வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!

அவசர அவசரமாக ஜப்பான் நாட்டின் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஜப்பானின் குடிமக்களுக்கான பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் எல்லோரும் உறுதியான கொங்கிறீட் இடமாகப் பார்த்துப் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் ஜன்னல்களுக்கு அருகில் எவரும் நின்று கொண்டிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்ட போது ஏவுகணையானது கிட்டத்தட்ட 1,600 கி.மீட்டர் தாண்டி வந்து ஜப்பானின் ஒகினாவா என்ற இடத்தில் விழுந்தது. இந்த ஏவுகணை வடகொரியாவிலிருந்து அங்கு வந்து விழுவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் பத்தே பத்து நிமிடங்கள்தான்.ஆகவேதான் இந்த அறிவுரைகள் தற்போதுள்ள பதற்ற நிலைமையில் ஜப்பானியப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தச் செய்தியை சுமார் 5.7 மில்லியன் மக்கள் படித்துள்ளனர்.

அத்தோடு, கடந்த மாதம் வடகொரியா நான்கு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதில் மூன்று ஜப்பானின் கடல்பகுதியில் வந்து விழுந்தமை தெரிந்ததே.

மேலும் ஏவுகணைத் தாக்குதல் நடந்தால், எப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் பயிற்சி அளித்து வருகிறது. பாதுகாப்பாகப் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

(எஸ். ஹமீத்)