தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்

 

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்து விட்டன. மற்றவற்றை கடலில் கொண்டு விடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவியராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகை திமிங்கலங்கள் அனைத்துக் கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதன் பெயர் Globicephala Macrorhynchus. குழுவாக வசிக்கும் இவற்றுக்கு தனி சமிக்ஞை இருக்கும்.

குழுவில் உள்ள ஒரு திமிங்க லம் இரை தேடியோ, கடல் நீரோட் டத்தாலோ பிரிந்து சென்று விட்டால் அது சமிக்ஞை கொடுக்கும். உடனே அந்தக் குழுவில் உள்ள மற்றவை அப்பகுதிக்கு மொத்தமாகச் சென்று விடும். அவ்வாறு பிரிந்த ஒரு திமிங்கலம் மணப்பாடு கரைக்கு வந்திருக்கலாம். அதன் சமிக்ஞை கிடைத்து மற்ற திமிங்கலங்களும் கரைக்கு வந்திருக்கலாம்.

‘கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் காயம் ஏதும் இல்லை’ என்றார் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பூங்கா வன பாதுகாவலர் தீபக் எஸ்.பில்ஜி.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்:

இப்பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், அணு உலையுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாகி விட்டது. தற்போது மின் உற்பத்தி நடைபெறவில்லை. உற்பத்தி நடைபெற்ற போது அணுஉலையை குளிர்விக்கும் தண்ணீரின் வெப்பநிலையைக் குறைத்து வெளியேற்றியபோது கூட இவ்வாறு திமிங்கிலங்கள் ஒதுங்கவில்லை.

மேலும், மணப்பாடுக்கும், கூடங்குளத்துக்கும் 40 கி.மீ. தூரம் இருக்கிறது. இதற்கும், அணுமின் நிலையத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

மணப்பாடு கடற்கரையில் திமிங்கிலங்கள் மொத்தமாகக் கரை ஒதுங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் திகதி 147 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.

ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்து விட்டன.

அதேபோல்தான் இப்போதும் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. ஒரே காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே ஒரே நேரத்தில் 95 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. இதில் 45 திமிங்கிலங்கள் இறந்து விட்டன. 50 திமிங்கிலங்களை உயிரோடு மீட்டு கடலில் விடும் பணி நடந்து வருகிறது.

ஆழ்கடல் உயிரினமான திமிங்கிலங்கள் அதிக அளவில் கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கடற்கரைப் பகுதியில் மாலை வேளையில் 30 திமிங்கிலங்கள் திடீரென கரை ஒதுங்கின.

அவை அனைத்தும் உயிரோடு இருந்தன. மீனவர்கள் இரவு வரை போராடி அவற்றை இழுத்துச் சென்று கடலுக்குள் விட்டனர். இதில், 3 திமிங்கிலங்கள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே கிடந்தன.

கல்லாமொழி பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் விட்ட திமிங்கிலங்கள் அனைத்தும், காலை மணப்பாடு கடற்கரை யில் ஒதுங்கின. மணப்பாடு முதல் கல்லாமொழி வரை 95 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன்வளத் துறையினர், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனத்துறை அதிகாரிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து திமிங்கிலங்களை காப்பாற்றி கடலுக்குள் விடும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பூங்கா வனப்பாதுகாவலர் தீபக் எஸ்.பில்ஜி, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மணப்பாடு பகுதியில் முகாமிட்டு, திமிங்கிலங்களை கடலில் விடும் பணிகளை முடுக்கி விட்டனர். மீனவர்கள் உதவியுடன் திமிங்கிலங்களை இழுத்து கடலில் விட்டனர். ஆனால், அவை மீண்டும் கரைக்கே திரும்பி வந்தன. இதனால் அவற்றைக் காப்பாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இறந்தன. மாலை வரை 17 ஆண் திமிங்கிலங்கள், 20 பெண் திமிங்கிலங்கள், 8 குட்டிகள் என மொத்தம் 45 திமிங்கிலங்கள் இறந்து விட்டன.

முதிர்ச்சி அடைந்த திமிங்கிலம் 1 தொன் வரையும், குட்டிகள் 150 முதல் 200 கிலோ வரையும் இருந்தன. சுமார் 2.6 மீட்டர் முதல் 4.6 மீட்டர் வரை நீளம் கொண்டவையாக காணப்பட்டன.

50 திமிங்கிலங்கள் கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கடலுக்குள் உயிரோடு உள்ளன. அவற்றை பத்திரமாக படகுகள் மூலம் இழுத்து கடலில் விடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை மிகவும் சோர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, அவையும் இறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இறந்த திமிங்கிலங்களை பிரேதப் பரிசோதனை செய்து கடற்கரையில் புதைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 95 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பது கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய திமிங்கிலங்களை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். இதனால், கடற்கரை பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.