தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.

வருந்துகிறோம் தோழர்களே. வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த விசைப்படகுகள் என்ன தொழிலை மேற்கொண்டன என்ற விபரத்தை நீங்கள் ஏன் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்….? ட்ரோலர்தானே? ட்ரோலராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப் படுவதில் தப்பே இல்லை. அப்படியான நாசகாரத் தொழிலை மேற்கொண்டிருப்பார்களேயானால் அவற்றைப் பறிமுதல் செய்வதே சரியானது. நேற்று முன் தினம் எமது மீனவர்களின் ஆறு படகுகளின் நைலோன் வலைகளை அனலை தீவுக்கு மேற்குக் கடலில் தமிழக ட்ரோலர் படகுகள் அப்படியே அறுத்து நாசம் செய்துள்ளன.

தமிழகத்து இந்த நாசகாரத் தொழிலால் ஈழத்து மீனவர்கள் கடன்பட்டு வாங்கிய தமது தொழில்துறை எல்லாவற்றையும் இழந்து குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ட்ரோலர் தொழிலுக்கு தமிழகத்தில் தடை உண்டல்லவா? அப்படியிருக்க 12000க்கும் அதிகமான ட்ரோலர் படகுகள் எப்படி தமிழகக் கரைகளில் இன்னமும் இருக்கின்றன….? இருகரை மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுபவர்கள் இந்தத் தடை செய்யப்பட்ட நாசகாரத் தொழில் பற்றி இதுவரை ஏன் வாய் திறக்கிரார்கள் இல்லை….?
தமிழகத்து இழுவைப் படகுகளை ஒழிக்காமல் இருகரை மீனவர்களின் பிரச்சனை பற்றிப் பேசுவதெல்லாம் சுத்தப் பம்மாத்து.
பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபங்களுக்காகப் பலியிடப்படும் தமிழக மீனவர்களைப் பற்றிய கரிசனை யாருக்குமே இல்லை. அரசியல்வாதிகளுக்கு இருக்கப் போவதில்லை என்பது தெரியும். ஆனால் தமிழகத்து ஊடகக்காரர்களுக்கும் இல்லை என்பதே பெரு வருத்தம். எந்தத் துணிவுள்ள ஊடகக்காரராவது இந்த நாசகாரத் தொழிலைப் பற்றிப் பேசுவார்களா, எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அப்படி யாரும் இதுவரை ஒரு வார்த்தை மூச்சு விட்டதாகத் தெரியவில்லை.
மன்னித்துக்கொள்ளுங்கள் தோழர். இப்படியான நாசகாரத் தொழிலைச் செய்பவர்களை இலங்கை அரசு கைது செய்வதற்கு எதிராக ஈழத்து மீனவர்களால் குரல் கொடுக்க முடியாமலுள்ளது.
தமிழக மீனவர்கள் ஈழக் கடலுக்குள் கைது செய்யப் படுவதையும், கொல்லப்படுவதையும், ஆக்கினை செய்யப் படுவதையும் எதிர்த்து 30வருடங்களுக்கும் மேலாக நாம் கண்டனங்களையும், விசாரணைக் கோரிக்கைகளையும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
அடுத்த எனது தொகுப்பும் இந்த இருகரை மீனவர்கள் காணாமல்ச் செய்யப் பட்டதற்கான விசாரணையை கோரித்தான் வெளிவருகின்றது.
ஆனால் தமிழக மீனவர்களைக் கூலிகளாக வைத்து இழுவைப் படகுத் தொழிலைச் செய்யும் பெருமுதலாளிகள் தமது இலாபங்களிலெயே கரிசனையாக இருந்து, தமிழகத்து அப்பாவி மீனவர்களைப் பலியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக ஊடகங்களும் இந்த முதலாளிகளின் நாசகாரத் தொழிலை மூடி மறைத்து, கைது, கடலில் கொலை, நடுக்கடலில் அட்டூழியம் என்று பிரச்சாரித்துக்கொண்டு மறுபக்க உண்மைகளை மறைத்து, நாசகாரப் பெரு முதலாளிகளுக்கு ஊழியம் செய்கிறார்களே ஏன்…?
தோழர்களே, உங்களிடம் நான் கேட்கிறேன், அத்தனை ஈழத்து மீனவ உறவுகள் சார்பாகக் கேட்கிறேன்.
தமிழகத்திலுள்ள ட்ரோலர் படகுகள் எத்தனை, அவை யார் யாருக்குச் சொந்தமானவை, தடையுத்தரவு இருந்தும் இவை இன்னமும் ஏன் பாவனையில் உள்ளன…. இவற்றை உங்களால் எழுத முடியுமா?
நீங்கள் பணியாற்றும் ஊடகங்கள் இவற்றைப் பிரசுரிக்குமா?
(இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் ட்ரோலர் படகுகளின் படங்களையே வெளியிடுகின்றன. எவ்வளவொரு விவஸ்த்தையற்ற ஊடகத்தனம். இதிலிருந்து என்ன விளங்குகின்றது…? படு கோமாளித்தனம் என்பது இதைத்தான்)
Thamayanthi Simon