இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142 கோடி செலவில் 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ஒவ்வொரு முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.

இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.  

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.

தி.மு.க., அரசாங்கம்  இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.