IMF பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் வருகிறது

இது சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் தொடர்புடைய வகையில் மேற்கொள்ளும் ஏழாவது மதிப்பீடாகும். அதனை நிறைவு செய்ததன் பின்னர், அதன் தவணையாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இதுவரை சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த முறை மதிப்பீட்டின் மூலம், நிதியுதவித் திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் இறுதியளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவீட்டு மற்றும் கட்டமைப்பு இலக்குகள் எட்டப்பட்டிருப்பதற்கான முன்னேற்றம் மீளாய்வு செய்யப்படவுள்ளது. இந்த மதிப்பீட்டைத் தொடர்ந்து எட்டாவது மதிப்பீடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதுடன், அதனை நிறைவு செய்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியுதவித் திட்டம் நிறைவுக்கு வரவுள்ளது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பீடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பேரவையின் ஒப்புதல் கடந்த மே 27ஆம் திகதி கிடைத்தது. நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்தது.

Leave a Reply