ஈழத் தமிழர் அரசியல்

ஈழத்தில் தமிழர் வரலாறு பல்லாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது லெமூரியாவிலிருந்து பிரிந்த துண்டம் எனும் கதையாடல்களும் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் கோளினால் தமிழகத்திலிருந்து பிய்ந்த தொங்கு தசை எனும் நம்பிக்கைகளும் பழங்குடிகள் பற்றிய வரலாற்று செய்திகளும் பின்னர் எல்லாளன் , சேனகன் , குட்டன் தொடர்ந்து வந்த சேர சோழ பாண்டிய தொடர்புகளும் , குளக்கோட்டன், ஆடகசெளந்தரி, வன்னிபங்கள், மாகோன் சங்கிலியன், பண்டார வன்னியன் என நீண்ட அரசுரிமை வரலாறும்.ஈழம் முழுவதும் கண்டெடுக்கப் பட்ட தொல்லியல் சான்றுகளும் கல்வெட்டுக்களாயும் வாழ்விட அழிபாடுகளாயும்,தாழி மற்றும் மட்பாண்ட சுடு மண் சிற்பங்களும் குளங்களை அண்டி கட்டமைக்கப் பட்ட ஊர் குடியிருப்புகளும் ஆற்றோர படுக்கைகளின் வழி நீண்ட தொன்மைக் கால வாழ்விடங்களும் உதாரணமாக மாவலிக் கரையில் செழித்திருந்த திருக்கரசை நாகரிக மரபு என நம் வரலாற்று சுவடுகள் .

நவீன யுகத்தில் சேர் பொன் அருணாசலம் தொடக்கம் இன்றய நம் இளைஞர்கள் வரை நீண்ட தனித்துவ அரசியல் செல் நெறிகள் ஒரு முகமாக ஒருங்கிணைய முடியாத ஒரு அவல அரசியல் களத்தில் நாம் நிற்கிறோம்.

பழைய தலைமைகளோ தங்கள் தலைக்கேறிய பிரமுக அரசியலுக்குள் புதையுண்டு போய்க் கிடக்கிறது ஓய்வு பெற்ற உயர் உத்தியோக வர்க்க மேலாண்மை குணாம்சமுள்ளவர்களை முதன்மைப் படுத்தும் பிற்போக்கு அரசியல் கொண்டவர்களின் கூடாரமாக மாறிப் போய் உள்ளது.

வலது சாரி மனோபாவம் மண்டிப் போனவர்களைக் கொண்ட கூட்டமாக தமிழ் தேசியம் என்ற மாய முக மூடிக்குள் மறைந்து போய் உள்ளது.

அரச உத்தியோகத்தில் இருக்கும் போது சம்பளத்துக்கு வேலை செய்த இவர்கள் அதை மூலதனமாக கொண்டும் பின்னர் ரோர்ரரியன்களாக,லயன்களாக மேட்டுக்குடி சமூக ஆர்வலர்களாக முகம் காட்டிய பலர் இன்று அரசியல் சாயம் பூசி மக்கள் சேவகர்கள் என்ற வேடமாணிந்து வலம் வரும் அவல அரசியலாய் முகம் காட்டி நிற்கிறது.

மாற்று அரசியல் பேசுவோரும் ஒன்றாய் இணைய முடியாமல் தனித் தனியன்களாய் கொள்கை அரசியல் பேசினாலும் மக்கள் மத்தியிலான தாக்கம் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மாற்றம் ஒன்றை ஈழத் தமிழ் மக்கள் நாடி நிற்கின்றனர் எல்லா பிரதேசங்களிலும் அதிருப்தி முன்னய தலமைகள் மீது நிலவுகிறது சம்பந்தமானவர்கள் உண்மையாய் உழைத்தோரை புறந்தள்ளி துரைத்தன மேலாண்மை காட்டி நிற்கின்றனர்.

நம் மத்தியில் எந்த வித எதிர் பார்ப்புமின்றி சமூக சேவையாற்றும் பலர் இப்போதும் பரவலாக எல்லா பிரதேசங்களிலும் உள்ளனர்.அவர்கள் கண்டு கொள்ளப் படாதவர்களாகவே உள்ளனர்.

தன்னலமற்ற முற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல் மற்றும் பொதுமக்கள் சார்பான இளைஞர்களையும் ,பெண்களையும் முதனமைப் படுத்தி இடது சாரிக் கொள்கையுடனான தமிழ் அடையாள அரசியல் ஈழத்தமிழர்களுக்கான மாற்று அரசியலாக முன்னெடுக்கப் படுதல் முக்கியப் படுகிறது.

(Balasingam Sugumar)