உலகத்தை இன்னும் ஒரு போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ட்றம் இன் ஐநாவின் பேச்சு

(சாகரன்)
நடந்து முடிந்த ஐநாவின் வருடாந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சு உலக மக்களின் கவனத்தை அச்சுறுத்தல் என்ற வகையில் ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவை முற்றாக அழித்தொழிப்பது என்ற பேச்சாக இருக்கட்டும்…. ஈரான் மீதான சமாதான சகோதரத்து செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறை கூவலாக இருக்கட்டும்… அமைதிப் பூங்காகவாக இருந்து அதி உச்ச போர்களமாக மாற்றப்பட்ட சிரியாவில் ஏற்பட்டுவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வுகளை நிராகரிப்பதாக இருக்கட்டும் எங்கும் உலகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பை நிராகரிக்கும் போக்குடையதாகவே ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

இல்லாமல் போய்விட்ட கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றித்துடனான உறவுகள் ட்றம் காலத்தில் முழுமையாக வெளியிடப்பட்ட நிலையில் ஐரோபிய ஆசிய நாடுகளில் சமாதான சகவாழ்வை ஓரளவேனும் நிறுவ சீனாவும் ரஷ்யாவும் ஐரொப்பிய நாடுகளும் ஸ்கன்டினேவியன் நாடுகளும் எடுத்து முன் முயற்சிகள் அமெரிக்காவை உலக அரங்கில் இரண்டாம் நிலைக்கு பின் தள்ளிவிடும் என்ற பயமே அமெரிக்க அதிபரின் இந்த சினத்திற்கான காரணம் என்பதை உளவியல் புரிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

என்னவோ எல்லாம் செய்து அகற்ற முடியாத சிரிய அதிபர் அல் பசீரின் ஆட்சியும் இதனை அகற்ற உருவாக்கப்பட்ட ஐஎஸ் இன் அமெரிக்காவின் கரங்களை மீற சென்றதும் இதனையும் அடக்க முடியாமல் தவித்த போது ரஷ்யாவின் சில கால பிரசன்னம் ஐஎஸ் அகற்றி சிரிய உள்ளநாட்டு யுத்தத்திற்குள் இருந்து அமெரிக்க தலையீட்டடை அம்பலப்படுத்தியது மட்டும் அல்லாது முதன் முதலில் சோவியத் யூனியனின் உடைவிற்கு பின்பு அமெரிக்காவை தவிர்த்து ஒரு சமாதான பேச்சு வார்த்தையை நடாத்தியது அமெரிக்காவிற்கு தன் கரம் நழுவிப் போகும் உலக பொலிஸ்காரன் செயற்பாட்டடை எப்பாடுபட்டாவது மீண்டும் அடைந்தாக வேண்டும் என்பதற்கான போர் முரசு கொட்டலையே நடந்து முடிந்த ஐநா தொடரின் பேச்சுக்களில் அமெரிக்க தலைவர் வெளிப்படுத்தினார்.

எதிலும் அமெரிக்கா முதன்மை என்பது எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளின் கோஷங்களாக இருந்தாலும் உலக மயமாக்கல் என்று முதலாளித்துவம் கண்டுபிடித்த சவக்குழியில் தானே விழுந்துவிட்ட நிலையில் இன்று எல்லாம் அமெரிக்காவிற்கே அதுவும் அமெரிக்காவிற்குள்ளேயே என்ற வாதமும் கோஷமும் முதலாளித்துவம் தனக்கான சவக் குழியை இன்னும் ஆழமாக வெட்டத் தொடங்கிவிட்டது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு வேறு மதில் கட்டி மறைப்பிற்குள் வாழும் தனி இராஜ்ஜி சிந்தனை வேறு.

உலகத்திற்கு பொதுவான யுத்தம் ஒன்றை வலிந்து ஏற்படுத்துவதில் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டிய தருணம் சகல மக்களுக்கும் முன்னெப்போதையும் விட அதிகமாக ஏற்பட்டிருக்கின்றது என்பதனை சமிக்கை மூலம் எடுத்துக் காட்டிய போர் அறைகூவல் பேச்சாக அமைந்திருக்கின்றது ட்றம் இன் பேச்சு.
வடகொரியா இதுவரை எந்த நாட்டின் மீதும் படை எடுத்தது இல்லை அவர்களின் படை இன்று வரை எந்த நாட்டிலும் இல்லை. இந்தியா பாகிஸ்தான் உட்டபட முக்கிய வல்லரசு நாடுகள் ஐந்துடன் கூடவே பல ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் ஆபத்துக்கள் பேசப்படாமல் வட கொரிய மட்டும் பேசப்படுவது சீனாவிடம் வாங்கிய பல கோடி கடன்களை திருப்பிச் செலுத்தாலமல் இருக்க உருவாக வேண்டிய யுத்தத்திற்கான முஸ்தாப்பா எனறு எண்ணத் தோன்றுகின்றது. தென் கொரியாவில் அமைக்கப்பட்ட அமெரிக்க ராடர்கள் சீனா ரஷ்யா போன்ற நாடுகளை பல குழல் துப்பாக்கிகள் போல் அவதானிப்பதை மட்டும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது எந்த நீதிக்குள் அடங்கும்.

உடைத்து இல்லாமல் செய்தல் தடை விதித்து நலிவடையச் செய்தல் நட்பு நாடுகளை இல்லாமல் செய்து பலவீனப்படுத்தல் என்று ரஷ்யாவிற்கு எதிராகவும் உற்பத்தி செய்யும் பண்டங்களை தரமற்றவை என்று சீனாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்தும் உலக வர்த்தகம் அமெரிக்க டாலரில் மட்டும் நடைபெற வேண்டும் அது ஏனைய நாட்டு சிறப்பாக சீன நாணயத்தில் நடைபெறக் கூடாது என்று தடை போட்டு பொருளாதார வல்லரசான சீனாவை தனக்கு பின்னால் வர செய்யும் தடாவின் ஒரு அங்கமே வடகொரிய ‘அழித்தொழிப்பு’ என்ற சங்கார அறிவிப்பு. ஆனால் என்ன செய்தாலும் சீனா ஆபிரிக்கா மத்திய அமெரிக்க நாடுகள் வரைக்கும் தனது பொருளாதார திட்டங்களை நகர்த்திய வண்ணமே உள்ளது. இதற்கு அது ரஷ்யாவுடன் இணைந்து தமது நட்பு நாடுகளை காத்தே நிற்கும். ஐ நாவில் யுத்த அறை கூவல் ஒரு புத்தி குறைந்தவரின் இயலாமையின் ஈனக் குரலே!
(செப்ரம்பர் 21, 2017)