மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஹூசைனின் இலங்கை விஜயத்துக்கு எதிராக மஹிந்த தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவருடைய வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

அல் ஹூசைன் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதுடன், இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முப்படைப் பிரதானிகள், இராஜதந்திர சமூகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில்யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.

இதற்கு மேலதிகமாக சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மதத்தலைவர்களையும் ஹூசைன் இதன்போது சந்திப்பார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஹூசைனை சந்தித்து தமது கவலைகளையும் எதிர்பார்ப்புக்களையும் முன்வைப்பதற்கு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் எதிர்பார்த்துள்ளன. நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்ற மண்டபத்தில் கூடிய காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஹூசைனை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு அனுமதி கோரத் தீர்மானித்தனர். தமக்கு அவரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு மகஜரொன்றையும் அவர்கள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் கையளித்தனர்.

அவ்வாறு சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத பட்சத்தில் ஹூசைன் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேநேரம், மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் ஹூசைனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

இலங்கைக்கு ஹூசைன் வருவதானது சர்வதேசத்தின் அழுத்தத்தைக் கொடுப்பதற்கே என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைனின் இலங்கை விஜயமானது விசேடமானது அல்ல என்றும், அவருக்கு முன்னரிருந்த இரு ஆணையாளர்கள் இலங்கை வந்துசென்றதுபோல் ஹூசைனும் இலங்கை வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் இலங்கை வந்து சென்றிருந்ததுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்தித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் இன்று இலங்கை வருகிறார்.

இவருடைய வருகையில், மனித உரிமையை பலப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான பிரேரணையை அமுல்படுத்துவதற்கான படிமுறைகள் போன்ற பரந்துபட்ட விடயங்கள் இவரின் விஜயத்தில் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.