எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வித்திட்ட 1971 கிளர்ச்சி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், போரின் போது உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களை, வருடத்தில் இரண்டு தினங்களில் நினைவுகூருகிறார்கள். போரின் காரணமாக முதன்முதலாக சங்கர் என்னும் புலி உறுப்பினர் கொல்லப்பட்ட நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகவும் பெயரிடப்பட்டு, அவ்வாறு நினைவுகூரப்படுகிறது.

அதேபோல் தெற்கில், மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது இரண்டு கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்டவர்களை, இரண்டு நாட்களில் நினைவுகூருகிறார்கள். 1971ஆம் ஆண்டு அவர்களது முதலாவது கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட ஏப்ரல் 5ஆம் திகதி சித்திரை வீரர்கள் தினமெனவும் 1989ஆம் ஆண்டு அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட தினமான நவம்பர் 13ஆம் திகதி மார்கழி வீரர்கள் தினமெனவும் பெயரிடப்பட்டு, கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.

உயிர்நீத்த புலிகளை நினைவுகூருவது இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணியினர் தமது உயிர்நீத்த சகாக்களை நினைவுகூருவது தடைசெய்யப்படவில்லை.

புலிகளின் ஆயுதப் போர் மட்டுமன்றி அவர்களது இலட்சியமும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளமையும் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதப் போரன்றி, அவர்களது இலட்சியமான சோசலிஸம் தடை செய்யப்படாதிருத்தலும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எனவே, மக்கள் விடுதலை முன்னணி, இவ்வருடமும் ஏப்ரல் 5ஆம் திகதி, நாட்டில் பல இடங்களில் 1971ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியை நினைவுகூர்ந்தது. அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தீவிர இடதுசாரிக் குழுவான முன்னணி சோசலிஸக் கட்சியும், அதேபோல் பல கூட்டங்களை நடத்தியது. மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, முற்றாகவே முதலாளித்துவ அரசியலில் கரைந்துவிட்டுள்ளதால், இறந்தவர்களைப் பற்றி அக்கட்சி அலட்டிக் கொள்ளவில்லை.

1971 கிளர்ச்சியானது, இந்நாட்டு வரலாற்றின் மீதும் தமிழ் மக்களின் வரலாற்றின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்றாகவே கருதப்படுகிறது. அது, 20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மக்கள் மத்தியில் இருந்து ஏற்பட்ட முதலாவது எழுச்சியாகும். அதற்கு முன்னர் இலங்கையில், 1848ஆம் ஆண்டிலேயே அக்கால பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியொன்று ஏற்பட்டு இருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாக இருந்த போதிலும் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியும், உத்தியோகபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகவே கருதப்பட்டது. கிளர்ச்சி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் எதிராக, அதற்காகவே நிறுவப்பட்ட குற்றவியல் நீதி ஆணைக்குழு முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் போது, பிரிட்டிஷ் மகாராணியாருக்கு எதிராக சதி செய்ததாகவும் போர் புரிந்ததாகவுமே குற்றஞ்சாட்டப்பட்டது.

ஏனெனில், அது சுதந்திரத்துக்குப் பின்னரான காலப் பகுதியாக இருந்தபோதிலும், அப்போது இருந்த மகா தேசாதிபதி (கவர்னர் ஜெனரல்), பிரிட்டிஷ் மகா ராணியாரின் பிரதிநிதியாகவே கொள்ளப்பட்டார்.

ஏப்ரல் கிளர்ச்சி எனப்படும் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியும் அதற்குத் தலைமை தாங்கிய மக்கள் விடுதலை முன்னணியும், இலங்கை வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்;ளன. அக்கட்சி, இலங்கையின் வரலாற்றை வெகுவாக மாற்றியமைத்தது என்றும் கூறலாம்.

அந்தக் கிளர்ச்சியில் பங்குகொண்ட போதிலும், தற்போது மக்கள் விடுதலை முன்னணியோடு தொடர்புகளற்று இருக்கும் சிலர் ஒன்றுகூடி, இம்மாதம் 5ஆம் திகதி கொழும்பில் நினைவுகூரல் நிகழ்வொன்று நடத்தப்பட்டது. அதில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமிநாதன் விமல், அக்கிளர்ச்சியானது, அண்மைக்கால வரலாற்றில் ஆயுதம் ஏந்திய எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தொட்டிலாக அமைந்த நிகழ்வாகும் எனக் கூறினார்.

