நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்


மோதலின்போது சிறைச்சாலையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயன்ற கைதிகளைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கைதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசர நிலைமை ஏற்பட்ட தினத்தன்று மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவரது பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை முன்னின்று நடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான “கட்டுவெல்லேகம சுரேஷ்”, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் மற்றும் அவரது 13 கூட்டாளிகள் இணைந்து இந்த மோதலைத் திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவில் “ரொக்கி” எனப்படும் கைதியும் இருப்பதாகவும், சுரேஷுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் அவர் மறைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மோதல் முடிவடைந்த பின்னர், தனக்கு இதில் தொடர்பில்லை என்பதைக் காட்டும் வகையில், மற்ற கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்களை விநியோகிக்க சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து அவர் செயற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கொண்ட குழுவை பாதுகாப்பான முறையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மோதலின்போது காணாமல் போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீண்டும் சிறைச்சாலை வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் கீழ், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 22 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளும் 10 T-58 ரக துப்பாக்கிகளும் பரிசோதனைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.