வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 11.

அங்கீகரிப்பதும் ஏற்றுக் கொள்வதும் சமமாக நடந்து கொள்வதும் சம நீதியை வழங்குவதும் மிகச் சாதாரண – எளிய விசயங்கள். சக மனிதர் மீதான நேசிப்பிற்கான எளிய அடிப்படைகள். இதைச் செய்வதற்கே முடியாமலிருப்பது ஏன்ஏனிந்த அறிவீனம்எந்த விசம் இப்படி வேறாக்கி வைத்துள்ளது உம்மை? 

11

வடபகுதியின் பொருளாதாரம் மூன்று பிரதான அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று விவசாயம். யாழ்ப்பாணத்தில் சிறுபயிர்ச்செய்கையான தோட்டங்களிலிருந்து இது உருவாகிறது என்றால் வன்னியில் நெற்செய்கையான வயல்களின் மூலம் நிகழ்ந்தது. இரண்டுக்கும் பிரதானமாக நிலம் வேண்டும். நிலமுள்ளோரே செய்கையாளர்கள். அதாவது உற்பத்தியாளர்கள். ஏனையோர் கூலிகள். இந்த உற்பத்திக்கான தொழிலாளர்கள். இதில் தொழிலாளர்களாக – கூலிகளாகவே வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் இருந்தனர். நிலம் இல்லாத காரணத்தினால் கூலியாக இருக்க வேண்டிய நிலை. அப்படி அத்து மீறிக் காட்டை வெட்டி சிறிய அளவிலான நிலத்தை எடுத்துக் கொண்டாலும் பயிர்ச்செய்கைக்கான நீரில்லை. குறிப்பாகப் பாசன நீர் கிடையாது. அது ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்திற்கே வழங்கப்பட்டது. அதற்கே அது சாத்தியமும் கூட. 

எனவே விவசாய உற்பத்திப் பொருளாதாரத்தில் இந்த மக்களுக்கு இடமிருக்கவில்லை. இவர்கள் கூலிகளாகவே இருந்தனர். 

அடுத்தது, கடற்தொழில் சார்ந்த பொருளாதாரம். இதிலும் இவர்களுக்கு இடமில்லை. காரணம் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில்தான் கடற்கரை உண்டு. இந்தக் கடற்கரைகளில் பாரம்பரியமாகத் தொழில் செய்து வந்த மீன்பிடிச் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். புதியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சில இடங்களில் கரை வலை இழுக்கின்ற கூலிகளாக இந்த மக்கள் பயன்படுத்தப்பட்டனர். அவ்வளவுதான். மிகப் பிந்தித்தான் கல்லாறு, ஆனையிறவு போன்ற இடங்களில் உள்ள பரவைக் கடலில் இவர்கள் தொழில் செய்தனர். இந்தத் தொழில் நாளாந்த வாழ்க்கைப் பாடுகளுக்கான வருவாயைத் தருமே தவிர, பெரிய பொருளாதார அடிப்படைகளைக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் இந்த மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். அது குளங்களில். வன்னேரிக்குளம், வவுனிக்குளம், தென்னியன் குளம், பல்லவராயன்  கட்டுக்குளம், முத்தையன் கட்டுக் குளம், விசுவமடுக்குளம், தவசி குளம், வவுனியாக் குளம், இரணைமடுக்குளம், கல்மடுக்குளம், கட்டுக்கரைக்குளம், முறிப்புக்குளம், மூன்று முறிப்புக்குளம் என வன்னியிலுள்ள குளங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் தங்களுடைய உணவுக்காகவே இந்த மீன்பிடியைச் செய்தனர். இது 1960, 70, 80களில். அப்பொழுது பிற சமூகங்களைச் சேர்ந்தோர் குளத்து மீனைச் சாப்பிடுவது குறைவு. பின்னர் மெல்ல மெல்ல இந்த மீன்பிடி ஒரு தொழிலாக விருத்தியடைந்தது. தென்பகுதிக்கு இந்தக் குளத்து மீன் ஏற்றுமதியும் கருவாட்டு வினியோகமும் நடக்கத் தொடங்கியதால், இது நன்னீர் மீன்பிடியாக வளர்ந்தது. ஆனாலும் இதற்கு ஒரு எல்லை உண்டு. இது கடல் இல்லை. குளம் என்ற காரணத்தினால் வரையறுக்கப்பட்ட அளவில்தான் உற்பத்தி கிடைக்கும். அதற்கேற்ற அளவில்தான் தொழிலும் நடக்கும். இந்தத் தொழிலில் இப்பொழுது வன்னி முழுவதிலும் ஏறக்குறைய 1500 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

