புலமைப்பித்தன்!

வழக்கமான மானே தேனே கண்ணே தமிழ் சினிமாப் பாடல்களிலிருந்து மீண்ட இலக்கிய வரிகளை எழுத முற்பட்டவர் புலமைப்பித்தன்.
தமிழாசிரியர். கோயம்புத்தூர்க்காரர்.

“கோவையின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் சங்கமிக்கும் தோழர் மாரியப்பனின் ‘செந்தமிழ் அச்சகத்தின்’ உரையாடல் சபைகளில் புலமைப்பித்தனும் தொடர்ந்து பங்கெடுப்பார். புலவர் ஆதி எனக்கு அவரை ‘புலவர் ராமசாமி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னாளில் அவர் பிரபலமாகி, அதிமுக சார்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய புலமைப்பித்தனாக கோவை வந்தபோதுதான் நீள் இடைவெளிக்குப்பிறகு சந்தித்தேன் !” என்று கலை இலக்கியப் பெருமன்ற முன்னோடிகளில் ஒருவராகிய மூத்தத் தோழர் பத்திரிகையாளர் மு.பழநியப்பன் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எம்ஜிஆரின் மோதிரக் கரங்களில்
தட்டுப்பட்டவர் புலமைப்பித்தன்.
‘குடியிருந்த கோயி’லில், பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய நாள்தொட்டு, அரசவைப் புலவராக அங்கீகரித்து, சட்ட மேலவையில் துணைத்தலைவராக அமர்த்தியது வரையிலும், புலவரைத்
தன் உள்ளங்கையில் சுமந்தார் மக்கள் திலகம்.
புலவர் எழுதிய பாடல் வரிகளில் மூழ்கி மூழ்கித் திளைத்திருக்கிறேன்.
‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி பச்சைமலை பக்கத்தில’ மேய்வதாகச் சொன்னதில் என்ன நியாயம் என்று கேட்ட வரிகளின் இருதலைக்கொள்ளித் துயரத்தை எவரால் மறக்கமுடியும் ?
‘விண் சொர்க்கமே பொய் பொய் – என் சொர்க்கம் நீ பெண்ணே!’ என்று மொத்தப் பேரின்பத்தையும் காதலியின் காதலில் ஒதுக்கிய சிறுகுறள் அல்லவா அவருடையது?

‘சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது?
சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது?’ என்று ஆரணங்கிடம் வினவிய காதலனல்லவா அவர்?
‘காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்? கரையுது ஏம்மனசு உன்னாலே’ என்று கரைந்தவர், ‘மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா!’ என்றும் சொல்லியே விடுகிறார் பாருங்கள்.

‘மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து, ஒரு இன்ப நாடகம் நடித்து…’ என்று காமத்துப்பாலில் திளைப்பது யார் ? நாயகன் எம்ஜிஆரா ? இல்லை. இப்படியெல்லாம் செய்வது ‘தென்றல்’ காற்றாம். சரிதானா? அடுத்த வரியில் நாயகன் சொல்கிறார், அந்தத் ‘தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே?’. குறும்புக்காரப் பயல் நம் கவிஞன்!
எப்படி வாழவேண்டும்? ‘சிரித்து வாழவேண்டும்’.
எப்படி வாழக்கூடாது? ‘பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!’
இதைவிட எப்படி எளிமையாய்ச் சொல்ல?
‘முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை?
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை?’
இதில் சமூக நீதி எனக்கு விளங்குகிறது.
எங்க ஊரில் ‘சொல்லிவிடு’ என்பதை, ‘சொல்லிப் போடு’ என்பார்கள். ‘ஓடிஓடி உழைக்கணும்… பாட்டில் அந்த கொங்கு வழக்கைப் பயன்படுத்தியிருப்பார். ‘நியாயத்தை’ நாயம் என்பார்கள். அதையும் எழுதினார். ‘காப்பாற்றவேண்டும்’ என்பதை கொங்குத் தமிழில் ‘காக்கோணும்’ என்று எழுதினார். தேடவேண்டுமென்பதை ‘தேடோணும்’ என்றும்.

நீங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தால்,
நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன்.
ஒரு மலையாளச் சானல் பேட்டியில்,
அழகன் படத்தின் சாதிமல்லிப் பூச்சரமே பாடலை ரொம்பவும் சிலாகித்துப் பேசிய மம்மூட்டி, அதிலிருந்த சமூக நோக்கு வரிகளைக் குறிப்பிட்டு, “இதை எழுதியவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கவிஞர் புலமைப்பித்தன்” என்று குறித்தபோது,
என் நெஞ்சம் மகிழ்வுப்பெருக்கால் நிரம்பியது இன்றளவும் ஞாபகமே!
தமிழ் என்றாலே அழகு!
தமிழுக்கு, புலமைப்பித்தன் ஓரழகு!
அவர் இன்று இறந்துபட்டார் என்ற செய்தியை
கவிஞர் சீர்காழி சிற்பியின் முகநூலில் காண நேர்ந்தபோது, வயதின் மூப்புத்தானே என்று கருதிப் போக ஏலவில்லை.
அன்னையின் மார்புச் சரத்திலிருந்து
ஒரு முத்து உதிர்ந்தாலும் பெருநட்டம் !
சரி, காலத்துக்கு வழிவிடுகிறோம்.
காலத்தே அழிக்கமுடியாக் கவிஞனை நினைவிலேற்றுகிறோம்.
வாழ்க புலமைப்பித்தன்!

(Rathan Chandrasekar )