தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா?

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன.

நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் சூழல் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில், மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்திய நகர்வுகளில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

தேர்தல் அரசியலுக்குள், தமிழ்த் தேசிய அரசியல் சுருக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், ஒவ்வொரு தேர்தலையும் முக்கிய கட்டமாகவே கட்சிகள் அணுகும். டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற சந்திப்பும், மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி, தன்னை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.

ஆனால், அதனையும் தாண்டிய முக்கிய நிகழ்ச்சி நிரலொன்று இருப்பதற்கான காட்சிகள் மெல்ல விரிந்து வருகின்றன.

13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புகளும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. ஆனால், அதனை தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வாக, தமிழ்த் தேசிய கட்சிகள் என்றைக்குமே கருதியதில்லை.

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னராக ஏற்பட்ட அரசியல் இராஜதந்திர மாற்றங்களின் பின்னரும் கூட, 13வது திருத்தச் சட்டத்தினை இறுதித் தீர்வாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் எவையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக புறக்கணித்துவந்த கூட்டமைப்பு, 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த போதும், 13ஆவது திருத்தச் சட்டத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் பிரசாரங்களின் போதும் அதனை வெளிப்படையாகவே அறிவித்தும் இருந்தது.

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டது போலாகிவிடும். எனவே கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழ் சிவில் சமூக அமையத்தினால் முன்வைக்கப்பட்டது.

தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்றால், கூட்டமைப்பு நேரடியாக போட்டியிடாது சுயேட்சைக்குழு ஒன்றினூடாக போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ‘கூட்டமைப்பு நேரடியாக போட்டியிடாது விட்டால், அது அரச ஆதரவுக் கட்சிகளுக்கு வாய்ப்பாக போய்விடும். அது, ராஜபக்‌ஷர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியதாக சர்வதேச ரீதியில் பதிவு செய்யப்பட்டுவிடும்’ என்று கூறிய இரா.சம்பந்தன், கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் முடிவினை அறிவித்தார்.

அத்தோடு, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னராக கூட்டமைப்பு முழுமையாக ஒருங்கிணைப்போடும் தயார்ப்படுத்தலோடும் எதிர்கொண்ட தேர்தலாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்தது. அதன்மூலம், மக்கள் வழங்கும் ஆணையை கூட்டமைப்புக்கான ஏக நிலைக்கும் பயன்படுத்த அவர் நினைத்தார்.

மாறாக, எந்தவொரு இடத்திலும், 13வது திருத்தச் சட்டத்தினை இறுதித் தீர்வாக முன்வைத்திருக்கவில்லை. இதுதான், கடந்த சில மாதங்களுக்கு முன்னரான காட்சிகளாக இருந்தன.

ஆனால், கடந்த சில மாதங்களாக, 13ஆவது திருத்தச் சட்டத்தினை, அதாவது மாகாண சபை முறையை தமிழ் மக்கள் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிகழ்ச்சி நிரலொன்று மேலெழுந்திருக்கின்றது.

13வது திருத்தச் சட்டத்தினை தன்னுடைய கௌரவப் பிரச்சினையாகவே, இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்து இந்தியா கருதி வருகின்றது.

மாகாண சபை முறையை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆனால், அது தன்னுடைய அதிகாரத்தினை அல்லது கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு போதாது என்பது இந்தியாவின் எண்ணம்.

அதனால்தான், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்களில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியது. அதற்காகவே பல தடவைகள் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைந்து மன்மோகன் சிங் சந்திப்பை நடத்தியும் இருந்தார்.

ஆனால், ஆரம்பத்தில் இந்தியாவின் வலியுறுத்தலை அமைதியாக உள்வாங்கிய கூட்டமைப்பு, அதனை அடுத்த கட்டங்களில் தீர்வாக ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை என்றும் அறிவித்திருந்தது.

அப்படியான நிலையில்தான், தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்கிற அடிப்படையிலான ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன.

அவற்றுக்குப் பின்னால், இந்தியா இருப்பதான சந்தேகம் பலமாகவே எழுந்திருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே, டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற சந்திப்பையும் கருத வேண்டியுள்ளதாக தமிழ்த் தேசிய தரப்புகள் சந்தேகம் வெளியிடுகின்றன.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சி, இன்னோர் அங்கத்துவக் கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததும், அதனை உணர்ந்துதான் என்பது பலரது எண்ணம்.

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், இந்தியாவோடு இணக்கமாகவே இருக்க விரும்புகின்றார்கள். எந்தவொரு தருணத்திலும் இந்தியாவோடு தூசி அளவுக்குக் கூட முரண்பட்டுவிடக் கூடாது என்பது அவர்களின் நினைப்பு.

அண்மையில், முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை இடம்பெற்ற இழுவை வலை மடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் போராட்டத்தில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளாமைக்கும் அதுதான் காரணம்.

குறித்த போராட்டத்தில், யாராவது இந்தியாவுக்கு எதிராக கோசம் எழுப்பிவிட்டால், அது தங்களுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திவிடும் என்பது அவர்களின் நினைப்பு.

அப்படி, இந்தியாவை அனைத்து விதத்திலும் சந்தோசப்படுத்த நினைக்கும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களினால்கூட, 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்களுக்கான தீர்வாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தால், அது அவர்களின் அரசியல் வாழ்வை இல்லாமல் செய்துவிடும் என்பது தெரியும்.

அப்படியான சூழலில்தான், புதிய சில அமைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் ஊடாகப் 13ஆவது திருத்தச் சட்டத்தினை, தமிழ் மக்களுக்கான தீர்வாக வலியுறுத்தும் கட்டமொன்றை இந்தியா முன்னெடுப்பதான சந்தேகம் எழுந்திருக்கின்றது.

அதனால்தான், டெலோவின் அழைப்பினை தமிழரசுக் கட்சி புறக்கணித்திருக்கின்றது. தனி நாட்டு கோரிக்கைகளில் இருந்து, தமிழ்த் தரப்புகள் மீண்டும் சமஷ்டிக் கோரிக்கைகளுக்குள் தங்களை நிரல்படுத்தியிருக்கின்றன.

மாகாண சபை முறைமை, சமஷ்டிக் கோரிக்கைகளுக்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்பதால்தான், 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்படியான சூழலில் சமஷ்டிக் கோரிக்கைகளில் இருந்தும் கீழிறக்கி, 13வது திருத்தத்துக்குள் சுருக்கும் தேவைப்பாடோடு செயற்படும் தரப்புகள் குறித்து, தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

டெலோவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கூட்டத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக வலியுறுத்தும் கோரிக்கையே பிரதானமாக அமைந்தது. அப்படியான நிலையில்தான், அந்தச் சந்திப்பின் நோக்கம் பலரினாலும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது. அதனை, தீர்க்க வேண்டியது டெலோவின் கடமை.