கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை

2018 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 267,128 மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 25,000 முதல் 50,000 வரையிலான மாணவர்கள் இடைவிலகும் இந்த அவல நிலை, நாட்டின் கல்வித்துறையின் பாரிய வீழ்ச்சியைப் பறைசாற்றுகிறது. ஒருபுறம் பிறப்பு வீதம் குறைவடைந்து பாடசாலைக்குச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சுருங்கிவரும் நிலையில், சேரும் மாணவர்களில் ஐந்தில் ஒருவர் படிப்பை நிறுத்துவது சமூகப் பேரபாயமாகும்.

பாடசாலை தொகுதியின்  இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு. இலவசக் கல்வி என்ற பெயரில் அரசுப் பாடசாலைகளில் மறைமுகமாக அறவிடப்படும் கட்டணங்கள், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க முடியாமை, ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் இல்லாதிருத்தல் போன்றவை மாணவர்களைப் பாடசாலையை வெறுக்க வைக்கின்றன. சில பாடசாலைகளின் நிர்வாகச் சீர்கேடுகள், ஒழுக்கமின்மை மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற போக்குகள் மாணவர்களின் மனநலனைப் பாதிக்கின்றன.

இடைவிலகும் இந்த மாணவர்கள் இறுதியில் எந்தச் சமூகத்திற்குள் நுழைகிறார்கள் என்பதுதான் எழும் முக்கியமான கேள்வி. போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் கும்பல்கள், பாடசாலைக் கல்வியைத் துறந்த சிறுவர்களைத் இலகுவாகத் தங்கள் வலைக்குள் வீழ்த்துகின்றன. போதிய வழிகாட்டல் இல்லாமையும், உளவியல் ரீதியான அழுத்தங்களும் மாணவர்களை இத்தகைய தீய வழிகளுக்குத் தள்ளுகின்றன.

எனவே, கல்வி அதிகாரிகளும் அரசாங்கமும் இந்தப் பிரச்சினையை வெறும் புள்ளிவிவரமாகக் கருதாமல், தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாக அணுக வேண்டும். பாடசாலைகளில் முறையான உளவளத் துணைச் சேவைகளை \ வலுப்படுத்துதல், பொருளாதார நெருக்கடியால் அவதியுறும் மாணவர்களுக்கு நேரடி உதவிகளை வழங்குதல் மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

தேர்வு முடிவுகளில் மட்டும் கவனம் செலுத்துவது கல்வியல்ல; சகிப்புத்தன்மை, ஒழுக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையுள்ள ஒரு தலைமுறையை உருவாக்குவதே உண்மையான கல்வியாகும். நாம் இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால், சமூக ஒழுக்கத்தைச் சிதைக்கும் வன்முறைக் கும்பலொன்றே எதிர்காலத்தில் உருவாகும் என்பதில் ஐயமில்லை. கல்வியைக் காப்போம்; எதிர்காலத்தைச் சீரமைப்போம்.

Leave a Reply