வரலாற்றில் நாயகன் தோழர் பத்மநாபா

(சாகரன்)

வரலாற்றை மக்களே தீர்மானிக்கின்றனர். அதுவும் சமூகமாக இணைந்து செயற்பட்டே இதனை சாதித்து முடிகின்றனர். ஆனால் இந்த வரலாற்று உருவாக்கத்தில் சில மனிதர்களின் பங்கு மகத்தானதாக அமைகின்றது என்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில் மகாத்மா காந்தி மாக்ஸ் ஏங்கல்ஸ லெனின் கோசிமின் மாவோ பிடல் காஸ்ரோ சேய் அம்பேத்கார் பெரியார் என்று பட்டியலை நீட்டிக் கொண்டு போகும் அளவிற்கு நாம் வாழும் காலத்திலும் இதற்கு முன்பு பல வரலாற்று நாயகர்கள் வாழ்ந்தனர். இவர்களில் யாரும் தான் மட்டுமே இந்த வரலாற்றை உருவாக்கியவன் என்று கூறவில்லை. இந்த பட்டியலுக்குள் தோழர் பத்மநாபாவையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இதனைத் தொடர்ந்த இலங்கை முழுவதற்குமாக வர்க்கப் புரட்சி உலகத்து ஒடுகப்பட்ட மக்களுக்கான விடுதலை என்று ஒரு சர்வதேசவாதியாக தன்னை போராட்ட வாழ்வில் இணைத்தவர்தான் தோழர் பத்மநாபா. பிரபாகரன் போல் தானே இந்த வரலாற்றை தீர்மானிக்கப் போகின்றேன் அல்லது இந்த வெற்றியை தானே செய்து முடித்தேன் என்று தனிநபர் வாதமாக எப்போதும் செயற்பட்டவர் அல்ல பத்மநாபா.

போராளியாக இருப்பது வரலாறு எமக்கு இட்ட கடமை மாறாக அது ஒரு கொடையாக போகப் பொருளாக எமக்கு கிடைத்த அதிகாரமாக கருதியவர் அல்ல பத்மநாபா. பன்முகப்படுத்தபட்ட தலமை, கருத்துக்களை உள்வாங்கி அதனைச் செழுமைப்படுத்தி மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் மக்கள் வாழும் மண்ணை நேசித்தவர். மாறாக மண் மீட்கும் நில உரிமை சிந்தனையில் செயற்பாட்டில் இருந்தவர் அல்ல மாறாக மக்களின் வாழ்வியலை நேசித்தவர்.

வரலாற்று மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி போராட்ட வடிவங்களை தனக்குள் உள்வாங்கி முன்னோக்கி மக்களுக்கான விடுதலையை உறுதி செய்ய முற்பட்டவர். தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இவர் எப்போதும் நிறுத்தியவர் அல்ல. இவரின் பாசறையில் வளர்ந்த இன்றும் உயிர்வாழும் பல தோழர்களிடம் நாம் இதனைக் காணமுடியும்.

எளிமை, மனித நேயம், சமரசம் அற்ற மக்கள் நேசிப்பு, ஐக்கியத்தை எப்போதும் தூக்கி பிடித்த செயற்பாடு, எதிரி யார?; நண்பர் யார்? என்பதில் சரியான பார்வை, சகோதர யுத்தத்தை தொடர்ந்தும் தவிர்த்து வந்தவர், சர்வதேச மட்டத்தில் நட்புசக்திகளை ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக அதிகம் சம்பாதித்தவர் என்று எமது மக்களுக்கான விடியலை அடைய பல்வேறு பரிமாணங்களில் போராடிய போராளி.

இன்று எம்முடன் வாழ்ந்திருந்தால் முள்ளிவாய்கால் அவலங்களும் தவிர்கப்பட்டிருக்கும் எமக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் பலராலும் நம்பப்பட்ட பிரபாகரனும் இன்னமும் வாழ்ந்திருக்கக் கூடிய சூழலை உருவாகக் கூடிய வரலாற்றுப் போக்கை தீர்மானிப்பதில் அதிக ஆதிக்கம் செலுத்தியிருப்பார் என்பதை அவருடன் பயணித்த பலருக்கும் தெரிந்த விடயம்.

இப்படியான உன்னத தோழரின், போராளியின், மனிதனின் நினைவலைகளை நெஞ்சில் சுமப்போம். இன்று அவரின் 68 பிறந்த தினம். மனித நேயத்தினால் உணவும் வழங்கி, கல்வியும் வழங்கி, இருப்பிடமும் வழங்கி நம்பிக் துரோகத்தினால் பாசிச வாதிகளினால் கொல்லப்பட்ட ஜுன் மாதம் 19 ஐ தியாகிகள் தினமாகவும் அவரின் பிறந்த தினமான நவம்பர் 19 ஐ தோழமை தினமாகவும் பலரும் தொடர்ந்தும் அனுஷ்ட்டிப்பதன் வரலாற்று உண்மைகளை நாம் அவர் நம்பும் மனித் நேயத்தை முன்னிறுத்தி நினைவு கூர்வோம்.