பங்களாதேஷ் அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதை தொடர்ந்து, பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
பங்களாதேஷில் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவர்.
இந்நிலையில், டாக்காவில் கடந்த 12 ஆம் திகதி பிரச்சாரத்தை தொடங்கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13 ஆம் திகதி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறுபகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல பகுதிகளில் மாணவர்கள்வன்முறையில் ஈடுபட்டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சட்டேகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களை தடுத்து நிறுத்தினர். அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான இடங்கள் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பங்களாதேஷில் கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி இறுதிச் சடங்கில் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பாராளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இராணுவம், பொலிஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, பங்களாதேஷில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிட டாக்கா 8 ஆவது தொகுதியில் ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர் கள மிறங்கினார். கடந்த 12 ஆம் திகதி இவர் டாக்காவில் பிரச்சாரம் தொடங்கினார். பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில் செல்லும் போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹாடியை தலையில் சுட்டுவிட்டு தப்பினர்.
உடனடியாக டாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாடி, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன்பு ஹாடி உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதும் நேற்று முன்தினம் பங்களாதேஷில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பதற்றம் உள்ள இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (வயது 27) என்ற இளைஞர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
பின்னர் அந்த கும்பல் தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தது. இதனால் வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் இடையே பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொலிஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு டாக்கா கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும் ஹாடியின் மறைவையொட்டி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊர்வலத்தில் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார்.
மேலும், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஹாடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பங்களாதேஷின் தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பங்களாதேஷில் தொடர்ந்து போராட்டம், பேரணி, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை பங்களாதேஷ் பாராளுமன்ற வளாகம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இராணுவ வீரர்கள், பொலிஸார் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர். தலைநகரில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,பாராளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இராணுவத் தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. ஹசீனாவுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர்.
இவர் இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வியாழக்கிழமை (18) அன்று இரவு உயிரிழந்து விட்டார். அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.
இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இந்த சூழலில், வங்காளதேசத்தில் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர் துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அவர், மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டுள்ளது. பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். வன்முறை கும்பல், தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ ஆகிய இரு பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடியது. பத்திரிகை வளாகத்தில் தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றது.