கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு

தொழிற்சங்கங்கள் இரு வார கால அவகாசம்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தியமயப்படுத்த வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் – நிதி இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் 27 வருடங்களாக இருந்து வருகின்ற அற்புதமான நடைமுறையை இல்லாமல் செய்ய தான்தோன்றித்தனமாக முயற்சிக்கின்றார் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

மாவட்ட, பிரதேச அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற இத்திணைக்கள ஊழியர்களின் சம்பளம், முற்கொடுப்பனவு, கடன் போன்ற விடயங்களை அந்தந்த மாவட்டங்களில் பிரதி பணிப்பாளர் அலுவலகங்களே கையாண்டு வருகின்றன. ஆனால் இவ்விடயங்களை பணிப்பாளர் அலுவலகத்துக்கு பாரப்படுத்த கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் – நிதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இந்நடவடிக்கையை கண்டித்து விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

இவர் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

சம்பளங்கள், கடன்கள் போன்ற நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் மத்தியமயப்படுத்தப்படுகின்றபோது அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும், தூர இடங்களிலும் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் சம்பள விபரங்களை பெறுதல், வங்கி கடன்கள் பெற விண்ணப்பிப்பதற்கு சம்பள கழிவுகளை உறுதிப்படுத்துதல், இடர் கடன் காசோலைகள் பெறுதல் போன்ற சொந்த அலுவல்களுக்காக தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டி இருக்கிறது. கடமை நேரத்தில்  நீண்ட பயணம் மேற்கொண்டு, அதிக பணம் செலவு செய்து வருகின்ற இவர்கள் தலைமை அலுவலகத்தில் கணக்காளரை சந்திக்க முடியாமல் ஏமாந்து திரும்புகின்ற வாய்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் கணக்காளர் வெளிக்கள கடமைகளுக்கு செல்கின்ற சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன.

இதே நேரம் சம்பள விடயங்கள் மத்தியமயப்படுத்தப்படுகின்றபோது 315 ஊழியர்களின் சுய விபர கோவைகள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இது தலைமை அலுவலகத்துக்கு ஒரு மேலதிக சுமை ஆகி விடும். இதை சமாளிக்க மாவட்ட அலுவலகங்களில் இருந்து அலுவலர்களை குறைத்து தலைமை அலுவலகத்துக்கு மாற்ற நேரும். பணிப்பாளர் அடங்கலாக தலைமை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு சம்பள விடயங்கள் மத்தியமயப்படுத்தப்படுவது அறவே பிடிக்கவில்லை என்றும் அறிகின்றோம். தலைமை அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இதே நேரம் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் இப்பணிமனைக்கு இட மாற்றம் செய்யப்படுகின்றபோது ஏற்பட கூடிய போக்குவரத்து முதலாய சிரமங்களை முன்கூட்டியே உணர்ந்தவர்களாக வேறு திணைக்களங்களின் அலுவலகங்களுக்கு மாற்றம் பெற ஏட்டிக்கு போட்டியாக முயற்சிக்க தொடங்கி உள்ளனர். இது மாவட்ட அலுவலகங்களின் வினை திறன் மிக்க சேவைகளிலும், செயற்பாடுகளிலும் தேக்க நிலை ஏற்பட காரணமாகி உள்ளது.

ஆளுனர், முதலமைச்சர், விவசாய அமைச்சர், பிரதம செயலாளர், நீர்ப்பாசன பணிப்பாளர் ஆகியோரை நாம் தொடர்பு கொண்டு முறையிட்டு உள்ளோம். ஊழியர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டையே அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்று விளங்குகின்றது, ஆனால் பிரதி பிரதம செயலாளர் – நிதி மாத்திரம் தொடர்ந்து முரண்டு பிடித்து கொண்டு இருக்கின்றார், இவரின் சர்வாதிகார போக்கை அனுமதிக்க முடியாது, பிரதி பிரதம செயலாளருடன் பேசி சுமூக தீர்வு காணுமாறு பிரதம செயலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்தமைக்கு அமைய தொழிற்சங்கங்கள் இவரை தொடர்பு கொண்டு பேச தயார் என்று சமிக்ஞை கொடுத்தன, பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாக சொன்ன இவர் உத்தியோகபூர்வ அழைப்பை இன்னமும் விடுக்கவே இல்லை என்பதுடன் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தியப்படுத்துகின்ற இவரின் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளார், இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நேர்ந்தால் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் மத்தியமயப்படுத்தப்பட கூடாது என்கிற நிலைப்பாட்டையே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி நிற்கும் என்பதோடு வேறு விதமான தீர்வுகளை ஏற்று கொள்ளவே மாட்டாது, எது எப்படி இருந்தாலும் இவருக்கு இரு வார அவகாசத்தை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வழங்குகின்றது, இவரிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்க பெறாவிட்டால் மாகாண சபைக்கு முன்பாக பாரிய உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுப்பதோடு இவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்துவோம்.