சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா?

“உங்களில் பலர், எங்களில் ஒருவரைக் கொலை செய்துள்ளார்கள்” என்று, இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் இந்தப் பிரச்சினையை அணுகுவதால், அவர்கள் முன்னால், இலங்கை முஸ்லிம்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சமய வசனங்கள் அடங்கிய சுவரொட்டியை, பிரியந்த குமார கிழித்து எறிந்ததாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று ஆரம்பத்தில் வந்த செய்தியின் காரணமாக, இந்தச் சம்பவம் ஒரு சமயம் சார்ந்த விடயமாகப் பலரால் விளங்கிக் கொள்ளப்பட்டது. இது, இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில், முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர், கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்கள் எதிர்நோக்கிய நிலைமையை ஒத்ததாகும்.

அந்தச் செய்தி பெரும்பாலானவர்கள் மத்தியில் பரவியதன் பின்னரே, வேறு பல விதமான செய்திகள் பாகிஸ்தானிலிருந்து வருகின்றன. அந்தத் தொழிற்சாலைக்கு, ஜேர்மன் வர்த்தக தூதுக்குழுவொன்று விஜயம் செய்ய இருந்ததாகவும் அதனால் பிரியந்தவின் பணிப்பின் பேரில், தொழிற்சாலை சுத்தம் செய்யப்பட்டதாகவும் அப்போது இஸ்லாமிய சமய வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் நீக்கப்பட்டதாகவும், அதுவே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அத்தோடு, தொழிற்சாலையில் கடுமையாக ஒழுங்கை, பிரியந்த பேணி வந்ததாகவும் அதனால் பலர் அவருக்கு எதிராக இருந்ததாகவும், தொழிலாளர் போராட்டம் ஒன்றின் போது அவர் வளைந்து கொடுக்காததால், அவர் மீது மத நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சகோதரரும் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தையே தெரிவித்தார்.

ஆனால், ஆரம்பத்தில் கிடைத்த தகவல் என்பதாலும் அதையே அவர்கள் விரும்புவதாலும், இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள், “இது தொழில் போராட்டம் ஒன்றின் விளைவல்ல; மத நிந்தனையுடன் தொடர்புடையது” என்று நம்பவும் பிரசாரம் செய்யவும் விரும்புகிறார்கள் போலும்!

மத நிந்தனை என்ற விடயம், தற்போது பாகிஸ்தானில் பாரியதொரு பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு தடைசெய்யப்பட்டுள்ள தீவிரவாத டி.எல்.பி எனப்படும் ‘தெஹ்ரீக் ஈ லப்பை பாகிஸ்தான்’ என்ற அமைப்பு, மத நிந்தனைச் சட்டத்தைக் கடுமையாக அமலாக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தி வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம், அயல் நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, டி.எல்.பி அமைப்பு மேலும் ஊக்கமடைந்துள்ளது.

இந்தநிலையில், அண்மையில் அந்த அமைப்பு லாஹோர் நகரில் நடத்திய பாரியதோர் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம், சில விடயங்களில் விட்டுக் கொடுக்க நேரிட்டது. அதன் பிரகாரம், கொலைகள் பலவற்றில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டி.எல்.பி அமைப்பின் சுமார் 350 உறுப்பினர்களையும் அதன் தலைவர் சாத் ரிஸ்வியையும் அரசாங்கம் கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி விடுதலை செய்தது. முடக்கப்பட்டு இருந்த அதன் வங்கிக் கணக்கும் விடுவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், பிரியந்த மீது சிலர் மத நிந்தனைக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்த நிலையில், அவரைத் தாக்கிய கொலைகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதானது, நிச்சயமாக மிகவும் கடினமான முடிவாகவே இருந்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த முடிவை எடுத்தார்.

கொலை நடந்த தினமே, “பாகிஸ்தானின் வெட்கத்தின் தினம்” என்று அவர் கூறினார். நூற்றுக்கும் அதிகமான சந்தேக நபர்கள், உடனே கைது செய்யப்பட்டனர். தாம் நேரடியாகவே இந்தச் சட்ட நடவடிக்கையை மேற்பார்வை செய்வதாகவும் இம்ரான் கான் அறிவித்தார். பிரியந்தவை சூழ்ந்து கொண்டு, குண்டர்கள் தாக்கும் போது, அவரைக் காப்பாற்ற முயன்ற மாலிக் அத்னான் என்பவருக்கு, பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய தேசிய விருதை வழங்குவதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு நிலைமையை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அடுத்து, மினுவங்கொடை, குளியாப்பிட்டி போன்ற பகுதிகளில், முஸ்லிம் விரோத கலவரங்கள் இடம் பெற்றன. அப்போது ஒரு முஸ்லிம் நபர், வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார். அந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பரவியிருக்கிறது. அந்தச் சம்பவத்துக்காக எவரும் தண்டிக்கப்படவில்லை. இதேபோல், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கமவில் இடம்பெற்ற கலவரத்தின் போது, நான்கு முஸ்லிம்கள் அதேபோல் கொல்லப்பட்டனர்; எவரும் தண்டிக்கப்படவில்லை.

