என் உணர்வுகளை பிரபலித்திருக்கும் முகிலன்

(Saakaran)

நான் பல முஸ்லீம் நண்பர்கள் நண்பிகளோடு பழகியிருக்கிறேன்.

அவர்கள் ஒரு தடவையேனும் வார்த்தைகளால் கூட என்னை காயப்படுத்தவில்லை…

பெண்கள் என்றால் முகத்தை மூடி இருப்பார்கள் 
பெரும்பாலான ஆண்கள் தாடி வைத்திருப்பதால் பாதி முகத்தை மூடி இருப்பார்கள் . ஆனாலும் அவர்கள் மனசைத் திறந்து என்னோடு பழகினார்கள்.

நான் எந்த மார்க்கத்தையும் வெறுப்பதில்லை அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது.

அவர்கள் எல்லோருடைய வார்த்தைகளிலும் அல்லா ஒருவனே இறைவன் என்ற நம்பிக்கை மட்டுமே தெரிந்தது.

பொதுவாக என் வாழ்க்கையில் இன்னொருவருக்காக நான் நேரத்தை செலவழிப்பது மிகக் குறைவு.

அவர்கள் நாள் ஒன்றுக்கு பலமுறை தொழுவதை பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

நோன்பு காலங்களில் ஓரிரு தடவை பள்ளிவாசல் சென்று இருக்கிறேன்.

அவர்கள் வீடுகளுக்கு செல்லும்போது வரவேற்பும் உபசரிப்பும் மறக்கவே முடியாதது.

என் மதத்தைப் பற்றி அவர்கள் ஒருபோதும் தாழ்வான கருத்துக்களை பகிர்ந்ததில்லை…

அவர்களின் மத பரப்புரைகளை என்னில் திணித்ததும் இல்லை…

நான் எப்படி அவர்களை சகமனிதர்களாக பார்த்தேனோ அவர்களும் அதே போலவே என்னை நேசித்தார்கள்.

என் துயரங்களில் பங்கு எடுத்திருக்கிறார்கள் என் சந்தோசங்களை மிக படுத்தியிருக்கிறார்கள்.

குர்ஆன் வாசிப்பதை வழமையான பழக்கமாக வைத்திருந்தார்கள்.

ரம்ஜான் காலங்களில் என்னையும் கொண்டாட்டங்களில் இணைத்துக் கொள்வார்கள்.

கடவுளிடத்தில் பயமும் உயிர்களிடத்தில் அன்பும் அவர்களின் இஸ்லாமில் நான் பார்த்தேன்.

இப்போதைய சூழ்நிலையில் தயவு செய்து எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் !

நெடுந்தீவு முகிலன்