யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இருவர், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், தமிழக காவல்துறையினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், வாள்வெட்டுக் குழுவின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை மற்றும் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என, பொலிஸாரினால் சன்னா, தேவா, பிரகாஷ் என்ற 3 பேர் அடையளப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஏனை விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொலிஸார், அவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறும் வெளிப்படையாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், பல்வேறு பொலிஸ் குழுக்களை அமைத்தும், புலனாய்வு ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறித்த நபர்கள் கைது செய்வதற்கு பல்வேறு இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும், அவர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த இவர்களில் பிரதானமாக தேடப்பட்டுவந்த சன்னா தவிர்ந்த தேவா, பிரகாஷ் ஆகியோர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.