மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், உப அதிபர், மாணவன் கைது

இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வேறு பாடசாலையிலிருந்து வந்த 15 வயதுடைய மாணவன், பாடசாலைக் கட்டிடங்களுக்கு இடையே மறைவாக இருந்த இடத்தில் வைத்து, குறித்த மாணவியை பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குப் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த அதிகார சபை மேற்கொண்ட அறிவுறுத்தலுக்கு அமைய, அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, மேற்படி மூவரையும் கைது செய்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அமில ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply