13வது திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழருக்கு ஏற்பட்ட அநீதியை இந்தியாவுக்கு விளக்க வேண்டும்

தமிழ்பேசும் கட்சிகளாக இந்தக் கடிதம் தொடர்பில் தொடக்கம் நிகழ்ந்தாலும் இறுதியில் வடகிழுக்கு தமிழர் தரப்பு மாத்திரமே இந்தக் கடித்ததில் கையொப்பம் இட்டு இந்தியாவுக்கு வழங்கியுள்ளன. அதிலும் வடகிழக்குத் தமிழர் தரப்பின் எல்லாக்கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  

இந்திய கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் பேசும் கட்சிகள் முதலாவது சந்திப்பில் ஒரு மேசையில் உட்கார்ந்ததுமே தாம் வரலாற்று வெற்றியடைந்துவிட்டதாக பறைசாற்றியதே இன்றைய இழுபறிகளுக்குக் காரணமாகும்.  

இப்போது மலையகத் தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்பும் கையெழுத்து இடுவதில் இருந்து விலகிக் கொண்டுள்ளன. குறிப்பாக மலையகத் தமிழர் தரப்பில் தமிழ்பேசும் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத் தமிழர் விடயத்தில் எத்தகைய முன்மொழிவுகளை வைத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் அமர்ந்தார்கள் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. இப்போது கைச்சாத்திடுவதிலிருந்து விலகிக் கொள்கிறோம் ஆனால் வடக்குத் தமிழ் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு என நழுவிக் கொண்டுள்ளது. 

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும்போது, அந்தத் திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதி விளங்கப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியாவுக்கு சரியான புரிதல் ஏற்பட முடியும். 

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முன்வைத்து அதன் ஊடாக மாகாண சபை முறைமை 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது, அதற்கு துணை செய்வதாக அதே 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் பிரதேசச் சபைகள் சட்டம் அதுவரை நடைமுறையில் இருந்த உள்ளாட்சி சபையான கிராமசபை (கம்சபா) முறைமையை மாற்றி பிரதேச சபை முறைமையை அறிமுகம் செய்தது. ஏற்கனவே கிராமசபை முறைமையில் உள்வாங்கப்படமல் இருந்த மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு பிரதேச சபைகளிலும் சேவையைப் பெறமுடியாது என பிரதேசச் சபைச் சட்டத்திலேயே எழுதப்பட்டது. இது அதிகார பகிர்வு விடயத்தில் மலையகத் தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட பாரிய அநீதியாகும். 

இந்த சந்தர்ப்பத்தில், தமக்கு மாகாண சபை முறைமை மூலம் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முனைந்த வடகிழக்குத் தமிழர் தரப்பு சகோதர தமிழ் மக்களான மலையகத் தமிழர்களுக்கு பிரதேச சபைகளில் கூட அதிகாரப் பகிர்வு மறுக்கப்படுகின்றது என்பதனை கவனிக்காதுவிட்டது இங்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மறுபுறமாக அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அழுத்தக் குழுவாக இருந்து அமைச்சுப் பதவிகளையும் வகித்த மலையகத் தமிழர் தரப்புகள் இத்தகைய ஒருபாரபட்சம் தமது சமூகத்துக்கு நடப்பதுகுறித்து எந்தவித கரிசணையும்கொள்ளாது இருந்துள்ளன. இதனால் மலையகத் தமிழர் சமூகம் மூன்று தசாப்த காலமாக பிரதேச சபை அதிகாரங்களைக் கூட அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். 

இப்போது 2018 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் முழுமையாக அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இது தொடர்பில் இலங்கை அரசுக்கு போதுமான அழுத்தத்தை இந்தியா வழங்கவேண்டும் என மலையகத்தரப்பு இந்திய கடித்த்தில் கோரி இருத்தல் வேண்டும். ஏனெனில்இதற்கும் 13வது திருத்தத்துக்கும் தொடர்பு இருக்கிறது. 

அதே போல இலங்கை – இந்திய அரசுகளுக்கு இடையே ஜே.ஆர் – ராஜீவ் ஒப்பந்தம் குறித்து மட்டும் இந்தியாவுடன் பேசுவது மலையகத் தமிழர் பிரச்சினையை முன்வைப்பதற்கு போதுமானதாக இராது. மாறாக, நேரு – கொத்தலாவல, சிறிமா – சாஸ்த்திரி, சிறிமா – இந்திரா ஆகிய ஒப்பந்தங்கள் குறித்தும் அதன்போது மலையகத் தமிழர்களை இந்தியர்களாக கருதி திரும்பவும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முனைப்புகள் காட்டப்பட்ட அதேவேளை, இலங்கையில் அந்நியர்களாகக் கருதப்பட்ட மலையகத் தமிழர்கள் இதுவரை இலங்கையின் உள்நாட்டு அரச நிர்வாகப் பொறிமுறையில் முழுமையாகச் சேர்க்கப்படாமல் உள்ளனர் என்பதையும் இந்தியாவுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதன் காரணமாகவே இன்றும் கூட நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காலி மாவட்டத்துக்கு ஒருவிதமாகவும் நுவரெலியாவுக்கு இன்னொரு விதமாகவும் பாரபடசம் காட்டப்படுகிறது. 

