கடைசி நிமிட த்ரில்லர்: பனாமாவுக்கு அதிர்ச்சியளித்த கானா

2010ஆம் ஆண்டுக்குக் பிறகு முதன்முறையாக விலகல் முறையிலான சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் ஆபிரிக்க கருஞ்சிறுத்தைகளான கானாவுக்கு இந்த 3 புள்ளிகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளன.

ஆரம்பமே அதிரடி: கோல் காப்பாளரின் சாதுரியம்!

போட்டி தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே பனாமாவின் சிசிலியோ வோட்டர்மன் அடித்த வளைந்து சென்ற பந்தை, கானா அணியின் கோல்கீப்பர் லாரன்ஸ் அதி ஜிகி மிக சாதுரியமாக தடுத்து நிறுத்தினார். எனினும், இந்த முயற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் அவருக்குப் பதிலாக பெஞ்சமின் அசாரே கானாவின் கோல் கம்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார்.

நெஞ்சை படபடக்க வைத்த 95ஆவது நிமிடம்!

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடியும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், கூடுதல் நேரத்தின் 5ஆவது நிமிடத்தில் போட்டி தலைகீழாக மாறியது.

கானா வீரர் தாமஸ்-அசாந்தே, பனாமாவின் பின்களவீரர் ஜோஸ் கோர்டோபாவை அலாதியாக ஏமாற்றி, பந்தை கோல் எல்லைக்குள் கடத்தினார். அங்கே மின்னல் வேகத்தில் வந்த 20 வயது இளம் புயல் கலெப் யிரென்கி பந்தை மிக நேர்த்தியாக கோல் வலைக்குள் தள்ளி கானா ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

பனாமாவின் கடைசி நேரப் போராட்டம் வீண்!

கோல் விழுந்த அதிர்ச்சியில் உறைந்த பனாமா, ஆட்டத்தின் இறுதி நொடிகளில் கிடைத்த ‘ஃப்றீ கிக்’ வாய்ப்பின் போது, தங்களது கோல் காப்பாளர் உட்பட அனைத்து வீரர்களையும் கானாவின் எல்லைக்குள் இறக்கி சமன் செய்ய கடுமையாகப் போராடியது. ஆனால், கானா அணியின் அரண் போன்ற தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை. இறுதியில் 1-0 என கானா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

அடுத்த சவால் என்ன?

  • கானா: அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த, குழு எல் பிரிவின் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
  • பனாமா: உலகக்கிண்ணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில், அடுத்த போட்டியில் குரோஷியா அணியுடன் மோதவுள்ளது.

Leave a Reply