யாழ். சந்திப்புகளும் புதிய தமிழ்ப் பேரவையும்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரமும் கூடிய அரசியல் பிரமுகர்கள் சிலர், ‘தமிழ்த் தேசிய பேரவை’ என்கிற பெயரில், தமிழ்த் தேசிய கட்சிகள், அமைப்புகள் அடங்கிய புதிய கூட்டை அமைப்பது தொடர்பில், ஆராய்ந்து முடிவெடுத்திருக்கிறார்கள்.ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் என்று சொல்லப்படும் சி.வீ.கே.சிவஞானமும் இணைந்து, ஊடகங்களிடம் இந்த விடயத்தை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய பேரவை என்கிற பெயரை, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தேர்தல் கால பரப்புரைக்காகப் பயன்படுத்தியிருந்தது. 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ் மக்கள் பேரவையை முன்னிறுத்தி, தேர்தல்க் கூட்டு சாத்தியப்பட்டிருக்காத சூழ்நிலையில், பேரவையின் பெயரைக் காங்கிரஸோடு இணைத்துக் கையாளும் உத்தியை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிறுத்தியிருந்தார். அதன்போக்கில்தான், அப்போது தமிழ்த் தேசிய பேரவை என்கிற ‘லேபிளோடு’ தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அதன் பின்னரான நாள்களில், அந்த ‘லேபிளை’ அவர்கள் பெரிதாகக் கையிலெடுக்கவில்லை.

இப்படியான நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், தமிழ்த் தேசிய பேரவை என்கிற பெயரை, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடக உரையாடல்களில் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கினார்.அதுவும், தாயகம், புலம்பெயர் தேசங்கள், தமிழ்த் தேசிய ஆதரவுத் தளங்களை உள்ளடக்கிய பரந்துபட்ட அமைப்பை, ‘தமிழ்த் தேசிய பேரவை’ எனும் பெயரின் கீழ் ஒருங்கிணைப்பது பற்றி, அவர் பேசினார்.

அதன்கீழ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்களையெல்லாம் உள்ளடக்குவது பற்றியும் குறிப்பிட்டார். ஆனால், ஜஸ்மின் சூகா, தமிழ்த் தேசிய பேரவை பற்றித் தான் அறிந்திருக்கவில்லை என்று அறிவித்திருந்தார். அத்தோடு, அந்த உரையாடல், ஒரு சில மாதங்களாக அமுங்கிப் போயிருந்தது. ஆனால், அது கடந்த வாரம் மீண்டும் எழுந்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சி, கிட்டத்தட்ட சுமந்திரன் அணி- மாவை அணியென்று பிரிந்து கிடக்கின்றது. தேர்தலில் வென்றவர்கள் பெரும்பாலும் சுமந்திரன் அணியிலும், தோற்றவர்கள் பெரும்பாலும் மாவை அணியிலும் இருக்கிறார்கள். இந்த இரண்டு அணியிலும், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட அடுத்த கட்டத் தேர்தல்களை நோக்கிய எதிர்பார்ப்போடு இருக்கின்றவர்களும் பிரிந்து நிற்கின்றார்கள். இவர்கள் தற்போது, கட்சியின் கட்டுப்பாட்டை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதற்கான ‘தகிடு தித்தங்கள்’, ‘படங்காட்டுதல்கள்’ தொடங்கி, நாள்தோறும் அரங்கேற்றுகை நிகழ்ந்து வருகின்றது.

தேர்தலை முன்னிறுத்திய அரசியலில், பதவி என்பது பெரியதோர் அடையாளம். பதவி இல்லையென்றால், அவர்களைப் பெரிதாக ஊடகங்கள் சீண்டாது.அப்படியான நிலையில், ஊடகங்களில் தொடர்ச்சியாக வர நினைக்கின்றவர்கள், தங்களை மக்களிடம் ஒரு தலைவராகப் பேண நினைக்கிறவர்கள் எல்லோரும், ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பார்கள். அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளால், சமூகத்துக்குப் பெரும்பாலும் எந்தப் பயனும் இருப்பதில்லை. மாறாக, தங்களின் பதவிகளை நோக்கிய ஓட்டத்துக்கான பிரசார உத்தியாக, அவற்றை அவர்கள் செய்ய நினைக்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளும் சிவில் அமைப்புகளும், குறைந்தது 50 தடவைகளாவது கூடிப் பேசியிருக்கும். அரசியலமைப்பு யோசனைகளை முன்வைப்பது, ஜெனீவாவைக் கையாள்வது என்று தொடங்கி, பல்வேறு தலைப்புகளில் சந்தித்துப் பேசி, குழுக்களை அமைத்துக் கலைந்திருக்கிறார்கள்.

அமைக்கப்பட்ட குழுக்கள் ஒவ்வொன்றும், அவற்றின் கடமைகளை ஆற்றியிருந்தால், சிலவேளை ஏதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கும். ஆனால், இந்தச் சந்திப்புகளில் பெரும்பாலானவை, ஊடக வெளிச்சம் வேண்டி, ஏட்டிக்குப் போட்டியாக நடத்தப்பட்டவை. அங்கு பேசப்பட்டவை தொடர்பில், பேசியவர்களுக்கும் குழு அமைத்தவர்களுக்கும் குழுவில் இருந்தவர்களுக்கும்கூட தெளிவில்லை.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள், இராஜதந்திர சந்திப்புகள் என்று, தங்களைப் பரபரப்பாக வைத்துக்கொள்ள விடயங்கள் உண்டு. ஆனால், தேர்தலில் தோற்றவர்களுக்கு பரபரப்பாக வைத்துக்கொள்வதற்கான விடயங்கள் பெரும்பாலும் குறைவு. அதனால், எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டிய உந்துதல் ஏற்படுகின்றது.

