சம்பவத்தின் பின்னணி: ஜெய்ப்பூரில் உள்ள ‘ஷஹீத் ஸ்மாரக்’ பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அமைதியான போராட்டத்திற்கு அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார். அவர் ஆதரவாளர்களின் தோள்களில் சுமந்து வரப்பட்டபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென அவரது கழுத்தில் இருந்த துண்டை இழுத்து, அவரை அறைந்து கீழே தள்ள முயன்றனர். இந்தச் சம்பவம் அந்த இடத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
“நான் மவுனமாக இருக்க மாட்டேன்”: தாக்குதலுக்குப் பிறகு பேசிய அபிஜீத் தீப்கே, “எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் நான் வன்முறையில் ஈடுபட மாட்டேன். வன்முறையை கோழைகளே பயன்படுத்துவார்கள். நான் மவுனமாக இருக்க மாட்டேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஜெயின் பிட்டு, “போராட்டக்காரர்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், நிர்வாகமும் மௌனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பதவி விலக வேண்டும்: சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய தீப்கே, “மாணவர்களின் தற்கொலைகளுக்கும், கல்வித் துறையில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். ஒருமுறை தாக்கினாலும், பத்து முறை தாக்கினாலும் எங்கள் கோரிக்கை மாறாது. எங்கள் போராட்டம் அமைதியான வழியிலேயே தொடரும்” என்று உறுதியாகக் கூறினார்.