போரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை

இலங்கை உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று எதிர்வு கூறுவது சாதாரணமாக எல்லோருக்குமே மிகக்கடினமாக இருந்தது. புலிகளிலிருந்து இலங்கை இராணுவம் வரை, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களென பல ஆயிரக்கணக்கனோர் யுத்தத்தால் மடிந்திருந்தனர். இவ்வாறு மடிந்தவர்களின் எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாகவே, காயமுற்று அங்கங்களை இழந்தவர்களும் பாரிய தழும்புகளை சுமந்தவர்களும் இருந்தார்கள். நான்கு இலட்சம் பேரளவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைவிட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13000 பேருக்கு மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் 2009 இல் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இனிமேல் இதேமாதிரியான அல்லது வேறெந்த வடிவிலான யுத்தமொன்று மூழுவதற்கான வாய்ப்பு இல்லையென்று பலரும் நம்பினார்கள். கால் நூற்றாண்டுக்கு மேல் நீடித்த யுத்தத்தை பலத்த இழப்புகளின் மத்தியில் முடித்து வைத்த இலங்கை அரசு, தேசிய இனப்பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வொன்றினைக் காண்பதிலும் முழுமூச்சாக ஈடுபடலாமெனவும் சகல தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. வடக்குக்கிழக்கில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள், எனவே புலிகள் போன்றதொரு இயக்கம் மீண்டும் முளைத்தெழவே சாத்தியமில்லையெனவும் அறுதியிட்டு சொல்லப்பட்டது. ஆனாலும் 1971 இலும் 1989 இலும் ஜே.வி.பியினரது கிளர்ச்சிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான சூழல்களை தனித்தனியாக எடுத்து நோக்கி, அந்த நிலைமைகளை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரை எதிர்வு கூறுவதற்கும் பொருத்திப் பார்க்கப்ட்டது. அதாவது குறிப்பாக புலிகளின் எச்சசொச்சங்கள் ஜே.வி.பி. போன்று ஒரு பிரதான பாராளுமன்றக் கட்சியாக உருவெடுக்கலாம் என்றும், அதற்கு புலிகளை ஆதரித்த வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் ஆதரவும் நிதிவளங்களும் பயன்படுத்தப்படலாம் என்றும் ஆரூடங்கள் சொல்லப்பட்டன.

யுத்தம் முடிந்து 8 வருடங்கள் முழுமையாகக் கழிந்துவிட்ட நிலையில் இன்று திரும்பிப்பார்த்தால், இலங்கை யுத்தமற்ற தேசமாகவும், இலங்கையின் எந்தப் பாகத்திலும் கிளர்ச்சிகள் எதுவும் தோன்றுவதற்கான ஒரு சிறியளவிலான வாய்ப்புகளில்லாத சூழலுமே நிலவுகின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை எய்துவதற்கான நிலைமை ‘விட்டுவிட்டெரியும் மின்குமிழின் வெளிச்சமாக’ இருக்கின்றது. அதாவது தீர்வு இதோ வந்துவிடும் போல் ஆரவாரங்கள் கேட்கும், பின்னர் நீர்த்துவிடும் என்ற கடந்தகால நிலைமையே தொடர்கின்றது. குரூரத்தன்மை, ஆயுதபலம், பணவளம், ஆதரவுத்தளம் போன்றவற்றால் இலங்கையையும் தமிழ் பேசும் இனங்களையும் ஆட்டிப்படைத்த புலிகள், முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் அல்லது தேர்தல் கட்சிகளின் வரிசையில் தனித்துவமாக இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால் புலிகளால் உருவாக்கப்பட்டு, புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்டுவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்குக்கிழக்குத் தமிழர் தரப்பின் பெரிய தேர்தற்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இலங்கை அரசுமீது ஐ.நா. மனித உரிமைகள் சபை ஊடாக ‘சர்வதேசம்’ போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் என்பது எவராலுமே எதிர்பார்க்கப்படாத ஒன்று. யுத்தம் முடிவடைந்து 2 வருடங்களின் பின்னரே விழித்தெழுந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை, யுத்தகாலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக கூற ஆரம்பித்ததிற்கு பின்னணிக் காரணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசு, ஏகாதிபத்திய நலன்களுக்கு வளைந்து கொடுக்காத தன்மை கொண்டதாக நடந்து கொண்டது என்பது நிட்சயமாக முக்கியமானதொரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னர், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தளர்வான, விட்டுக்கொடுக்கும் போக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இதனைப் பார்க்கையில் போர்க்குற்ற விசாரணையென்பது முன்னைய அரசுக்கு மாத்திரமே எதிரானது என்பதைத் தீர்க்கமறச் சொல்லாம். அத்தோடு முன்னைய அரசுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் போர்க்குற்ற விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வரும் ஆதிக்க சக்திகளுக்கும், குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அரசுகளுக்கும் பாரிய முரண்பாடுகள் நிலவியிருந்தன என்பதையும் உறுதிப்படுத்தலாம்.

