2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இறையாண்மைக் கடன் செலுத்தாமைக்குப் (Sovereign Default) பின்னர், 2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation), வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பாகவே இந்த வளர்ச்சி அமைகிறது.
எனினும், இலங்கை தனது அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டின் பொருளாதாரம், பொதுச் சேவைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் எதிர்காலத்தைத் தலைமுறை தலைமுறையாக வடிவமைக்கவுள்ள மற்றொரு ஆழமான மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்து வருகிறது.
இலங்கையின் சனத்தொகை முதிர்வடைந்து (Ageing) வருகிறது; மகப்பேறு விகிதம் (Fertility) தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சனத்தொகை மாற்றங்கள் மிக முக்கியமான ஒரு தருணத்தில் நிகழ்கின்றன.
பொருளாதார மீட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் நாடு ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் உற்பத்தித்திறன், முதலீடுகள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தனியார் துறையின் போட்டித்திறன் ஆகியவற்றில் சரியான முறையில் கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், இவ்வனைத்து இலக்குகளையும் அடைவதற்குப் பின்னால் தவிர்க்க முடியாத ஒரு அடிப்படை காரணியாக இருப்பவர்கள் இலங்கை மக்களே ஆவர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு எமக்குக் கூறுவது என்ன?
2024-ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்புத் தரவுகள், இலங்கையின் சனத்தொகைக் கட்டமைப்பில் இடம்பெற்று வரும் மாற்றங்களின் அளவை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோரின் விகிதம் 2012-ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் அது 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், இது 2037-ஆம் ஆண்டளவில் 22.1 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, 0-14 வயதுடைய சிறுவர்களின் விகிதம் இதே காலப்பகுதியில் 25.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீமாகக் குறைந்துள்ளதுடன், 2037-ஆம் ஆண்டில் அது 19.1 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இலங்கையின் மொத்த மகப்பேறு விகிதமும் (Total Fertility Rate), ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற ‘பிரதியீட்டு மட்டத்திற்கு’ (Replacement level) கீழே சரிந்துள்ளது.
இலங்கையின் எதிர்காலம் இன்று இருப்பதை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. தொழிலாளர் படையின் அளவு மற்றும் அதன் கட்டமைப்பு, குடும்பங்களின் வாழ்க்கை முறை மற்றும் பராமரிப்பு முறைகள், சுகாதாரக் கட்டமைப்புகள், சமூகப் பாதுகாப்பு, பொது நிதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான சமநிலை ஆகியவற்றில் இது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
முதிர்வடையும் சனத்தொகை என்பது ஒரு நெருக்கடி என்று பொருளல்ல. நீண்ட ஆயுள் என்பது குறிப்பிடத்தக்க தேசிய வளர்ச்சியின் அடையாளமாகும். சவால் என்னவென்றால், சனத்தொகை முதிர்வடைவதால் ஏற்படும் மாற்றங்களிலிருந்து பயனடைய சமூகம் தயாராக இருக்கிறதா என்பதே ஆகும்.
இலங்கையைப் பொறுத்தவரை, இது விரிவான சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளைத் தகவமைத்தல் (Adapting), பராமரிப்புச் சேவைகளை மறுசீரமைத்தல், தொழிலாளர் தொகுதியில் ஏற்படும் மாற்றங்களை எதிர்பார்த்து மனித மூலதனத்தை உருவாக்குதல் மற்றும் மிக முக்கியமாக, இளைய தலைமுறையினரின் திறன்கள் மற்றும் அபிலாஷைகளில் முதலீடு செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இலங்கையின் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைத் தாய்நாட்டிலேயே காண முடியுமா?
இது என்னை ‘சனத்தொகை மீள்தன்மை’ (Demographic Resilience) என்ற கருத்திற்குச் சுமந்து செல்கிறது. ஒரு நாட்டின் நிறுவனங்கள், முதலீடுகள் மற்றும் கொள்கைகள் சனத்தொகை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து (Anticipate), அதற்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டு (Adapt), உரிய முறையில் பதிலளிக்கக்கூடிய (Respond) திறனையே இது குறிக்கிறது.
அதேவேளையில், அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் இது உறுதி செய்கிறது. இளைஞர்களிடம் முதலீடு செய்தல், குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், சனத்தொகை முதிர்வடைதலுக்குத் தயாராகுதல் மற்றும் அபிவிருத்தித் திட்டமிடல்கள் தரவுசார் சான்றுகளின் (Evidence) அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
2024-ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 4.8 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 21.9 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், இலங்கையில் எத்தனை இளைஞர்கள் உள்ளனர் என்பதே உண்மையான கேள்வியல்ல.
மாறாக, இளைஞர்கள் தமக்கான எதிர்காலத்தை இந்த நாட்டிலேயே கற்பனை செய்து, அதை எதார்த்தமாக உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளனவா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
2022-ஆம் ஆண்டிற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி, திறமையான தொழிலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் வெளிநாடுகளுக்கான இடம்பெயர்வை மேலும் துரிதப்படுத்தியது. இதில் வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் ஏராளமான இலங்கை இளைஞர்களும் அடங்குவர்.
