“ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” – ஜெலன்ஸ்கி

உக்ரைன் சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (புதன்கிழமை) அந்நாட்டு மக்களிடையே அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது: “ரஷ்யா படையெடுத்தபோது உக்ரைன் அழவோ, அலறவோ, பயப்படவோ இல்லை. பயந்து ஓடவில்லை. விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக மறுபிறவி எடுத்தது. உக்ரைன் மாஸ்கோவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்கான தனது போராட்டத்தை அது ஒருபோதும் கைவிடாது. நாங்கள் பயந்து பேச்சுவார்த்தை மேசையில் அமர மாட்டோம், தலையில் துப்பாக்கியைக் காட்டிக் கொண்டு அமர மாட்டோம்” என்றார்.

சுதந்திர தினத்தின்போது வழக்கமாக களைகட்டி காணப்படும் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் ஒருபடி முன்னோக்கி இருப்பதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6 மாதங்களுக்கு மேலாக நடக்கும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், உக்ரைன் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவருமான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் பலியானது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.