ஆனாலும் மீன்பிடிப் பொருளாதாரத்திலும் இவர்கள் செல்வாக்குள்ள தரப்பினர் இல்லை. 

மூன்றாவது பனை தென்னை வளப் பொருளாதாரம். இதற்கு இரண்டு அடிப்படைகள் வேண்டும். ஒன்று தென்னைகளைப் பயிரிடுவதற்கான பெரும் நிலப்பரப்பு –தென்னந்தோட்டங்கள் அல்லது தென்னந்தோப்புகளை உருவாக்குவதற்கு. அப்படியென்றால்தான் தென்னையின் மூலமான பொருளாதார உற்பத்தியில் ஈடுபடலாம். இதற்கான காணிகள் இவர்களுக்கில்லை. இதைப்போலவே பனந்தோப்புகளைக் கொண்ட காணிகளும் இவர்களுக்கிருக்கவில்லை. எனவே இந்த இரண்டிலும் இவர்களுக்கு இடமில்லை. இதில் இன்னொரு இடமுண்டு. அது பனை தென்னை வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்பத்திகள். குறிப்பாக கள் இறக்குதல், பதனீர் உருவாக்கம், பனம்பொருள் உற்பத்திகள் போன்றவை. இதில் ஈடுபடுவதற்கான தொழிற் தேர்ச்சி இவர்களுக்கிருக்கவில்லை. ஒரு தொகுதியினர் இந்தத் தொழிலைப் பழகிச் செய்தாலும் இவர்களால் இந்தத் தொழிலை வன்னியில் செய்து வந்த சமூகத்தினருடன் போட்டி போட முடியவில்லை. இந்த உற்பத்திகளுக்கான கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இவர்கள் இரண்டாம் மூன்றாம் நிலையிலேயே இருந்தனர். மரபுவழிச்சமூகத்தினரே அங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்தினர். ஆகவே இங்கும் இவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. 

ஆக மொத்தத்தில் மூன்று பிரதான பொருளாதார நிலையிலும் உற்பத்திகளிலும் இந்த மக்களுக்கு இடமிருக்காத காரணத்தினால் இவர்களுடைய சமூக வளர்ச்சி என்பது மட்டுப்பட்டதாகவே இருந்தது. விவசாயக் கூலிகளாக இருந்தவர்களில் ஒரு தொகுதியினர் பின்னர் மெல்ல மெல்ல வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். கிணறு தோண்டுவது, காடுகளில் விறகு வெட்டுவது, மரம் அரிவது,உணவுக்கடைகளில் சமையல் செய்வது. ஏனைய கடைகளில் சிப்பந்திகளாக வேலை செய்வது, கால்நடைகளைப் பராமரிப்பது, வளவு வேலைகள், மேசன்,தச்சு வேலைகள், தையல், சிறுவாணிபம்– குறிப்பாக நடமாடும் வர்த்தகம்  என இது பல வகையில் விரிந்தது. இதற்கு இரண்டு தலைமுறைக் காலம் தேவைப்பட்டது. இரண்டாவது தலைமுறைதான் படிப்பிலும் ஈடுபடக் கூடியதாக இருந்தது. மெல்ல மெல்ல குத்தகைக்கு நிலங்களை எடுத்துப் பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் முடிந்தது. ஆனாலும் சவால்கள் குறையவில்லை. சமூக ரீதியான ஓரங்கட்டுதல்கள், புறக்கணித்தல்கள், நெருக்கடிகள் என இது தொடர்ந்தது. இப்போது கூட இந்த நிலை நீடிக்கிறது என்றால் அப்பொழுது இது எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். 

