மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?

இதற்குள் உள்ளடங்கியிருக்கும் விடயம் பாஜக வின் இந்துவத்துவா கொள்கை மேலோங்க வைக்கும் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது. இந்த போக்கிற்கான மறுப்பாக இந்த எதிர்பலைப் போராட்டங்கள் அமைந்துள்ளன. இந்த சட்ட மூலம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள வாதங்களையும் முன்வைத்திருக்கின்றது. இச் சட்ட மூலம் தொடர்ந்தால் இந்தியாவிற்குள் வாழும் இஸ்லாமியர் எதிர்காலத்தில் இந்திய மக்களாக தொடருவதில் பெரிய அச்சுறுத்தல்களை எதிர் நோக்க வேண்டி வரலாம் என்ற வாதங்களும் எழும்பாமல் இல்லை. இதற்கான நியாயமான பயங்கள் இஸ்லாமியர் மட்டத்தில் மட்டும் அல்லாது நாம் இந்தியர் என்று வாழும் சமான்ய இந்தியனிடம் ஏற்பட்டிருக்கின்றது.

இதன் தொடர்சியாக இது ஏனைய சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும். இந்தியா ஒரு இந்துவத்துவா நாடு என்று மாற்றப்பட்டு இந்தியாவின் பன்முகத் தன்மை இல்லாமல் போகும் நிலமை ஏற்பட வாய்புகள் உருவாகலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு தனது பல் தேசிய நாடு என்ற விடயத்தை கேள்விக் குறியாக்கும் என்ற இந்திய மக்களின் நியாயமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மோடி அரசின் ஆட்சிக் கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட அண்மைய அரசியல் நிகழ்வுகள் இவற்றின் மீது; மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புகள் கோபங்களின் திரட்சியாக தற்போதைய போராட்டம் உருவாக்கியிருக்கின்றது என்ற நியாயங்களை தன்னகத்தே கொண்டதும் ஆகும். பெரிய தாள்களின் மதிப்பிழப்பு, ஜிஎஸ்ரி வரி விதிப்பு, காஷ்மீருக்கான 370 திருத்தச்சட்டம், அரச திறைச் சேரியில் சேமிப்பில் இருந்த பலகோடி பணத்தை எடுத்து பெரும் முதலாளிகளுக்கு வழங்கி பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயற்சித்தது என்று பல விடயங்களில் இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாஜக அரசின் மீதான ஒவ்வாமை வெளிப்பாடுகளின் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்ள் ஆகும்.

இந்திய பொருளாதாரம் என்றும் இல்லாத வகையில் சரிவைக் கண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்திய மத்திய மோடி அரசோ இந்த பொருளாதார சரியலை உலகப் பொருளாதார மந்தத்தின் ஒரு அங்கம் என்று காரணத்தை கூறி மக்களை திசை திருப்ப 370 என்று காஷ்மீரிகளின் விசேட அந்தஸ்தை குறைத்தது, பாமர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் இந்தியாவில் இருக்கும் புகலிக்காரர்களில் இஸ்லாமியருக்கு குடியுரிமை மற்றயவர்களைப் போல் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறி திசை திருப்ப முயலுகின்றது.

இந்த இந்துத்துவாவை தனக்கு ஆதரவாக எடுத்து திசை திருப்ப முயலும் செயற்பாடுகளுக்கு இந்திய மக்கள் தமது மதங்கள், இனங்கள் அடையாளங்களை மீறி காட்டிவரும் எதிர்ப்பும் போராட்டமும் மோடி அரசை ஆட்டம் காணவைத்துள்ளது. பாஜக விற்கு ஜனநாயகத் தேர்தலில் கிடைத்த ஆமோக வெற்றியை சட்டமூலம் சட்டம் இயற்றி தன்னை தக்கவைப்பதற்கு இந்திய அரசிற்கு அனுகூலமாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதற்கு எதிர்கட்சிகளும் பிராந்திய கட்சிகளும் மக்களுடன் இணைந்து காட்டிவரும் போராட்ட எதிர்பலை இந்தியாவில் மீண்டும் ஜனநாயக பன்முகத் தன்மை ஏற்படுத்துமா என்பதை இனி வரு காலங்கள் வரலாற்றில் பதிவு செய்யும்.

உலக அரங்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபருக்கான தூக்குத் தண்டனை தீர்ப்பும் அமெரிக்க ஜனாதிபதியிற்கு நீதித்த்துறையில் இருந்து கிடைத்திருக்கும் பதவி விலக வேண்டும் என்ற தீர்ப்புகளும் இனிவரும் காலத்தில் மோடியிற்கும் அமிர்ஷாவிற்கும் பொருந்தலாம் என்று பேசும் அளவிற்கு நிலமைகள் மோசமாக்கியுள்ளன.
ஐநா மனித உரிமை சபையில் இந்தியாவின் அண்மைய குடியுரிமைச் சட்டத்திருத்தம் மனித உரிமை மீறல் என்ற வகையிற்குள் அடங்கும் என்று பேசும் அளவிற்கு இன்று உலக பொதுவிடயமாக மாறியுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியுரிமை மறுப்பும் இதற்கு அவர்கள் கூறும் காரணங்களும் ஏற்புடையனவாக இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கை தமிழர் தமது தாயக்தில் தமது குடிசன பரம்பலை அதிகரிக்க மீள் குடியேற்றம் உதவிகரமாக இருக்கும் என்றாலும் புதிய குடியுரிமைச் சட்டத்தில் மோடி அரசின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வெறுக்கும் வெறுப்பு அரசியலையே இலங்கை தமிழருக்கான குடியுரிமை மறுத்தல் என்பதில் பலராலும் உணரப்படும் விடயமாக இருக்கின்றது. இலங்கையில் கௌரவமாக ஏனைய பேரின சமூகத்துடன் இணைந்து வாழ்தலை தம்மால் உறுதி செய்யப்படும் என்ற வாக்குறதிகளில் எவ்வளவு செயற்பாட்டுடைய யதார்தங்கள் இருக்கின்றன என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை என்பதெல்லாம் சாத்தியமா என்பதுவும் இங்கு தமிழக அரசியல்தான்.

இந்திய மோடி அரசு தனது நலன்களை இலங்கை மத்தி அரசுடனா அல்லது தமிழர்களின் நலன்களுடனா பொருத்திப் பார்க்க விரும்பும் என்றால் அது இலங்கை அரசுடன் என்பதற்கான சாத்தியப் பாடுகளே அதிகம். தமிழ் நாட்டு அரசியல் சக்திகள் இலங்கை தமிழர்களின் நலன்களில் தமது அரசியல் நலன்களை மேவி செயற்படுவார்களா என்பதுவும் இங்கு கேள்விகளாக எம் முன்னிலையில் இருக்கின்றன. 2009 மே இற்கு முன்பும், அதற்கு பின்னரான 10 வருடங்களிலும் இலங்கை தமிழருக்கு இந்திய அகதி முகாங்களிலும், இலங்கையிலும் கிடைத்த அனுபவங்கள் அவ்வாறானதே.