சியல்கொட் சம்பவத்தை அடுத்து, இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் போது இடம்பெற்ற பல்வேறு கொடூரச் சம்பவங்களின் படங்களையும் வீடியோக்களையும் தமிழர்களும் முஸ்லிம்களும் சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர்.

1983ஆம் ஆண்டு கலவரத்தின் போது, பொரளை பஸ் நிலையத்தில் ஒரு தமிழர் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்னர், பல குண்டர்கள் அவரைச் சுற்றி இருந்து நடனமாடும் ஒரு படம் அவற்றில் முக்கியமாகும். 1958ஆம் ஆண்டு பாணந்துறையில், ஒரு தமிழ் மத குரு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தையும் சிலர் நினைவூட்டியிருந்தனர்.

‘நீங்களும் இவ்வாறு செய்யவில்லையா’ என்று பெரும்பான்மை இனத்தவர்களிடம் கேட்பதே அதன் நோக்கமாக இருப்பின், அது முறையாகாது. ஏனெனில், இரண்டு பிழைகள் சேர்ந்து, சரியான ஒன்று உருவாகாது. அதேவேளை, அது தற்போதைய சம்பவத்தின் கொடூரத்தைக் குறைத்துக் காட்டுவது போலாகும். அதேபோல், தற்போதைய சம்பவத்தை நியாயப்படுத்துவதாகவும் அமையும்.

ஒருவர் கொடுமை செய்தால், அது, மற்றொருவரும் கொடுமை செய்வதற்கான அனுமதிப்பத்திரமாகாது. ஆனால், தற்போதைய சம்பவத்தைப் பாவித்து, கொடூரத்தன்மை ஒரு சமூகத்தினரிடம் மட்டுமே இருக்கிறது என்று, எவராவது வாதிட முற்படுவாரேயானால், அதனை எதிர்கொள்ள மட்டும் அந்தப் பழைய சம்பவங்களைப் பாவிக்கலாம்.

கொடுமை, கொடூரம் என்பவை, ஒரு சமூகத்தின் ஏகபோகம் அல்ல. 1965ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் 10 இலட்சம் வரையிலான மக்கள், ஓரிரு வாரங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1994ஆம் ஆண்டு, ருவாண்டாவில் 10 நாள்களுக்குள் 800,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சியல்கொட் சம்பவத்தோடு மத நிந்தனை சம்பந்தப்பட்டுள்ளதா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. ஆனால், பாகிஸ்தானில் அமலில் உள்ள மத நிந்தனைச் சட்டம், இன்று பல மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. உண்மையிலேயே, அது அநீதியாகச் சிலருக்கு எதிராகப் பாவிக்கப்பட்டுள்ளதாக சில வழக்கு விசாரணைகளின் மூலம் தெரிகிறது.

அதேவேளை, உண்மையிலேயே இறை நிந்தனை என்று ஒன்றும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, இறை சித்தாந்தத்தைப் பலர் மறுக்கின்றனர். ஆனால், அது இறை நிந்தனையாகக் கருதப்படுவதில்லை. எனினும், கருத்துச் சுதந்திரத்துக்குள் மறைந்து, வேண்டும் என்றே சில சமயங்களைப் பின்பற்றுவோரை நிந்திக்கும் நோக்கத்துடனேயே பேசுவோரும் எழுதுவோரும் சித்திரங்களை வரைவோரும், ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

தமது ஆக்கத்தால் கோடிக் கணக்கான மக்களின் மனம் புண்படும் என்பதை அறிந்தே, அவர்கள் அவற்றைப் படைக்கிறார்கள் என்றால் அதன் பின்னால் உள்ள நோக்கம், நல்ல ஒன்றாக இருக்க முடியாது.
அவர்களிடம் அவ்வாறானதோர் எண்ணம் இல்லை என்று வைத்துக் கொண்டாலும், தமது படைப்புகள் மூலம் சமூகத்தில் கருத்து மோதல்கள் உருவாகி, அதன் மூலம் சமாதானம் பாதிக்கப்பட்டு, சிலவேளை உயிர்ச் சேதங்களும் இடம்பெறலாம் என்பதை அவர்கள் உணர வேண்டும் அல்லவா? அந்தப் படைப்பு இல்லாமல் மனிதகுலம் வாழும்; ஆனால், சமாதானம் இல்லாமல் வாழ்வது கடினம்.

மத நிந்தனைச் சட்டங்கள் இருந்தால் அவை மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர், மற்றைய மதங்களைப் பற்றி அறியாதிருக்கலாம். சில சமயங்களைச் சேர்ந்தவர்கள் தத்தமது சமயத்தையே கேலியாகப் பார்க்கிறார்கள். அவ்வாறானவர்கள், நிந்திக்கும் நோக்கம் இல்லாமலேயே, கேவலமாகப் பேசலாம்.

அதேவேளை, அதிகாரிகளும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யலாம். இலங்கையில் ஒரு முஸ்லிம் பெண், வண்டிச் சக்கரத்தின் படத்தைப் பொறித்த உடையொன்றை அணிந்திருந்தபோது, அது பௌத்தர்களின் தர்ம சக்கரம் என்று கூறி, பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்தனர். பல மாதங்களுக்குப் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.