வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு

சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை  தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது.

வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தால், பேச்சுச் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும் என்றே தமிழ்க் கூட்டமைப்பும் வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை புதிய வடிவத்தில் முன்வைப்பதாக, நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான கூறியிருக்கிறார்.

எனினும், அரசாங்கம் இதனை எவ்வாறு திருத்தப் போகிறது என்பதை அவர் வெளியிடவில்லை. எனவே, மீண்டும் பழைய தவறு இடம்பெறலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

வெறுப்புப் பேச்சு என்ற உடனேயே, ஜனவரி மாத ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் சுமார் மூன்று வருடங்களாக பரவியிருந்த முஸ்லிம் விரோத பிரசாரங்களே எவருக்கும் ஞாபகத்துக்கு வரும். எனவே, அக்காலத்தில் இடம்பெற்ற அந்த பிரசாரங்களே இந்தச் சட்டத் திருத்தத்துக்கு அடிப்படைக் காரணமாகியது என நம்பலாம்.

அதேவேளை, இந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை, அரசாங்கம் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வர அதை விட முக்கிய காரணமாகியது என்றும் கூறலாம். ‘சமயச் சிறுபான்மையினர் மீதும் சிவில் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்கள் மீதும் சமயத் தலங்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றுடன் சம்பந்தப்பட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும்’ அந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதற்காக தண்டனைக் கோவையை அரசாங்கம் எவ்வாறு திருத்த முயற்சித்தது. அதனை தமிழ் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்பதை விளங்கிக் கொள்வது முக்கியமாகும்.

இந்த திருத்தத்தின் படி, உண்மையிலேயே தண்டனைக் கோவையில் மற்றொரு வாசகத்தை சேர்க்கவே அரசாங்கம் முயற்சித்தது. ‘பேச்சு, எழுத்து அல்லது வாசிப்பதற்கான சொற்களால் அல்லது சமிக்ஞைகளால் அல்லது காணக்கூடிய பிரதிபிம்பங்கள் மூலம் அல்லது வேறு விதமாக சன சமூகங்களிடையே அல்லது வேறுபட்ட வர்க்கத்தினரிடையே அல்லது வேறுபட்ட இன அல்லது சமயக் குழுக்களிடையே வன்செயல் அல்லது சமய, இன அல்லது தேசிய முரண்பாட்டை அல்லது அதிருப்தியை அல்லது பகைமையை ஏற்படுத்தும் அல்லது அதற்கு முயற்சிக்கும் அல்லது தூண்டும் அல்லது அதற்கு முயற்சிக்கும் ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை இரண்டு வகையில் ஒரு வகை சிறையிலிடுதல் மூலம் தண்டனை வழங்க வேண்டும்’ என அந்த சட்டத் திருத்தத்தில் கூறப்படுகிறது.

இந்தச் சிக்கலான சட்ட மொழியில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பேச்சு, எழுத்து அல்லது சமிக்ஞைகள் மூலம் இன, சமய மற்றும் ஏனைய குழுக்களிடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்போர் தண்டிக்கப்படுவர் என்பதே. இதே வாசகம் மக்களால் வெறுக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் இவ்வாறே இருக்கிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலுள்ள இந்த வாசகத்தை பாவித்தே, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கச் செய்தது. இரண்டு கட்டுரைகள் மூலம் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டார் என்றும் அதன் மூலம் இனங்களுக்கிடையே பகையை ஏற்படுத்த திஸ்ஸநாயகம் முயற்சித்தார் என்றும் மஹிந்தவின் அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிகழ்வை ஆதாரமாகச் சுட்டிக் காட்டியே, வெறிப்பேச்சுக்கு எதிரான புதிய சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. தமிழ்ப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவரும் அதே நிகழ்வை ஆதாரமாகக் காட்டியே புதிய சட்ட மூலத்தை எதிர்த்து மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

மறுபுறத்தில் வெறுப்புப் பேச்சுக்களையே பேசித் திரியும் பொதுபல சேனாவும் இந்த புதிய சட்ட வரைவை எதிர்த்தது. இரு துருவங்களாக உள்ள இந்த இரு சாராரும் கடந்த வாரம் ஒரே நாளில் இப் புதிய சட்ட மூலத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கியிருந்தனர்.