எனவே மலையகத் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயங்களின் அடிப்படையாக பிரதேச சபைகளினதும் பிரதேச செயலகங்களினதும் நியாயமான நடைமுறையை மலையகப் பெருந்தோட்டங்களில் வாழும் மக்களை உள்ளீர்த்தாக, மொழிசார்ந்த ஏற்பாடுகளையும் கொண்டதாக அமைதல் வேண்டும் என இந்தியா இலங்கையை வலியுறுத்துவதாக மலையகத் தமிழர் அரசியல் தரப்பு இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் 

1986ஆம் ஆண்டுதான் இந்தியாவின்  மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தையில், நாடற்ற தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட தமிழர் தரப்புக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்தியா உதவியது என்பதை நினைவில் கொண்டு, அதற்கு பின்னதாக இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட்ட குடியுரிமை இன்னும் அர்த்தமுள்ள குடியுரிமையாக அமையவில்லை என்பதையும் இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், 

பொது அரங்கத்தில் அமரும்போது மலையகத்தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை முன்வைத்து அதில் மற்றைய தரப்புக்கு  உள்ள உடன்பாடு அல்லது உடன்பாடின்மை குறித்து முதலில் இணக்கப்பாட்டுக்கு வருவதும், அதன் அடிப்படையில் அவர்களது அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என தீர்மானிக்க வேண்டுமே அன்றி வெறுமனே வடகிழக்கு அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு வழங்குவோம், ஆனால் கையொப்பம் இடமாட்டோம் என்பது அரசியல் பிதற்றல் ஆக மட்டுமே அமையும். 

மலையகத் தமிழர் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் இவைதான் என்பதை மலையக அரசியல் தரப்பு தீர்மானித்து முன்மொழிய வேண்டுமே தவிர ஏனைய தரப்புகள் மலையகத்தவர்களுக்காக ஒப்புக்கு நான்கு வரிகளை எழுதுவதைக் கொண்டு மலையகத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் அமைந்துவிடக்கூடாது. குறிப்பாக மலையகத் தமிழர் இரங்கையில் உத்தியோகபூர்வமாகக் கொண்டிருக்கும் ‘இந்தியத் தமிழர்’ எனும் அடையாளம் தொடர்பில் மலையக அரசியல் தரப்புகள் தெளிவான நிலைப்பாட்டினை எடுக்காதவரை மலையகத் தமிழரை தனியான தேசிய இனமாக அடையாளப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கவே செய்யும். அவர்கள் இலங்கையில் வாழ்ந்துகொண்டு ‘இந்தியத் தமிழர்’ என அழைக்கப்படுவது இலங்கையில் எப்போதும் ஓர் அந்நியத் தன்மையை உணர்த்தி நிற்கின்றது என்பதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதுவே குடியுரிமைப் பறிப்பு முதல் நாடுகடத்தல் வரையான அவலங்களுக்கு அடித்தளமிட்டது.  

மாறாக இந்திய தமிழர் அடையாளத்தை சுமந்துகொண்டுதான் இலங்கையில் அர்த்தமுள்ள குடிகளாக வாழ நினைப்பது எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குரியது. அப்படியே இந்தியத் தமிழர் அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வது எனும் முடிவை தீர்க்கமாக எடுத்தால், வட-கிழக்குத் தமிழர்தரப்பைவிட இந்தியாவின் கரத்தை இன்னும் இறுகப் பற்றியவர்களாக அவர்களை இந்தியாவிடம் அழைத்துச் செல்லும் மாலுமிகளாக மலையகத் தமிழர் தரப்பு திகழவேண்டும். ஆனால், இங்கே வடகிழக்குத் தமிழர் அரசியல் தரப்பு நலன்களுக்காக இந்தியத் தமிழரான மலையகத்தரப்பு விடுக்கொடுத்து விலகி ஓடும் நிலைமையே காணக்கிடைக்கிறது.  

தமது கலை, இலக்கிய, தொழிற்சங்க பண்பாட்டு அடையாளமாக வளர்த்தெடுத்துள்ள அடையாளமான ‘மலையகம்’ எனும் அடையாளத்தை உள்ளக அரசியல் அரங்கிலும் தேசிய அரசியல் அரங்கிலும் முன்னிறுத்தாதவரை தம்மை தனியான தேசிய இனமாக இலங்கையில் அடையாளப்படுத்திக் கொள்வதிலும் இலங்கையில் அர்த்தமுள்ள குடிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதிலும் மலையகத் தமிழர் சமூகம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டே இருக்க நேரிடும். 

(‘இந்திய கடிதம்’ தொடர்பாக மலையக அரசியல் அரங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குகிறார் அரங்கத்தின் (அரங்கம் பத்திரிகை அல்ல) தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா.)