எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள். இதுவரையில் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாயார் ஒருவர் கதறி அழுதார். காணாமல் போனோவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14ஆவது அமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (11) நடைபெற்றபோது, அதில் சாட்சியமளிக்கையிலேயே தனது காணாமல் போன மகள் குறித்து சாட்சியமளித்த தாய் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

தவராசா தமயந்தி, 18 வயதான எனது மகள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் புதுமாத்தளான் பகுதியில் வைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றனர். அவர் அப்போது உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். பாடசாலைக்கு சென்ற போது அவருடன் சேர்ந்து வேறு பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

நாங்கள் பல இடத்தில் விசாரித்தோம் ஆனால், எனது பிள்ளை எங்கு இருக்கின்றாள் என தெரியவில்லை. பிள்ளையுடன் பிடித்துக்கொண்டு சென்ற மற்றொரு பிள்ளை, கொழும்பில் ஒரு இடத்தில் எனது பிள்ளையும் இருப்பதாக சொன்னார். ஆனால், வெளியில் தப்பித்து வருவதற்கு பயந்து அவர் வராமல் இருக்கின்றதாக அந்த பிள்ளை கூறியது. அதன் பின்னர் எனது மகளை தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்வில் பார்த்ததாக எங்கட ஊரில சொன்னவங்க.

அதன்பின்னர் எங்கட பிள்ளையை இதுவரையில் காணவில்லை. நாங்கள் எல்லா இடத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளோம். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதல் நடந்த அமர்விலும் சாட்சியம் அளித்துள்ளோம் எங்கட பிள்ளையை கண்டு பிடித்து தாருங்க. என்று கதறி அழுதார் அந்த தாயார்.