ஒரு வகையில் பார்த்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த சட்ட வரைவை ஆதரித்திருக்க வேண்டும். வெறுப்புப் பேச்சின் காரணமாகத் தான் அதிகாரம், சிறப்புரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றை அவர் இழக்க நேரிட்டது. அவரது காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்கள் பரவியிருக்காவிட்டால் முஸ்லிம்களில் மேலும் ஒரு பகுதியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்கு வாக்களித்து இருப்பார்கள். அவ்வாறாயின் அவர் வெற்றி பெற்றிருப்பார். அந்த வகையில் வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் நாட்டில் ஆகக் கூடுதலாக பாதிக்கப்பட்டவர் மஹிந்தவே. எனவே அவர் இந் தத் திருத்த சட்ட வரைவை ஆதரிக்க வேண்டும்.

இந்த சட்ட வரைவு சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் எதிராக பாவிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே பொது பல சேனா அதனை எதிர்த்தது. அது தமிழர்களுக்கு எதிராக பாவிக்கப்படலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ்க் கூட்டமைப்பு உட்பட பல தமிழ் குழுக்கள் அதனை எதிர்த்தன.

ஆனால், முஸ்லிம் தலைவர்கள் அதைப் பற்றி மௌனமாக இருந்துவிட்டனர். அண்மைக் காலத்தில் வெறுப்புப் பேச்சுக்களால் பாதிக்கப்பட்டதனால் இந்தச் சட்டம் தமக்கு சாதகமாக அமையும் என அவர்கள் நினைத்தார்கள் போலும்.

அண்மைக்கால வெறுப்புப் பேச்சுக்களால் வெகுவாகவே பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. பொது பல சேனா, ராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற அமைப்புக்கள் 2012ஆம் ஆண்டு முதன் முதலாக இணையத் தளங்கள் மூலமாக ஆரம்பித்த இந்த வெறுப்புப் பேச்சுக்கள், இறுதியில் ஞானசார தேரரின் மூலம் பூதாகாரமாக உருவெடுத்து நாட்டை பாரியதோர் இனக் கலவரத்தின் விளிம்புக்கே இழுத்துச் சென்றன. முஸ்லிம்கள் எப்போதும் அச்சத்தோடும் பதற்றத்தோடும் வாழ வேணடிய நிலையை உருவாக்கின.

நாட்டின் தலைவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த வெறுப்புப் பேச்சுக்களை ஆதரித்த நிலையில் எந்த அதிகாரியிடம் முறையிடுவது என்று தெரியாது முஸ்லிம்கள் தவித்தனர். போதாக்குறைக்கு ஞானசார போன்றோருக்கோ அல்லது பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற எழுத்துக்களை பொறித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கோ எதிராக நடவடிக்கை எடுக்காத மஹிந்தவின் அரசாங்கம் அவற்றை எதிர்த்துப் பேசிய அசாத் சாலி இனங்களுக்கிடையில் குரோதம் வளரும் வகையில் பேசினார் என்று அவரை கைது செய்தது.

இந்த விடயத்தில் பொது பல சேனாவினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அமைப்புக்களினதும் கவலை விளங்கிக் கொள்ளக் கூடியதே. அவர்களும் இதைப் பற்றி மௌனமாக இருந்துவிட்ட முஸ்லிம் அமைப்புக்களும் இனங்களுக்கிடையிலான உறவைப் பற்றியே எப்போதும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். வேண்டுமென்றால் அரசாங்கம் இதனை இனங்களுக்கிடையிலான உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்தாக அர்த்தப்படுத்தலாம். வேண்டுமென்றால் அவ்வாறில்லை என விட்டு விடலாம்.

கடங்க காலங்களில் திஸ்ஸைநாயகம், அசாத் சாலி மற்றும் ஞானசார ஆகியோர் விடயத்தில் அது தான் நடந்தது. அப்போது திஸ்ஸைநாயகம் மற்றும் அசாத் சாலி போன்றோர் பாதிக்கப்பட்டார்கள். புதிய அரசியல் சூழலில் தாம் பாதிக்கப்படலாம் என பொது பல சேனா கருதுகிறது. ஏற்கெனவே ஞானசார தேரருக்கு எதிராக குர்ஆனை அவமதித்ததாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டும் இருக்கிறது.

