ராகுலை அழைத்த ஸ்டாலின்: 2024 தேர்தல் மெசேஜ்!

அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“2024 மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அளவில் மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இந்த தேர்தலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கியத்துவ இடமும் ஆதிக்கமும் செலுத்திவந்த திமுகவுக்கு… சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய ரோல் காத்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அதேநேரம் காங்கிரஸ் அல்லாத ஓர் அணியை அமைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில வெளிப்படையான முயற்சிகளில் இருக்கிறார். அவர் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவும் அதேபோல ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இவர்கள் பாஜகவுக்கு எதிராக அமைக்கும் அணியில் காங்கிரஸ் இருக்கவேண்டுமென சிவசேனா போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

சமூகநீதிக் கூட்டமைப்பு என அகில இந்திய அளவில் ஒரு அமைப்பை அண்மையில் உருவாக்கியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்… நீட் எதிர்ப்பு, ஆளுநர் அதிகார விவகாரம் போன்ற பிரச்சினைகளில் தேசிய அளவிலான கருத்து ஒற்றுமையை உருவாக்க முயற்சித்து வருகிறார்.

அதேநேரம் 2019 இல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று சொன்ன ஒரே தலைவரும் ஸ்டாலின் தான்.

இந்தப் பின்னணியில் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவுக்கு ராகுல்காந்தியை அழைத்து புத்தகத்தை வெளியிட சொல்லி இருப்பதன் மூலம்…. அந்த புத்தகத்தை மட்டுமல்ல இந்தியாவுக்கான ஒரு செய்தியையும் வெளியிடுகிறார் ஸ்டாலின்.

இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று காங்கிரஸ் கட்சிதான். பாஜகவுக்கு இணையாகவோ அல்லது கூடவோ குறைவோ அதிக எம்பிக்களை பெறும் வாய்ப்புள்ள கட்சியாக இருப்பது காங்கிரஸ் தான்.

இந்த நிலையில் காங்கிரஸ் இல்லாத ஒரு அணி அமைத்தால் மீண்டும் பாஜகவுக்கு சாதகம் செய்வதாக ஆகிவிடும் என்று அண்மையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விருது வழங்கும் விழா மேடையில் ஸ்டாலினை வைத்துக்கொண்டு சொன்னதையும் ஸ்டாலின் மறக்கவில்லை.

மம்தா பானர்ஜி யோடு ஒருபக்கம் நல்ல தொடர்பில் இருந்து வரும் ஸ்டாலின் சரத்பவார், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்ட தென்னிந்தியாவுக்கு அப்பாற்பட்ட மற்ற தலைவர்களுடனும் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஸ்டாலினோடு தொடர்ந்து தேசிய அரசியல் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.

பினராயி விஜயன் கேரள மாநில அளவில் காங்கிரசை எதிர்க்கும் அரசியல் நடத்தினாலும் மத்தியில் மம்தா பானர்ஜியை விட காங்கிரசை ஆதரிப்பதையே விரும்புகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டாலினிடம் அடுத்த மக்களவைத் தேர்தல் குறித்து பேசி வரும் போது, ‘பாஜக அல்லாத எந்த ஆட்சி வந்தாலும் மாநில கட்சிகளின் உரிமைகளை மதிக்கும் ஆட்சியாக இருக்கும். அதற்கு நான் ஒத்துழைப்பு தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில் சென்னை வந்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை அவர் அமைக்க முயற்சிப்பதாக தகவல் வர இதுகுறித்து ஸ்டாலினே அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது சந்திரசேகர ராவ், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் பிரதமர் பதவி என்பதை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும். அடுத்த முக்கியமான பதவிகளை மாநிலக் கட்சிகளுக்கு தரவேண்டும். எந்த ஒரு தேசிய கட்சியும் இனி தன்னிச்சை சுதந்திரத்தோடு இந்தியாவை ஆள கூடாது என்பதுதான் என் நோக்கம். மாநிலக் கட்சிகளின் கடிவாளத்தோடு மத்திய அரசு நடைபெற்றால் தான் அனைத்து மாநிலங்களுக்கும் நல்லது’ என்று கூறியிருக்கிறார் சந்திரசேகர ராவ்.

இந்தப் பின்னணியில்தான் மு. க. ஸ்டாலின் சுய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஒற்றை அணி மட்டுமே மாற்று அணியாக இருக்க வேண்டும் என்பதே இந்த நூல் வெளியீட்டு விழா மூலம் ஸ்டாலின் வெளிப்படுத்தும் மெசேஜ் என்கிறார்கள் திமுக முக்கியஸ்தர்கள்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசும்போது, ‘தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டியாக செயல்படுகிறார்.உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் பெற்ற உற்சாகத்தை நாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்ட வேண்டும். அதன் மூலம் நாம் ஸ்டாலினை தேசிய அளவில் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும்’ என்று பேசியிருக்கிறார் ராசா. சமீப நாட்களாக திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் பலருமே…’ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற போகிறார்’ என்று உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.

நாளை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பிற மாநில முதல்வர்களும், பிற மாநில தலைவர்களும், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் பேசப் போகிற பேச்சு 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேசிய அளவிலான ஒரு தெளிவான வரைபடத்தை தீட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.