தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்துவோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் நேற்றுமுன்தினம் (24) நடைபெற்ற எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் –

தமிழ்த் தேசியத்திற்காகவும், எமது மக்களின் அரசியல் உரிமைக்காகவும், சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் நாம் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் அதற்காக இரத்தமும் சிந்தியவர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் யதார்த்த அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாம் எமது போராட்ட வழிமுறையை மாற்றிக் கொண்டவர்கள்.

02

ஆனாலும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளையும்,தமிழ் தேசிய உணர்வுகளையும் ஏற்று அவைகளுக்காக நாம் தொடர்ந்தும் தனித்துவமான யதார்த்த வழிமுறையில் நின்று அர்ப்பணிப்புடன் உழைத்துவருகின்றோம்.

அன்று நாம் அதிகாரங்களில் இருந்தபோது எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றில் பலவற்றுக்கு தீர்வுகாண்பதில் முடிந்தளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம். அத்துடன் இன்றும் நாம் எமது மக்களின் உரிமைக் குரலாகவும் ஒலித்து வருகின்றோம்.

ஆகவே அன்று செயலில், இன்று குரலில் என்ற வகையில் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் எதிர்காலத்திலும் உழைப்போம் என்றும் உறுதி எடுத்துள்ளோம்.

ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே இன்று நாம் இங்கு ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளுடன் நாம் எமது யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும், எமது மக்களின் ஒருமித்த குரலாக ஒலிப்பதில் அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒன்று சேர்ந்து வெளிப்படைத் தன்மையோடு உழைக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்பதை தொடர்ந்தும் நாம் கூறிவந்திருக்கின்றோம்.

நாம் இவ்வாறு கூறுவதை, யாருடனும் கூட்டுக்கள் அமைத்து ஈ.பி.டி.பி தன்னை கழுவிக்கொள்ள முற்படுகின்றது என்று யாரேனும் நினைத்தால் அது தவறாகும். ஈ.பி.டி.பி தன்னைக் கழுவிக்கொள்வதற்கு சேறு குளித்துக் கொண்டிருக்கவில்லை. எம்மீது அரசியல் பயம் கொண்டவர்களாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாலும் திட்டமிட்ட வகையில் எம்மீது சேறு பூசப்பட்டிருக்கின்றது. அதையும் எதிர்கொண்டு நாம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாக இன்றுவரை இருந்து வருகின்றோம்.

2

மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் அதிகாரத்துக்கு மேலதிகமாக தற்துணிவோடு மத்திய அரசுகளை எதிர்கொண்டு கடந்தகாலங்களில் மக்களுக்கு சேவை செய்திருக்கின்றோம். எம்மை நம்பி வாக்களித்த மக்களினதும், எமது பாதையில் அணிதிரண்டு வரும் மக்களினதும் அபிலாஷைகளை பிரதிபலித்து செயற்பட்டும் வருகின்றோம். ஆகையால்தான் எமது அழைப்பை ஏற்று மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு வருகின்றார்கள். எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுடன் காலம் முழுவதும் நன்றியுடன் நாம் இருப்போம்.

எமது மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு சேவை செய்துவரும் நாம் எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைவாக தனித்துவ அடையாளங்களை பேணிப் பாதுகாக்கும் அவசியமும் எமக்கு இருக்கின்றது. ஆகவே இன்று நடக்கும் எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் நாம் எமது தனித்துவ அடையாளங்களோடு அணி திரண்டிருக்கின்றோம்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உரிமைக்குரலாக ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே நாம் எழுக தமிழ் பேரணியை, கூட்டுப்பேரணியாக நடத்தி முடிப்பதற்கு எமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்தவர்களோ, நாம் வெளிப்படுத்திய ஆதரவானது அவர்களுக்கு ஆட்களை ஒன்றுதிரட்டிக் கொடுப்பதற்காக பயன்படட்டும் என்று இருந்திருக்கின்றார்களே தவிர, ஈ.பி.டி.பியின் நேசக்கரத்தை தோழமையோடு பற்றிக்கொண்டு கூட்டுப் பேரணியாக எழுக தமிழ் பேரணியை மாபெரும் வெற்றியடைச் செய்ய விரும்பவில்லை.

6

ஆனாலும் ஈ.பி.டி.பிக்கு மக்கள் பலம் இருக்கின்றது என்பதையும், ஈ.பி.டி.பியால் பல்லாயிரம் பேரை அணி திரட்ட முடியும் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள். அதற்கு சாட்சியங்களாகவே எனது மக்களாகிய நீங்கள் மிகக் குறுகியகால அழைப்பை ஏற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் இங்கே ஒன்று கூடியிருக்கின்றீர்கள். நீங்கள்தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பலம். எமது உழைப்பின் பலாபலன். எமது அர்ப்பணிப்புக்கான உண்மையான வெகுமதி நீங்கள்தான் என்பதை உரத்துக் கூறுவதில் பெருமையடைகின்றேன்.

பாசமிகு மக்களே..

எமக்கென்று ஒரு இலட்சிய கனவுண்டு. எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒரு போதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் எதிர்காலத்திலும் கூடிய மக்கள் சக்தியுடன் நடத்துவோம் என்று உறுதி எடுப்போம். என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கரம் கொடுப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. நாம் செல்லும் பயணம் வெல்லும். வெல்க எழுக தமிழ் கூட்டுப்பேரணி. உரிமைகளுக்காக எழுக தமிழ் …..கௌரவமான எதிர்காலத்திற்காக எழுக தமிழ் என்று கோஷங்களையும் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடுத்துரைத்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரையை நிறைவு செய்தார்.

(EPDP News)