கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதை தெட்டத் தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் தமிழ் மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் இன்னமும் மறக்கவில்லை என்பதையும் அவர்கள் பாதுகாப்பான ஒரு ஜனநாயக சூழலை விரும்புகின்றார்கள் என்பதையும் வாக்களிப்புப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்று எடுத்துக் காட்டியிருக்கும் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவுத் செய்யப்பட்டுள்ள நந்தசேன கோத்தாபய ராஜபக்ச நாட்டில் உள்ள எல்லா இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம்பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும்.

ஒரு தரப்பாரின் வாக்குகளால் பதவி கிடைத்தாலும் ஜனாதிபதிப் பதவிப் பொறுப்பு என்பது நாட்டின் சகல இன மக்களையும் அவர்களின் பிரச்சினைகள், பொறுப்புக்கள், நலன்களையும் தம்மால் கொண்டுள்ளது என்பதை நாம் மறத்தல் ஆகாது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.