அது, ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாகும். ஏனெனில், அதன் பின்னர் தான் வடக்கிலும் கிழக்கிலும் தென்பகுதியிலும் ஆயுதம் ஏந்திய மக்கள் எழுச்சிகள் உருவாகின. அதேபோல், படுகொலைகள் உள்ளிட்ட அடக்குமுறைகளும் ‘டயர் சிதை’ போன்ற புதிய சித்திரவதை முறைகளும் அதற்கான புதிய சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

தென்பகுதி இளைஞர்களின் அந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தினாலேயே, வடக்கு- கிழக்குப் பகுதி இளைஞர்கள், அதற்குச் சில வருடங்களுக்குப் பின்னர் ஆயுதம் ஏந்தினார்கள் என சில ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அரசாங்கங்கள், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக மீறியமையும் தமிழ்த் தலைவர்கள், வெறும் வீராப்புப் பேசுவதில் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலையிலும், ஏப்ரல் கிளர்ச்சி, ஆயுதம் ஏந்துவதற்காக தமிழ் இளைஞர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

அவ்வாறு ஏற்பட்ட தமிழர்களின் 30 வருடகால கிளர்ச்சி, அவர்களது வரலாற்றையும் நாட்டின் வரலாற்றையும் வெகுவாகவே திசை திருப்பியது. அது ஒரு இலட்சம் உயிர்களையும் காவுகொண்டது. 1971ஆம் ஆண்டுக் கிளர்ச்சியின் தாக்கத்தால், 1988-89 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியும், மேலும் சுமார் ஒரு இலட்சம் உயிர்களைக் குடித்தது.

1971ஆம் ஆண்டு கிளர்ச்சியை, வழிதவறிய சில இளைஞர்களின் சிறுபிள்ளைத்தனமான செயலாக அப்போதைய ஆட்சியாளர்கள் வர்ணித்த போதிலும், அது இலங்கையின் அரசியல் வரலாற்றின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, அந்தக் கிளர்ச்சியின் காரணமாகவே அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

ஏனெனில், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள், கிராமப்புற இளைஞர்களாகவே இருந்தனர். காணிப் பிரச்சினையே கிராமப்புற மக்களின் பிரதான பிரச்சினையாக அரசாங்கம் கருதியது. எனவே, அதனை ஓர் அளவுக்காவது தீர்க்க வேண்டும் என அரசாங்கம் கருதியது. அது தீர்வாக அமைந்ததா இல்லையா என்பது தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயமாகும்.

அதேபோல், 1972ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் அதுவரை காலமும் இருந்த அரசியல் தொடர்பைத் துண்டிக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தூண்டப்பட்டதும், ஏப்ரல் கிளர்ச்சியின் தாக்கத்தினாலேயே ஆகும்.

மக்கள் விடுதலை முன்னணி, அக்காலத்தில் ஐந்து அரசியல் வகுப்புகள் (விரிவுரைகள்) மூலம், தமது புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்தது. ‘இலங்கையின் சுதந்திரமானது, நவ காலனித்துவ தந்திரோபாயமே’ என்ற தலைப்பிலானது, அவற்றில் ஒன்றாகும்.

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை அடைந்ததாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்தும் மகாராணியாரின் நிர்வாகமே நாட்டில் நிலவுவதாகவும் நாட்டின் அதி உயர் நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்புக்கு எதிராகவும் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் (Pசiஎல ஊழரnஉடை) மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் எனவே, சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி, அந்த வகுப்பின் மூலம் வாதிட்டது.

இதனால் ஏற்பட்ட சுதந்திர வேட்கையை, அரசாங்கத்துக்கு எதிராகப் போராட, இளைஞர்களைத் தூண்டிய பிரதான காரணமாகக் கருதிய ஸ்ரீமாவோவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம், அந்தப் பிரச்சினைக்கு தீர்வாகும் வகையில் 1972ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் சுதந்திரத்துக்குப் பின்னர் முதன் முதலாக ஸ்ரீமாவோவின் அரசாங்கத்துக்கே கிடைத்திருந்தது.

அந்த அரசியலமைப்பின் பிரகாரம், இலங்கை, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அரசியல், நிர்வாக மற்றும் நீதித்துறை ரீதியிலான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டது. இலங்கை ஒரு குடியரசாக மாறியது. இலங்கை, ஸ்ரீ லங்காவாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி, தமது இரண்டு கிளர்ச்சிகளின் போதும் இரண்டு முறை அரச அடக்குமுறைக்குள்ளாகியது. 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, 20,000க்கும் மேற்பட்டவர்கள், அரச படைகளால் கொல்லப்பட்டனர். 1988-89 ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டாவது கிளர்ச்சியின் போது, சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது, வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற 30 ஆண்டு காலப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமான எண்ணிக்கைiயாகும்.

