அப்போதெல்லாம் எங்களுடைய வீடுகள் இப்போதிருப்பது போல வானுயர்ந்த மதில்களாலோ, இரும்பு கேற்றுகளாலோ பிரிக்கப்பட்டிருக்கவில்லை. எங்கள் வீட்டு வளவும், பக்கத்து வீட்டு வளவும் ஒன்றோடு ஒன்று ஒட்டித் தான் இருக்கும். ஒரு வீட்டில் முற்றம் கூட்டினால் அடுத்த வீட்டு முற்றத்தில் குப்பை விழும் அளவுக்கு நெருக்கம். இரவில் சாப்பாடு கூடத் திண்ணையில் தான் நடக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் சமைத்த கறிகளை ஒரு பீங்கானில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு நிலா வெளிச்சத்தில் வட்டமாக இருந்து சாப்பிடும் அந்தச் சுவை இன்று எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காது.
அந்தக் காலத்தில் எங்களுடைய தெருவில் ஆட்களை விட சைக்கிள்கள் தான் அதிகம். வீதிக்கே மொத்தமாக ஒரு மூன்று பேரிடம் தான் மோட்டார் சைக்கிள் இருக்கும். அதன் சத்தம் கேட்டாலே ‘இன்னார் தான் வருகிறார்’ என்று ஊருக்கே தெரிந்துவிடும். மற்றபடி எல்லோருக்கும் அந்த துவிச்சக்கரவண்டி தான் ஆஸ்தான வாகனம்.
இன்றைக்கு சிசிடிவி கேமராக்கள், அலாரங்கள் வைத்துப் பூட்டினாலும் ஏதோ ஒரு பயம் மனசுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் 90களில் அப்படி இல்லை. பகல் நேரங்களில் வீட்டின் பிரதான கதவு, வரவேற்பறை கதவு என அனைத்தும் திறந்தே கிடக்கும். சாய்வு நாற்காலியில் தாத்தாவோ, பாயில் அம்மாவோ எந்தப் பயமும் இல்லாமல் நித்திரை கொள்வார்கள். இது இன்றும் சில வீடுகளில் தொடர்கிறது என்பது வேறு விஷயம்.
ஆனால் இரவில் நடக்கும் அந்தப் படுக்கை வைபவம் இருக்கிறதே. அது ஒரு தனி அழகு! கோடை காலம் வந்துவிட்டால் வீட்டின் உள்ளே புழுக்கமாக இருக்கும் என்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பாரபட்சமில்லாமல் எல்லோரும் வீட்டின் முற்றத்திலும் ஏன் தெருவோரத்தில் கூடப் பாய் விரித்து நித்திரை கொள்வோம்.
ஒட்டுமொத்தத் தெருவுமே ஒரு பெரிய படுக்கையறை போலக் காட்சியளிக்கும். இதுதான் அந்த ஊரின் பாதுகாப்பு அரண். எந்தத் திருடனாவது எங்கள் தெருவுக்குள் வந்தால் அடி வாங்காமல் திரும்பிப் போக ஏலாது. ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலும் யாராவது ஒருவர் படுத்திருப்பார். ஒருவரை மிதிக்காமல் திருடனால் தப்பிக்கவே முடியாது.
இந்த அளவுக்குச் சனங்கள் நம்பிக் கிடந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இருந்தது. அதுதான் நேர்மை மற்றும் நம்பிக்கை.
அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டின் வளவுக்குப் பின்னாலும் தான் பாத்ரூம், கிணறு எல்லாம் இருக்கும். அந்தப் பாத்ரூமுக்குள் பித்தளை வாளி, பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடக்கும். ஒருத்தரும் அதைத் தொட மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நேர்மையும், திருடவே முடியாத அளவுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பும் இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு அழகான பசுமையான தெருவில் தான் என் சின்ன வயசு கழிந்தது. அப்போது எனக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு வயது இருக்கும். அது ஒரு கோடைக்கால இரவு.
யாழ்ப்பாணத்தின் கோடைக்கால இரவுகள் மிகவும் ரம்மியமானவை. மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் முழு நிலவின் வெளிச்சம் தான் எங்கள் தெருவுக்கான ஸ்ட்ரீட் லைட். தெருவில் வரிசையாகப் பாய் போட்டு எல்லோரும் நித்திரையில் இருந்தார்கள். நானும் என் அம்மாவின் அருகில் படுத்திருந்தேன்.
சரியாக நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். குளிர்ந்த காற்று முகத்தில் வீசிக்கொண்டிருக்க எனக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் போல ஒரு உணர்வு வந்து முழிப்புத் தட்டியது.
பகல் நேரம் என்றால் பரவாயில்லை. இரவு நேரத்தில் பாத்ரூம் போவது என்பது சின்னப் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய யுத்தம். ஏனென்றால் நான் படுத்திருக்கும் தெருவிலிருந்து எழுந்து படலையைத் திறந்து, வளவுக்குள் நுழைந்து, பெரிய மாமரம், பலாமரம், வாழைக் குட்டிகளைக் கடந்து இருள் சூழ்ந்த வளவுக்குப் பின்னால் உள்ள பாத்ரூமுக்குப் போக வேண்டும்.
அம்மாவை எழுப்பலாம் என்று பார்த்தேன். அவர் பகல் முழுவதும் உழைத்த களைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். சரி நானே தனியாகப் போய் வருவோம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாயில் இருந்து எழுந்தேன்.
நிலா வெளிச்சம் முற்றத்தில் வெள்ளியாய் உருகி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் வளவுக்குப் பின்னால் உள்ள மரங்களின் நிழல்கள் தரையில் வித்தியாசமான உருவங்களாக விழுந்து கிடந்தன. சருகுகள் காலில் மிதிபடும் சத்தம் அந்த நள்ளிரவு அமைதியில் என் காதுக்குள் இடியாக ஒலித்தது.