இதை எதிர்த்து நிற்கக் கூடிய பொருளாதார வலுவோ சமூகப் பொருளாதார அடையாளமே இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் கூடக் குரலற்றோரோகவே இருந்தனர். சமூகப் பொருளாதார வளர்ச்சியில்லை என்றால் அந்தச் சமூகம் பல விதமான சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும். எப்போதும் ஒரு சீரற்ற – சமநிலையற்ற தாழ்நிலையிலேயே இருக்க நேரிடும். ஆயுதப்போராட்டமும் இயக்கங்களும் செல்வாக்குப் பெறும் வரையில் இந்த மக்களின் சமூகநிலை சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. இயங்கங்களின் வருகை இந்த மக்களுடைய இருப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. பொருளாதார நிலையிலும் அதற்கான நிலம், கடல் வளத்தைப் பகிர்வது போன்ற அடிப்படைகளிலும் மாற்றங்களோ வளர்ச்சியோ ஏற்படவில்லை என்றாலும் சமூக நிலையில் இவர்கள் நிமிரக் கூடிய ஏது நிலைகள் தோன்றின. 

விடுதலை இயக்கங்களுடைய செயற்பாடுகளைப் பற்றி இன்று பலவிதமான விமர்சனங்கள் உண்டு. அனைத்து இயக்கங்களும் இந்த விமர்சனத்திற்குள் அடங்கும். ஆனால் அவற்றினால் பல நல்ல விசயங்கள் தமிழ்ப்பரப்பில் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கு ஆதரவாக இந்த இயக்கங்கள் இருந்ததாகும். முக்கியமாக இந்த மக்களில் காணியற்றிருந்த குடும்பங்களுக்கு காணிகள் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியமை. அதாவது நிலம் வழங்கியமையாகும். இது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பொருளாதார நிலையிலும் கல்வியிலும் இவர்கள் முன்னகரக் கூடியதாக இருந்தது. இது சமூகப் பண்பாட்டு நிலையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம் எனலாம். அதாவது இந்த நிலத்தில், இந்தப் பிரதேசத்தில் நாம் வாழமுடியும். எமக்கொரு வாழ்க்கையை இங்கே உருவாக்க முடியும். அது இங்கே உண்டென்ற தன்னம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியது. இது ஆயிரம் மடங்கு பலத்துக்குச் சமம். 

நிலமில்லை என்றால் எந்த மனிதராலும் எங்குமே வேர் விட முடியாது. தாமரை இலைத்தண்ணீரைப் போல எதிலும் நிலைகொள்ள முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். எனவேதான் நிலம் முக்கியமான –அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. 

வடக்கில் நிலமற்ற மக்களாக ஒரு காலம் பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் –தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர். நிலம் இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் நிலமுள்ளோரிடம் கூலிக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. அல்லது அவர்களுடைய நிலத்தில் குத்ததைக்கோ வரிக்கோ தொழில் செய்யும் நிலை இருந்தது. அதாவது அவர்களுடைய நிலத்தில் வேலை செய்யும் ஆட்களாக இருக்க நேர்ந்தது. 

