ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 11.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 500 பேர் பலியானதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இன்று (செப்.1) ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். 2500 பேர் காயமடைந்துள்ளனர். நாங்கர்ஹர் பகுதியில் 12 பேர் உயிரிழந்தனர். 255 பேர் காயமடைந்தனர். எண்ணற்ற வீடுகள் தரைமட்டமாயின” என்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், “ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ள கடுமையான பூகம்பத்தால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல் ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர். 63,000 பேர் வீடுகளை இழந்தனர். அதற்கு முன்னதாக ஜூன் 2022-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் உயிரிழந்தனர்.
ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சிக்கல்கள் மிகுந்துள்ளன. தலிபான் ஆட்சியில் வெளிநாட்டு நிதிகள் குறைந்துள்ளன. மோசமான பொருளாதார நிலையால் கடுமையான நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் இன்னும் துயரம் தான்.