அதாவது, பரபரப்பாக 60, 65 வயது வரையில் வேலைபார்த்துவிட்டு, திடீரென ஒருநாள் ஒய்வுபெற்றுச் செல்லும் ஒருவர், அடுத்த நாள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார். அவர், ஓய்வுக்குப் பின்னரான தன்னுடைய ஒழுங்கைக் கண்டடைவதற்குச் சில காலம் ஆகும். இதன்போது தன்னைப் போன்றவர்களை தேடும் படலம் ஆரம்பிக்கும். ஓய்வூதியர்கள் ஒருங்கிணைவர்.

தங்களுக்கான நேர அட்டவணையைத் தயாரிப்பார்கள். சந்திப்புகளை நடத்துவார்கள். அந்தச் சந்திப்புகள் கோவில்கள், சனசமூக நிலையங்கள், தேநீர் கடை வீதிகள் என்று தொடங்கி, பல்வேறு இடங்களாக இருக்கும். அங்கு, எல்லாவற்றையும் அலசுவார்கள்; ஆராய்வார்கள். ஆனால், அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.

கிட்டத்தட்ட அப்படியான சந்திப்புகள் போலவே, இந்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளின் சந்திப்புகளும் அடிக்கடி நிகழ்கின்றன. பல நேரங்களில் ஓய்வூதியர்களை மையப்படுத்திய, யாழ்ப்பாணத்து சிவில் சமூக அமைப்புகளின் நிலையும் அப்படியானவைதான்.

தமிழ்த் தேசிய பேரவை என்கிற அமைப்பை ஆரம்பிக்கும் அறிவிப்பு, கடந்த வாரம் வெளியானதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவையிடம் கேள்வியெழுப்பி இருக்கிறார். கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் இணைந்து, புதிய அமைப்புகளை உருவாக்குவது தொடர்பில், கட்சியிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறதா, இவ்வாறான நிகழ்ச்சி நிரலின் பின்னணி என்ன? என்றெல்லாம் கேட்டவுடன் மாவை, தனக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் சம்பந்தமில்லை என்று சமாளித்திருக்கிறார்.

புதிய பேரவை அமைப்பது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடும் கூட்டத்தில், மாவை கலந்து கொண்டிருக்கவில்லை. அப்போது, அவர் கொழும்பில் இருந்தார். ஆனால், அவரின் அணியிலுள்ள சிவஞானம், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் என்கிற அடையாளத்தோடு, முக்கிய பங்காற்றினார். விடயம் சற்றுச் சிக்கலானதும், பேரவையில் இணைவது தொடர்பில், தமிழரசுக் கட்சி மத்திய குழுவிடம் அனுமதி கோரும் கடிதமொன்றை எழுத வைத்திருக்கிறார். விடயம் இந்த அளவில் இப்போது நிற்கிறது.

பலமான அணிகளை உடைப்பது, பலவீனமான பல புதிய கூட்டுகளை உருவாக்குவது உள்ளிட்ட பலவேலைகளில் எதிரி ஈடுபடுவது இயல்பு. அதுபோல, தன்னுடைய வார்த்தைகளுக்கு இணங்காத தரப்புகளைப் பலவீனப்படுத்தும் வகையிலான திட்டங்களை, பிராந்திய வல்லரசுகள் தொடங்கி, வெளிநாடுகளும் செய்வதுண்டு. அனைத்துத் தரப்புகளும் தமக்கு இணக்கமானவர்களையே தேடுகின்றன.

இப்படியான கட்டத்தில், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பலம், அச்சுறுத்தலாகும் அனைத்துத் தருணத்திலும் பிரிந்தாளும் தந்திரம், பொது எதிரியாலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளிட்ட இராஜதந்திர கட்டமைப்புகளாலும் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தப் பிரித்தாளும் தந்திரத்துக்காக அரசியல்வாதிகள், சமூகப் பிரநிதிதிகள், ஊடகவியலாளர்கள் தொடங்கி, பல்வேறு தரப்பினருடனும் அவை சந்திப்பை நடத்துகின்றன. அவற்றில் வெளிப்படையான சந்திப்புகள் ஒருசில என்றால், இரகசியமான சந்திப்புகள் பல நூற்றுக்கணக்கானவை.

இவ்வாறான சந்திப்புகளில், தமிழ் மக்களின் நலன் என்ற அடிப்படையில் விடயங்கள் மேலோட்டமாக அணுகப்பட்டாலும், அதன் உண்மையான பின்னணி, அந்தந்த நாடுகளின் தேவைகளைப் பொறுத்ததாக இருக்கும். இந்தச் சந்திப்புகள் எப்படி ஆரம்பிக்கும், அங்கு எவை ஊசியாக ஏற்றப்படும், எப்படி முடியும் என்பது, சந்திப்புகளில் பங்கெடுத்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறான சந்திப்புகளை முழுமையாக உள்வாங்கி, அதற்கு ஏற்றாற்போல் செயற்படும் நபர்கள்தான், அதிக தருணங்களில் குட்டையைக் குழப்புகிறார்கள்.

அவ்வாறான ஒரு கட்டத்தில் நின்றுதான், தமிழ்த் தேசிய பேரவையின் பின்னணியையும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், பேரவை உருவாக்கத்தின் பின்னணியில், தமிழ் மக்களை இன்னும் பலவீனப்படுத்தும் உத்தியும் பதவியிழந்த அரசியல்வாதிகள் மீண்டும் பதவியை அடையும் வழி என்கிற இரண்டு விடயங்களைத் தவிர, வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.