட்டியும் மட்டன் ரோலும் விற்றே பணம் சம்பாதிக்கக் கூடிய விண்ணர்கள் இவர்கள்!)

நம்பிப் போய் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்களின் இழப்பின் துயரத்தை விட, அவர்களைக் கைவிட்டு தன் உயிரைக் காப்பாற்ற வெள்ளைக் கொடி தூக்கிய ஒருவரின் பிறந்த நாள் இவர்களுக்கு முக்கியமானதாக, கொண்டாடப்பட வேண்டியதாக இருக்கிறது.

இன்றைக்கும் புலிகளால் கொல்லப்பட்ட தலைவர்களான பத்மநாபாவுக்கும், சிறி சபாரத்தினத்திற்கும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த ஆளிருக்கும் போது, சூரிய தேவனுக்குத் தான் அஞ்சலி செலுத்த ஆளில்லை. ஆனால், பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்ட ஆளுக்குக் குறைச்சலில்லை.

அடுத்த மிகவும் சுவாரஸ்யமான விடயம், இன்றைக்கு புலிகளுக்கு முகப்புத்தகத்தில் முண்டு கொடுத்து போராட்டம் நடத்தும் மாவீரர்களில் பலர் பொய்யான பெயர்களில் துள்ளிக் குதிப்பது தான். இதுவரை காலமும் மற்ற இயக்கத்தவர்கள் தான் புலிகளுக்குப் பயந்து தங்களை அடையாளம் காட்டுவதில்லை. இப்போது இவர்கள் யாருக்குப் பயந்து தங்கள் உண்மையான பெயர்களை மறைத்து மாற்றுப் பெயர்களில் வீரசாகசம் செய்ய முனைகிறார்கள் என்பது புரியவில்லை.

புலன் பெயர்ந்த நாடுகளில் புலனாய்வார்கள் ஊடுருவலால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொல்ல வருகிறார்களோ?

அப்படியென்றால், சமீபத்தில் இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு?

புலன் பெயர்ந்தவர்களுக்கு மாவீரர் மாத விசேட தள்ளுபடியாக இலங்கை அரசு தடை செய்யப்பட்ட தனியார்களையும் அமைப்புகளையும் தடை நீக்கியிருக்கிறது. இதற்கு ‘அடிச்சுக் கொண்டு சாவுங்கடா’ என்பது தான் நோக்கம் போலிருக்கிறது.

எதிர்பார்த்தபடியே, தடை நீக்கப்பட்டவர்கள் இலங்கை அரசின் கையாட்கள் என்றும் நீக்கப்படாதவர்கள் உண்மையான தமிழுணர்வாளர்கள் என்றும் ஆளாளுக்கு வியாக்கியானம் சொல்லக் கிளம்பியிருக்கிறார்கள். தடையை நீக்கி தங்களை துரோகி ஆக்கி விட்டார்களே என்று ஒரு கூட்டம் தலையைச் சொறிய, தங்களுக்குத் தடை விதித்து ஹீரோ ஆக்க மாட்டார்களா என்று இன்னொரு கூட்டம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி எண்ணம் முகப்புத்தக மாவீரர்களுக்கு இருந்தால்… உண்மைப் பெயரில் முகப்புத்தகத்தில் போராட்டம் நடத்தினால் சில நேரம் இலங்கை அரசு உங்களுக்கும் தடை விதிக்கலாம். அப்படியான அறிவுக் கொழுந்துகள் தான் அங்கே இருக்கின்றன.

கார்த்திகைப் பூக்கள் மாகாண சபையை மட்டுமல்ல, இங்கே முகப்புத்தகத்தையும் அலங்கரிக்கின்றன. இது போதாதென்று பிரான்ஸ் கொடியை வடியிட்ட பாணியில் தங்கள் படங்களில் போட்ட இரண்டு பேரை இது வரை முகப்புத்தகத்தில் காண முடிந்தது. கண்ட இரண்டு பேருமே வியாபாரிகள். ‘நாங்களும் உங்களோட தான்’ என்று வியாபாரத்துக்கு பங்கம் விளைவிக்காத பச்சோந்திக் கொடி என்பதை விட, தமிழ் மக்களின் விடுதலை என்பதோ, நல்வாழ்வு என்பதோ காட்டுகின்ற அந்த ‘சீனில்’ இல்லை. பிறகென்ன? இதைப் பார்த்த மற்ற மந்தைகள் தாங்களும் கார்த்திகைப் பூவுடன் சீன் காட்டும்.

பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாம். செல்வம் அடைக்கலநாதன் அஞ்சலி செய்தாராம். அவர் தான் அஞ்சலி செலுத்திய மாவீரர்களால், உயிரோடு எரியும் டயர்களுக்குள் வீசி எறியப்பட்ட தனது இயக்கத்தின் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வழமையான சிறிதரன் முதல் பலரும் முண்டியடித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கட்டப்பொம்மனின் தூக்குமேடை வசனம் பேசி, அஞ்சலியும் செலுத்தி செத்தவீட்டு இணையத் தளத்தில் படத்தைப் போடவும் துடித்துக் கொண்டிருப்பார்கள். விக்னேஸ்வரன் முதல் கஜேந்திரகுமார் வரைக்கும் விதிவிலக்கில்லை. தங்களுடைய அஞ்சலிகள் ஊடகங்களிலும் முகப்புத்தகத்திலும் வருவதை தவறாமல் உறுதி செய்து கொள்வார்கள்.

மறக்காமல் மதில் சுவர்களில் இரகசியமாய் நோட்டீஸ் ஒட்டி, அதை தமிழ் விண்ணர்கள் தங்கள் இணையத் தளங்களில் போட்டு, ‘விடுதலைப் புலிகள் வீழ்வதில்லை’ என்று சவால் விடுப்பார்கள்.

சிங்கள அரசும் இவர்களின் தாளத்திற்கு ஆட்கள் கூட, அஞ்சலி செலுத்த, கொடியேற்ற, விளக்கு ஏற்ற தடை என்று பொலிஸ் பாதுகாப்பு, இத்யாதிகளுடன் ஆட்டம் போடும்.

புலிகளின் நிழலில் குளிர் காய முண்டியடிக்கும் இவர்கள் எல்லாம் தங்களுடைய செயற்பாடுகள் எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதைச் சொல்ல மாட்டார்கள். இவ்வாறாகத் தானே தங்களைத் தாங்களே குஷிப்படுத்தி, சுய இன்பம் காண்பதைத் தவிர, புலிகளோ, அழிந்து போன அவர்களை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வால்களோ அன்று முதல் இன்று வரை, தமிழ் மக்களின் விடுதலைக்காக எதையும் செய்ததில்லை. மாறாக அவர்களை பாழுங் குழிக்குள் தள்ளிச் சென்றது தான் மிச்சம்.

சிங்கள, இந்திய இராணுவங்களால் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல, கிணற்றில் விழுந்தும், மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தும், நோய் வாய்ப்பட்டும் வீரச்சாவடைந்தவர்களும் மட்டுமே மாவீரர்கள், தங்கள் உயிரைத் தியாகம் செய்து மாற்று இயக்கங்களில் சேர்ந்த ஒரே குற்றத்திற்காக புலிகளாலேயே கொல்லப்பட்டவர்கள் துரோகிகள் என்று, தியாகத்திலும் சாதி பார்க்கும் ஈனத் தனம் இவர்களை விட்டு இன்றைக்கும் போனதில்லை.

தங்கள் உயிரைத் தியாகம் செய்து போராடப் போனவர்கள் தலைவரால் கை விடப்பட்டு, எதிரியிடம் அகப்பட்டு, இன்றைக்கு வாழ வழியில்லாமல் அவலப்படுகிறார்கள். தங்களின் வெளிநாட்டுச் சொகுசு வாழ்க்கைக்கு காரணமான அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு எதையும் செய்யாமல், அதைச் செய்யும் கே.பி போன்றவர்களைத் துரோகிகள் என்று இன்றும் கூச்சலிடும் இவர்கள், இறந்து போனவர்களுக்கு பணத்தைச் செலவிட்டு அஞ்சலி செலுத்துவதும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும்…
வெள்ளைக் கொடி வேந்தனுக்கு அகவை கொண்டாடுவதுமான கேலிக்கூத்து…

தமிழினத்தைத் தவிர வேறெந்த இனத்தில் நடக்கும்?

(தாயகம்)