அன்றாடம் தவெக தலைவர் விஜய் அந்தாதி பாடிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், திருமாவின் பேட்டிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு எப்படி அவர் இப்படி பேசலாம் என்று எழுதுகிறார்.
தவெகவின் அரசியல் எதிரியான பாஜக குறித்து விஜய் வாய் திறக்க மறுப்பது குறித்து எந்த அறத்துடனும் அவர் எழுதுவதில்லை. ஆனால், தவெகவிற்கு எதிராக யாராவது பேசி விட்டாலோ, கருத்து தெரிவித்து விட்டாலோ அந்த தலைவர்கள் மீது பாய்ந்து பிடுங்கி விடுகிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதற்கு ஒருபடி மேலே போய், திருமாவளவனை மிக கேவலமாக கிண்டல் செய்தார். அதாவது, “இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிராக விசிக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் வைகோவிற்கு கண்டனம் தெரிவிக்கவும், ”நான் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்று வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது? திடீரென ஆளுநர் சந்திப்பை ஏன் தவெக தலைவர்கள் நடத்தினார்கள்? பாமக தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய்யை ஏன் சந்தித்தார் என்ற கேள்விகள் மேல் எழும்புகின்றன.
கூட்டணிக்குள் சிலரை உள்ளே கொண்டு வந்து அதன் மூலம் சிலரை வெளியேற்ற தவெக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக உள்ள ஜேசிடி பிரபாகர், தன்னை அந்த பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தவெக தலைவரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் பரவி வருகிறது.
இதனால் அவருக்குப் பதிலாக நீலகிரியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜனை சபாநாயகராக்கலாம் என்ற யோசனை தவெகவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னாள் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணியை அமைச்சராக்கும் வேலையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பாமக இருக்கும் இடத்தில் இருக்கமாட்டோம் என்று கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, கறார் காட்டிய திருமாவளவன் இதனால் தற்போது மிகக்சிரமமான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தவெக கூட்டணியில் விசிக சேரக்கூடாது என்ற அவரது நிலைப்பாட்டை, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க தவெக கூட்டணியில் சேர வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் எடுத்த நிலைப்பாட்டிற்காக மாற்றிக் கொண்டார்.
ஆனால், ஆதவ்வுடன் அவர் நீண்ட காலமாக தொடர்பில் இருக்கிறார் என்ற குற்றம் சாட்டும் உள்ளது.
தற்போது பாமக அமைச்சரவைக்கு உள்ளே வந்தால், விசிக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அந்த நிலையை வன்னி அரசு எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை திடீரென சமூக நீதித் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த கருத்தும் கேட்காமல், விவாதமும் நடத்தாமல் நடத்தப்பட்ட இந்த பெயர் மாற்றத்திற்கு விசிக எம்.பி ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தவெக அமைச்சரவையில் உள்ள வன்னி அரசு வரவேற்றுள்ளார். இப்படி கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருப்பதால், தவெகவின் நடவடிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முதல் முதலில் எழுப்பியது திருமாவளவன் தான். ஆனால், தற்போது பாமக உள்ளே வந்தால், விசிகவின் நிலை என்னவாகும் என்பது தான் கேள்வியாக உள்ளது. திருமா எடுக்கும் முடிவை அக்கட்சியின் நிர்வாகிகள் ஏற்பார்களா?
(ப.கவிதா குமார்)