1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. கிளர்ச்சிகள் தோற்கடிக்கப்பட்ட போதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டாரகள். அப்போதெல்லாம் ‘சர்வதேசம்’ அதைக்கண்டும் காணாமல் இருந்தது. அதற்குக் காரணம் அந்தக் கிளர்ச்சிகள் இலங்கை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைக் கவிழ்க்கும் நோக்கங்கொண்ட கிளர்ச்சிகளாக இருந்தன. இதனால் சர்வதேச ஏகாதிபத்தியங்கள் அமைதியாக இருந்தன. ஏனெனில் எந்தவொரு நாட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கெதிரான புரட்சி என்பது, உலக ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான புரட்சி என்பதை ஏகாதிபத்தியங்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றன.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழ்ந்த உள்நாட்டு யுத்த காலகட்டத்திலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. அப்போதெல்லாம் ஐ.நா.மனித உரிமைகள் சபை அவை தொடர்பாக அறிக்கைகள் மாத்திரமே வெளியிட்டு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது. காலனி நாடுகளில் சுரண்டிய மூலதனத்தேட்டத்தை திரட்சியாக வைத்திருந்து, தங்களை அபிவிருத்தியடைந்த நாடுகளென சொல்லிக்கொள்ளும் நாடுகள், காலனியாதிக்கம் முடிவடைந்த பின்னர் தங்கள் முதலீட்டுக்காகவும் சந்தைக்காகவும் பாதுகாப்பிற்காகவும், மூன்றாமுலக நாடுகளென்று அழைக்கப்படும் அபிவிருத்தி குன்றிய நாடுகளை தங்கள் காலடியில் வைத்திருப்பதற்கு கையில் எடுத்திருக்கும் முக்கிய ஆயுதந்தான், மனித உரிமைகள் மீறல்கள் பற்றிப் பேசுவது.

யுத்ததத்திற்கு பின்னரான இலங்கை உள்நாட்டு அரசியல் என்பது முற்றுமுழுதாக நடந்து முடிந்துபோன யுத்த விளைவுகளிலேயே இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறத்தில், யுத்தத்தை வென்று தென்னிலங்கை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடிருக்கும் முன்னைய ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சிக்கு வராமல் அந்நிய சக்திகளுடன் துணையோடு போடப்பட்டுக் கொண்டிருக்கும் (ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள், தேர்தல்களை பிற்போடுதல்) தடைகளும், மறுபுறத்தில், அரசியல் தீர்வு, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், யுத்தத்தில் காணாமற்போனவர்கள் மற்றும் சிறையிலிருக்கும் புலிக்கைதிகளை விடுவித்தல் போன்றவற்றிற்கான போராட்டங்களும் இதற்கு சான்றுகள் பகிர்கின்றன.

வானவில் இதழ் 83, கார்த்திகை 2017
http://manikkural.wordpress.com/