ஏறக்குறைய  இதே நிலைதான் மலையக மக்களுக்கும் வன்னியில் நேர்ந்தது. ஒரு சாரார் அத்துமீறி அக்கம் பக்கத்திலிருந்த அரச நிலத்தில் காடுகளை வெட்டி நிலத்தை எடுத்துக் கொண்டனர். இன்னொரு சாராருக்கு குறைந்தளவு நிலம் குடியிருப்புக்கென அரச நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது. இது பயிர்ச்செய்கைக்குரியதல்ல. குடியிருப்புக்கு மட்டுமானது. இதில் தண்ணீரைப் பெறுவது மிகக் கடினம். தண்ணியில்லாக்காட்டைக் காட்டினால் எப்படி அங்கே தண்ணீரைப் பெற முடியும்? உதாரணம் ஜெயபுரம்,செல்வாநகர், மலையாளபுரம்,பொன்னகர், முறிகண்டி செல்வபுரம் போன்ற குடியேற்றங்கள். மற்றொரு பிரிவினர் பெரிய அளவில் செய்கை பண்ணப்படும் வயல்களில் வேலைக்கும் வயற்காவலுக்குமாக குடியமர்த்தப்பட்டனர். ஆனால் இவர்களுக்குக் காணியில் உரித்துக் கிடையாது. அங்கே குடியிருக்கலாம். நிரந்தர வீட்டை அமைக்க முடியாது. மலையகத்தில் தோட்டங்களில் லயங்களில் இருந்ததைப்போல. இங்கே லயத்துக்குப் பதிலாகக் குடிசை. இதில் வேலைக்காக குடியிருக்கலாமே தவிர அந்தக் குடியிருப்பை உரிமை கோர முடியாது. இதற்கு உதாரணமாக கிளிநொச்சியில் “இராமநாதன் கமம்” என்ற ஆயிரம் ஏக்கர் காணியில் அங்கங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள். இதைப்போல “பசுபதி கமம்” என்ற காணியிலும். இதை விடச் சிறிய பெரிய கமங்களில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 

இப்படியாக இருந்த நிலையில்தான் நிலமற்றிருந்த குடும்பங்களுக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையை தாம் எடுத்துக் கொண்ட அரசியல் அதிகாரத்தின் மூலமாக இயக்கங்கள் செயற்படுத்தின. ஆனால் இதை அவை சட்டபூர்வமாகச் செயற்படுத்த முடியாதல்லவா. அதாவது இப்படி நிலம் கிடைத்தாலும் அதற்குரிய ஆவணங்கள் – உரிமப்பத்திரங்கள் கிடைக்கவில்லை.  இருந்தாலும் அது வரையிலும் எதுவுமே இல்லை என்றிருந்த இந்த மக்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்தது. 

இதை இயக்கங்கள் இரண்டு மூன்று வகையாகச் செயற்படுத்தின. ஒன்று,மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் பெருமளவு நிலத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டு அதை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோரின் காணிகளை அல்லது அந்தக் காணிகளை விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றோரின் காணிகளை எடுத்து அவற்றில் இந்த மக்களைக் குடியேற்றியமை. 

இப்படியான நிலங்களில் கிளிநொச்சி,முல்லைத்தீவு அடங்கலாக 2500 குடும்பங்களுக்கு மேலானோர் குடியேற்றப்பட்டனர். உழவனூர், புன்னை நீராவி, பரந்தன் சிவபுரம் போன்றவை இதற்கு உதாரணம். அடுத்தது அரச காணிகளில் குடியிருப்புகளை உருவாக்கியமை. குறிப்பாகத் தங்களுடைய இயக்கங்களில் சாவடைந்த போராளிகளின் நினைவின் பேரால் இந்தக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. முன்னரே குறிப்பிட்டதைப்போல வவுனியாவில் புளொட்டும் ரெலோவும் இதைச் செய்தன. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் போன்றன இதைச் செய்தன. பின்னாளில் இந்த வகையான குடியிருப்புகள் பலவற்றை புலிகள் உருவாக்கினார்கள். அதிலொன்றே கேப்பாப்பிலவாகும். 

இன்னொரு வகையான குடியேற்றம், தனியாரின் உறுதிக் காணிகளில் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்தக் காணிகள் நீண்டகாலமாகவே பராமரிப்பின்றி இருந்தால், அவற்றின் உரிமையாளர்கள் இங்கேநாட்டில் இல்லை என்றால் அந்தக் காணிகளில் இந்த மக்களைக் கொண்டு போய் குடியேற்றினார்கள். காணி உரித்தாளர்கள் வரும்பொழுது அவர்களைத் தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற துணிவின் அடிப்படையில் இது நடந்தது. இதற்கு உதாரணமாக இயக்கச்சியில் பனிக்கையடி, முல்லைத்தீவு –புதுக்குடியிருப்பில் எனப் பலவுண்டு. 

