ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்

ஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியாக நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இடம்பெற்ற தனித்த பதவியேற்பு நிகழ்வில், பொதுச்சபையின் தலைவர் பீற்றர் தொம்ப்ஸனின் முன்னால், ஐக்கிய நாடுகளின் ஆவணத்தின் முன்னால் கையை வைத்து குட்டரெஸ் பதவியேற்றுக் கொண்டார்.

சிரியாவில் இடம்பெறும் மோதல், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உலகில் ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகம் போன்ற நிலைமைகளின் கீழேயே, போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமரான குட்டரெஸ், எதிர்வரும் முதலாம் திகதி முதல், பான் கி மூனிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல்லின் பிரதமராகவிருந்த குட்டரெஸ், 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பால்சமநிலைத்துவத்தைக் கொண்டுவர எதிர்பார்க்கும் குட்டரெஸ், சிரேஷ்ட பதவிகளுக்கு பெண்களை நியமிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் உப செயலாளர் நாயகமாக நைஜீரியாவின் சூழல் அமைச்சர் அமினா மொஹமட் நியமிக்கப்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.