போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெய்ன் வீரர்கள் பெல்ஜியத்தின் கோல் எல்லைக்குள் ஆக்ரோஷமாகப் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
ஃபேபியன் ரூய்ஸின் மின்னல் கோல்!
போட்டியின் 30ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தின் உலகத்தரம் வாய்ந்த கோல் காப்பாளர் திபோ கோர்துவா அபாரமாக பாய்ந்து தடுப்பொன்றைச் செய்தார். ஆனால், உருண்டு வந்த பந்தை ஸ்பெய்னின் ஃபேபியன் ரூய்ஸ் சாமர்த்தியமாக பெல்ஜிய பின்களவீரரின் கால்களுக்கு இடையே உதைத்து கோலாக மாற்றினார். பெட்ரிக்குப் பதிலாக ரூய்ஸை களமிறக்கிய பயிற்சியாளர் லூயிஸ் டி லா புன்டேயின் முடிவு சரியானதாக நிரூபணமானது.
ஆனால், பெல்ஜியம் சும்மா இருக்கவில்லை. 11 நிமிடங்களிலேயே (41ஆவது நிமிடம்) சார்ல டி கெட்டிலாவ தலையால் முட்டி ஒரு அற்புதமான கோல் மூலம் ஸ்பெய்ன் கோல் காப்பா:அர் உனாய் சிமோனை வீழ்த்தி ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். நடப்புத் தொடரில் ஸ்பெயின் வாங்கிய முதல் கோல் இதுதான்.
பெல்ஜியத்தை உலுக்கிய காயங்களும்… கண்ணீரும்!
போட்டி தொடங்குவதற்கு முன்பே பெல்ஜிய அணித்தலைவர் யூரி டிலிமான்ஸ், போட்டிக்கு முன்னைய பயிற்சியின்போது காயமடைந்து வெளியேறினார். ஏற்கனவே அமடு ஒனானா இல்லாத பெல்ஜியத்திற்கு, மிகப்பெரிய இடியாக அமைந்தது அவர்களின் அரண் போன்ற கீப்பர் திபோ கோர்துவாவின் காயம்.
இரண்டாம் பாதியில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, அழுதுகொண்டே கோர்துவா மைதானத்தை விட்டு வெளியேறினார். அனுபவமற்ற மாற்று கீப்பர் சென்னே லமென்ஸ் வந்தார். இந்த ஒரு மாற்றம் ஆட்டத்தின் விதியையே மாற்றியது.
மெரினோவின் உலக சாதனை! மீண்டும் ஒரு மாயாஜாலம்
இரண்டாம் பாதியில் ஸ்பெய்னின் 18 வயது இளம் புயல் லமீன் யமால் பெல்ஜிய தற்காப்பு அரணை சிதறடித்தார். போட்டியின் 86ஆவது நிமிடத்தில் மிக்கெல் மெரினோ மாற்று வீரராக உள்ளே நுழைந்தார்.
போட்டி கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என்று நினைத்தபோது, 88ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் பாவ் குபார்சி அடித்த தாழ்வான உதையை லமென்ஸ் கைகளில் பிடிக்கத் தவறி நழுவவிட்டார். அங்கே மின்னல் வேகத்தில் பாய்ந்த மெரினோ, பந்தை கோல் வலைக்குள் திணித்து ஒட்டுமொத்த பெல்ஜியத்தின் இதயத்தையும் உடைத்தார்.
வரலாற்று சாதனை படைத்த மெரினோ
இந்த கோலின் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு புதிய காவியத்தைப் படைத்துள்ளார் மெரினோ:
- உலகக் கோப்பை வரலாற்றிலேயே, இரண்டு வெவ்வேறு விலகல் போட்டிகளில் மாற்று வீரராக களமிறங்கி வெற்றி கோல் (Winner) அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை மெரினோ படைத்துள்ளார்.
கடைசி நிமிட கோலால் நிலைகுலைந்த பெல்ஜியம் தொடரிலிருந்து வெளியேற, 2010-இல் உலகக் கிண்ண வென்றதற்குப் பிறகு முதன்முறையாக ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.