இயக்கங்கள் இப்படிச் செய்வதற்கு வாய்த்தது, வடக்கிலே அரச நிர்வாகம் ஸ்தம்பித்திருந்தமையாகும். இதனால் இதைச் செய்யக் கூடியதாக இருந்தது. என்றாலும் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. இந்த மக்களுக்குக் காணி கிடைத்தாலும் பலருக்கும் அதற்கான ஆவணங்களை – பத்திரங்களை – உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது கூட இவர்களில் ஒரு தொகுதியினர் உரிய ஆவணமில்லாமல் சிரமப்படுகின்றனர். ஆனால் தொண்ணூறு விழுக்காட்டினருக்கு சிரமங்கள், காலதாமதங்கள், இழுத்தடிப்புகளின் மத்தியில் ஒருவாறு இப்பொழுது ஆவணங்கள் – பத்திரங்கள் கிடைத்து விட்டன. இதற்கான போராட்டம் கொஞ்சமல்ல. இருந்தும் இன்று இவர்கள் வெற்றியடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். 

தனியார் காணிகளில் இருந்தோருக்கு ஆவணங்கள் இல்லவே இல்லை. அவை உறுதிக் காணிகள் என்பதால் அவற்றை எவராலும் வழங்க முடியாது. வேண்டுமானால் காணிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமே வழங்க முடியும். அதற்கு எத்தனைபேர் தயார்? 

ஆனாலும் அப்படியான அதிசயங்கள் நடந்துமிருக்கிறது. 

சில இடங்களில் மத்தியவகுப்புத்திட்டத்தில் தமக்குக் கிடைத்த காணிகளை இந்த மக்களுக்கு ஒரு சிலர் வழங்கியிருக்கிறார்கள். அதைப்போல தமது சொந்தக் காணிகளில் குடியிருந்தோருக்கான காணிகளை தனியாரிற் சிலர் வழங்கியுள்ளனர். அதில் ஒரு குடும்பத்தினர் மானிப்பாயைச் சேர்ந்த மேதர் குடும்பத்தினர். இவர்கள் இயக்கச்சியில் 15 ஏக்கர் நிலத்தை சுமார் 50 குடும்பங்ளுக்கு நன்கொடையாக வழங்கினர். இதற்கான ஏற்பாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் செய்திருந்தார். இன்று இந்தக் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றனர். கல்வி, பொருளாதாரம், வீடு எனப் பல வகைியலும் மிக முன்னேறிய குடியிருப்புகளில் ஒன்றாகப் பனிக்கையடி இன்றுள்ளது. இதைப்போல கிளிநொச்சியில் பசுபதி கமத்தைச் சொல்ல வேண்டும். முன்னாள் சட்டமா அதிபரான சிவா பசுபதி குடும்பத்தினர் இங்கிருந்த 50 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் காணியில் ஒரு பகுதியை இனாமாக வழங்கியுள்ளனர். இங்கே இந்த மக்கள் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர். நீண்டகாலமாக இந்தக் காணியில் தாங்கள் குடியிருந்து வருவதால் தமக்கு குடியிருப்பதற்கான நிலத்தை தர வேண்டும் என. இதைப் புரிந்துணர்ந்து கொண்ட சிவா பசுபதி குடும்பத்தினர் இவர்களுக்கான காணிகளை வழங்கினர். இதற்கு இணைந்து வேலை செய்தவர் காவேரிக் கலாமன்றத்தின் இயக்குநரான வண. பிதா யோசுவா. 

ஆனால் இவை அரிதான நடைமுறைகள். 

எப்படியோ நிலமொன்று கிடைத்து விட்டால் அங்கே ஒரு நிரந்தரத் தன்மை குடியேறி விடும். ஊரோடித் தன்மை இல்லாமற் போய் விடும். இந்த நிரந்தரத்தன்மையே எதையும் செய்யவும் திட்டமிடவும் கூடியதாக இருக்கும். மனதிலும் தாம் இங்கே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதால் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இதெல்லாம் ஒரு சமூக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்கான அடித்தளங்களாகும். 

(தொடரும்)