மெதுவாக நடந்து வளவுக்குப் பின்னால் இருந்த பாத்ரூமை நெருங்கினேன். அங்கே அந்த வாழைக்குட்டிக்குப் பக்கத்தில் பாத்ரூம் வாசலுக்குச் சற்றுத் தள்ளி கருப்பா ஒரு உருவம் நின்றது.
எனது கால்கள் அசைவற்று நின்றன. நெஞ்சுக்குள் இதயம் லப்டப் என்று அடிக்கும் சத்தம் எனக்கே கேட்டது. அந்த உருவம் மனிதனை விடச் சற்று உயரமாக எந்தவொரு அசைவும் இல்லாமல் கும்மிருட்டில் ஒரு அடர்த்தியான கரிய நிழல் போல நின்றுகொண்டிருந்தது.
நிலா வெளிச்சம் அதன் மேல் படவில்லை. முகமோ, கைகால்களோ எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு அமானுஷ்யமான கறுப்பு உருவம்.
“கள்ளனா இருக்குமோ?” என்ற நினைப்பு முதலில் மூளைக்குள் வந்தது. ஆனால் மறுகணமே அந்த எண்ணம் மறைந்துவிட்டது. ஏனென்றால் முன்னால் தெரு வீதி முழுவதும் சனம் படுத்துக் கிடக்கிறது. ஒரு திருடன் அந்தச் சனத்தைத் தாண்டி எப்படி வளவுக்குப் பின்னால் வந்திருக்க முடியும்? அப்படியே வந்திருந்தாலும் திருடுவதற்கு அங்கே என்ன இருக்கிறது? பாத்ரூமுக்குள் இருக்கும் பித்தளை வாளியையா திருடப் போகிறான்? இல்லை. இது நிச்சயமாக திருடன் இல்லை.
அப்படியென்றால் அது என்ன? நல்லதா? கெட்டதா?
பிள்ளைப் பிராயத்துப் பயம் தொண்டையை அடைக்க ஒரு கணம் கூட அங்கே நிற்காமல் வந்த வழியே திரும்பி ஒரே ஓட்டம் எடுத்தேன். என் பின்னாலேயே அந்த உருவம் துரத்திக்கொண்டு வருவது போன்ற ஒரு பிரமை. கால் சருகுகளில் இடற மூச்சு இறைக்க ஓடி வந்து தெருவில் படுத்திருந்த அம்மாவின் பக்கத்தில் விழுந்து போர்வையை இழுத்துத் தலைவரைக்கும் மூடிக்கொண்டேன்.
போர்வைக்குள் என் மூச்சுக்காற்று அனலாக வீசியது. வெளியிலிருந்து நாய் ஊளையிடும் சத்தம் கேட்க அந்த இரவு எனக்கு ஒரு யுகமாக நீண்டது.
மறுநாள் விடிந்ததும் இரவு நடந்ததை என் பாட்டியிடம் பயந்து பயந்து சொன்னேன். பாட்டி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“பயப்படாதையெடா அது கள்ளனோ, பேயோ இல்லை. எங்கடை வளவையும், ஊரையும் காவல் காக்கிற வைரவரோ இல்லையெண்டா முனியோ தான் அப்பிடி ராத்திரியில உலாத்துவார். அவர் வந்து பாத்துட்டுப் போறதால தான் எங்கடை பித்தளை வாளியில இருந்து எங்கடை உயிர் வரைக்கும் பத்திரமா இருக்கு.”
பாட்டி அதைச் சொல்லி என்னைத் தேற்றினாலும் அந்தப் பன்னிரண்டு வயதுப் பிஞ்சு மனசுக்கு அது ஒரு திகிலான அனுபவமாகவே பல வருடங்கள் வரை நீடித்தது.
ஆனால் காலம் ஓட ஓட யாழ்ப்பாணத்தின் அந்தப் பசுமையான 90களும், 2000களின் ஆரம்பமும் மெல்ல மெல்ல எங்களை விட்டுப் பிரியத் தொடங்கின. வீடுகளுக்கு இடையே இருந்த பூவரசு மற்றும் கிளுவை வேலிகள் பிடுங்கி எறியப்பட்டு அங்கே பெரிய பெரிய மதில்கள் முளைத்தன. தெருவில் பாய் போட்டு நித்திரை கொள்ளும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து எல்லோரும் வீட்டுக்குள் ஏசி அறைகளுக்குள் முடங்கிக் கொண்டார்கள். பித்தளை வாளிகள் காணாமல் போய் கொமேட்கள் வந்தன.
வளவுக்குப் பின்னால் நின்ற அந்தக் கறுப்பு உருவம் யார் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அது வைரவரா? முனியா? இல்லை என் சிறுவயது கற்பனை உருவாக்கிய ஒரு நிழலா? என்பதும் தெரியாது. ஆனால் அந்த இரவில் நான் பயந்து ஓடி வந்து மனிதர்களுக்கு நடுவில் படுத்துக் கொண்டபோது கிடைத்த பாதுகாப்பு மட்டும் உண்மையானது.
அந்தத் தெருவும், அந்த மனிதர்களும், அந்த நம்பிக்கையும் தான் எங்கள் காவல் தெய்வம். இன்று வீடுகளைச் சுற்றி உயரமான மதில்கள் இருக்கின்றன. இரும்புக் கேற்றுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மூலையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. ஆனால் அன்றைய மனிதர்களுக்குள் இருந்த அன்பும், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டும் இல்லை.
(Mohanan)