இடம்பெயர்வு என்பது தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சில நன்மைகளை வழங்கினாலும், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை நிறைவை அடைவதற்கான ஒரே வழி நாட்டை விட்டு வெளியேறுவதுதான் என்று இளைஞர்கள் கருதும் நிலை உருவாகும்போது, அது உள்நாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.
ஒப்பீட்டளவில் அதிகமான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை மூலம் பயனடைவதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் குறைந்து வருகிறது. எஞ்சியுள்ள இந்த ‘மக்கள்தொகை அனுகூலத்தை’ (Demographic Dividend) முழுமையாகப் பயன்படுத்துவது என்பது, இளைஞர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், கல்வி மற்றும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதையும், அவர்கள் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முழுமையாகப் பங்களிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் பொறுத்தே அமையும்.
இளைஞர்கள் எதை அடைய விரும்புகின்றனர் என்பதும், அந்த இலக்குகளை அடைவதிலிருந்து அவர்களைத் தடுக்கும் காரணிகள் எவை என்பதும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான விவாதங்களின் மையக் கருப்பொருளாக இருக்க வேண்டும்.
ஜூலை 7-ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட UNFPA-இன் ‘சனத்தொகை எதிர்கால ஆய்வு’ (Demographic Futures Survey), அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், பாதுகாப்பற்ற வீடமைப்பு நிலை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் விரிவடைந்து வரும் சமத்துவமின்மைகள் ஆகியவை பல இளைஞர்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கையையும் குடும்பத்தையும் உருவாக்குவதை மேன்மேலும் கடினமாக்கி வருவதை வெளிப்படுத்துகின்றன.
இந்த அழுத்தங்கள் அனைத்து இளைஞர்களையும் ஒரே அளவில் பாதிப்பதில்லை. வறுமை, பாகுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் சமூகக் கட்டமைப்புகள் தொடர்ந்து வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இளம் பெண்கள், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் தொடர்ச்சியான தடைகளை எதிர்கொள்கின்றனர்.
தேசிய தொழிலாளர் படை ஆய்வுத் தரவுகளின்படி, 15-24 வயதுடைய இளம் பெண்களிடையே வேலையின்மை விகிதம் 30.6 சதவீதமாகவும், 25-29 வயதுடைய பெண்களிடையே அது 20.1 சதவீதமாகவும் காணப்படுகிறது. இந்த விகிதங்கள், அதே வயதுப் பிரிவிலுள்ள ஆண்களுடன் ஒப்பிடுகையில் இரண்டரை மடங்கு அதிகமாகும். கல்வியறிவு பெற்ற பல பெண்கள் தொழில்முறைப் பணியாளர்களிலிருந்து வெளியேற்றப்படுவதையும், அவர்கள் சுரண்டல், வன்முறை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
எனினும், பொருளாதாரப் பங்கேற்பு மட்டுமே முழுமையான தீர்வாகாது. அரசியல் மற்றும் பொதுத் தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் இளைஞர்கள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் கொள்கைகளை வடிவமைப்பதில் தீவிரமாகப் பங்களிக்கவும், நாட்டின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் போது தங்களது கருத்துக்கள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு உரிய இடமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
‘இளைஞர்களின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் நனவாக்குதல்’ எனும் இந்த ஆண்டின் உலக மக்கள்தொகை தினக் கருப்பொருள், இலங்கையின் எதிர்காலத்திற்காக இளைஞர்கள் மீது முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. எமது நாடு எத்திசையை நோக்கிச் செல்கிறது என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவெனில், வளர்ந்து வரும் புதிய தேவைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளவும், எவரையும் கைவிடாத வகையில் எமது கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகள் தயாராக உள்ளனவா என்பதே ஆகும்.
அபிவிருத்தியின் வெறும் பயனாளிகளாக அன்றி, அதன் பங்காளிகளாகவே இளைஞர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மீள்தன்மையுள்ள இலங்கை என்பது இளைஞர்களை வெறும் எதிர்கால வாரிசுகளாக மட்டும் பார்க்காமல், இன்றைய தொழிலாளர்களாக, தொழில்முனைவோராக, புத்தாக்குநர்களாக, சமூகத் தலைவர்களாக மற்றும் தீர்மானம் எடுப்பவர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சி நிரலின் மையத்தில் இருப்பது ‘தெரிவு’ (Choice) ஆகும். இளைஞர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்னெடுக்கவும், குடும்பம் அமைப்பதா இல்லையா, எப்போது மற்றும் யாருடன் குடும்பம் அமைப்பது என்பதைச் சுயமாகத் தீர்மானிக்கவும், பொதுவாழ்வில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும், பாகுபாடு மற்றும் வன்முறையற்ற சூழலில் தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.