முள்ளிவாய்க்கால் சண்டையின் போது பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைப் போல், ஜே.வி.பி-யின்

இரண்டாவது கிளர்ச்சியின் போது ரோஹண விஜேவீர உட்பட அக்கட்சியினதும் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்த அடக்குமுறைகளுக்குப் பின்னரும் அக்கட்சி, அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைக்கு வந்துள்ளது. 2001ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்திய 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, மக்கள் விடுதலை முன்னணியே. அந்த ஆண்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகியதால், அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படவே, நிபந்தனையுடன் அரசாங்கத்தின் துணைக்கு வந்த ம.வி.மு, சந்திரிகாவின் அரசாங்கத்தை வற்புறுத்தி, அந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றச் செய்தது.

2003ஆம் ஆண்டு புலிகள் இயக்கம், சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. பின்னர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நிபந்தனையாக, இடைக்கால நிர்வாக சபையொன்றுக்கான திட்டமொன்றை முன்வைத்தது. உண்மையிலேயே அது, போரின்றி சட்டபூர்வமாக தமிழீழத்தை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இருந்தது. ரணிலின் அரசாங்கம் அதனை உணர்ந்ததோ இல்லையோ, அதனையும் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ள விரும்பியது. ஆனால், அதற்கிடையில் ம.வி.மு தலையிட்டு, ஜனாதிபதி சந்திரிகாவை வற்புறுத்தி, ரணிலின் அரசாங்கத்தைக் கலைக்கச் செய்து, புலிகளின் அந்த முயற்சியைத் தோற்கடித்து, நாட்டின் வரலாற்றின் திசையை மாற்றிவிட்டது.

ம.வி.மு, இலங்கை அரசியலுக்கு புதியதொரு கலாசாரத்தையும் அறிமுகப்படுத்தியது. தியாகம், அதில் முக்கிய அம்சமாக அமைந்தது. கிளர்ச்சிகளின் போது உயிர்த் தியாகம் செய்ததற்குப் புறம்பாக, சொந்த வாழ்க்கையில்லாத, கட்சிக்காகவே வாழ்வோரைத் தோற்றுவித்த முதலாவது கட்சி, ம.வி.மு-யே ஆகும். இன்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தாம் பெறும் சம்பளத்தைக் கட்சியின் நிதிக்கே வழங்குகிறார்கள். பின்னர், ஏனைய உறுப்பினர்களின் உதவியைப் பெற்று குடும்பம் நடத்திக் கொண்டு, முழு நேரத் தொண்டர்களாகவும் கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், நீண்ட காலமாக இந்தத் தியாகத்தை பலரால் செய்ய முடியாது. எனவே, புலிகள் இயக்கத்தில் இடம்பெற்றதைப் போலவே பெரும்பாலானவர்கள் நியாயமான காரணங்களையும் போலியான காரணங்களையும் கூறிக் கொண்டு, கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிடுகிறார்கள். புதிதாக இளைஞர்கள், கட்சியில் இணைகிறார்கள். இதன் காரணமாக, புலிகள் இயக்கத்தைப் போலவே

ம.வி.மு-உம், எப்போதும் இளைஞர்களின் இயக்கமாகவே இருந்து வந்துள்ளது.

ம.வி.மு உறுப்பினர்களின்; தியாகம் இன்றும் தொடர்கிறது. எனவே, கிளர்ச்சிகளின் போது காணப்பட்ட குரூரத்தன்மைக்காக எவரும், ம.வி.மு-ஐக் குற்றஞ்சாட்டினாலும், ஊழல் பேர்வழிகள் எனக் குற்றஞ்சாட்ட முடியாது. அவர்கள், இரண்டு முறை திஸ்ஸமகாராம பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தாம் நேர்மையான நிர்வாகிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.

ஆனால், விந்தை என்னவென்றால், அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பவர்களும், தேர்தல்களின் போது பிரதான இரு கட்சிகளில் ஒன்றுக்கே வாக்களிக்கிறார்கள். இதனை அறிந்திருந்தும், 1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 51 வருடங்களாக தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் தியாகங்களைச் செய்து, அரசியலில் ஈடுபடும் ம.வி.மு தலைவர்களும் உறுப்பினர்களும் வித்தியாசமான அரசியல் பிறவிகள் என்றே கூற வேண்டும்.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)