அதேவேளை, உத்தேச சட்ட மூலம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்ற கருத்தும் நிலவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் கீழ் எவரையும் அவதூறு செய்யவோ, அவமானப்படுத்தவோ முடியாது எனினும் ஒரு கருத்து அவதூறானது என்றோ வெறிப் பேச்சென்றோ எவ்வாறு தீர்மானிப்பது என்பது மிகவும் சிக்கலான விடயமாகும். ஒருவரது நியாயமான இன உணர்வுக்கும் வெறுப்புப் பேச்சுக்கும் இடையிலான வேறுபாடு, சில வேளைகளில் உண்மையிலேயே கண்டறிய முடியாமல் போய்விடலாம். சுருக்கமாக கூறுவதாயின், வெறுப்புப் பேச்சு என்றால் என்ன, அதற்கான வரைவிலக்கணம் என்ன என்பது தெளிவாக இல்;லாததால் நல்லதோர் விடயமாக தெரியும் இந்த சட்ட வரைவு பல நல்ல நோக்கம் உள்ளவர்களையும் பாதிக்கலாம்.

வெறுப்புப் பேச்சும் பயங்கரவாதமும் இந்த வகையில் சமமானதே. ஒருவருக்கு வெறிப் பேச்சாக தெரியும் ஒரு கருத்து, மற்றொருவருக்கு இனப் பற்றாகத் தெரியலாம். ஒருவரது பயங்கரவாதி, மற்றொருவரது விடுதலை போராளியாகிறார்.

உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்துக்கும் இன்னமும் உலகமே ஏற்றுக் கொண்ட சரியான வரைவிலக்கனம் ஒன்று இல்லை. இதற்கு வலைவிலக்கணம் கண்டுபிடிப்பதில் ஐ.நாவும் தோல்வி கண்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வருடம் ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த எகிப்திய தூதுக் குழுவினர் ‘பயங்கரவாதத்துக்கும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான மக்களின் சட்டபூர்வமான உரிமைக்கும் இடையில் வேறுபாட்டை கண்டறிவதன் அவசியத்தை’ வலியுறுத்தியது.

அதே போல் ‘பயங்கரவாதத்தை காலனித்துவ அல்லது வெளியார் ஆதிக்கத்தின் கீழும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கீழும் வாழும் மக்களினது சுய நிர்ணய உரிமைக்கும் தேசிய விடுதலைக்குமான சட்டபூர்வமான போராட்டத்துக்கு சமப்படுத்த முடியாது’ என ஈரானிய பிரதிநிதி கூறினார்.

எனவே, வெறுப்புப் பேச்சை தடுப்பதற்காக சட்டம் கொண்டு வருவதாக இருந்தால், அதன் முதல் கட்டமாக இருக்க வேண்டியது வெறுப்புப் பேச்சைப் பற்றிய தெளிவான பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரைவிலக்கனம் ஒன்றை கண்டுபிடிப்பதேயாகும். அவ்வாறு வெறுப்புப் பேச்சு தொடர்பாக தெளிவானதோர் வரைவிலக்கனம் இல்லாமல் அதனை தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அரசாங்கங்கள் தமது எதிரிகளை அடக்க அந்த சட்டங்களை பாவிக்கலாம் என்பதை வரலாறு. ஏற்கெனவே தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

இரண்டு கட்டுரைகள் மூலம் இலங்கையானது புலிகளுக்கு சாதகமாக அமையலாம் என எழுதியமைக்காக, அவற்றை எழுதிய ஊடகவியலாளருக்கு 20 வருட கடூழியச் சிறை தண்டணை விதிக்கப்பட்ட போதிலும் பல ஆண்டுகளாக புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்து புலிகளின் சார்பில் ஆயிரக் கணக்கில் அறிக்கைகளை வெளியிட்ட தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகள் அமைப்போடு தொடர்பு வைத்திருந்தமைக்கான ஆதாரம் இல்லை என இரகசியப் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, அவரை பிணையில் விடுவித்த நாடாகும். வெறுப்புப் பேச்சுக்கே பெயர் பெற்ற ஞானசார தேரரைக் கண்டு கொள்ளாது அவரை விமர்சித்த அசாத் சாலியை கைது செய்த நாடாகும். வெறுப்புப் பேச்சை தடுக்க நாட்டில் சட்டம் இல்லாமல் இல்லை.

அவதூறுக்கு எதிரான சட்டங்களை அதற்காக பாவிக்கலாம். புதிதாக அதற்கென்றே சட்டம் கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால் அது நிலைமையை மேலும் சிக்கலாக்ககக் கூடாது. மஹிந்த அரசாங்கத்தின் நோக்கங்களைப் போல், இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தின் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டிய நிலைமை இல்லாவிட்டாலும் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் எவரும் அதனை பாவிக்கலாம். அரச இயந்திரம் பக்கச் சார்பானது என்பதால் அப்போது சிறுபான்மையினரே கூடுதலாக பாதிக்கப்படுவார்கள். (எம்.எஸ்.எம். ஐயூப்)