தமிழ் மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கி கல்வியைத் தொடர இடைஞ்சலாக உள்ளனர்

மேலுள்ள உள்ள காட்சியும் உண்மையும் புறம்பானது. யூலை 15 2016இல் சிங்கள மாணவர்கள் மீது முதலில் தாக்கியது தமிழ் மாணவர்களே. அப்படங்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதன் பின்னரே சிங்கள மாணவர்கள் தடிகளை எடுத்தனர். இப்படங்களையே ஊடகங்கள் வெளியிட்டன. இன்று தமிழ் மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கி கல்வியைத் தொடர இடைஞ்சலாக உள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் ஆண்டு மாணவன் மீது இறுதியாண்டு மாணவர்கள் கற்கள் கொண்டு கோரத்தனமாகத் தாக்கியது தொடர்பாக கலைப்பீட மாணவர் கஜீபன் பாலசிங்கம் எழுதிய பதிவு என்னுள் எழுந்த பல கேள்விகளை ஒரு விரிவுரையாளரே கேட்டுள்ளார். கலைப்பீடத்தில் சமூக சிந்தனை கொண்டவர்களும் இருக்கின்றார்கள் என்பது சிறு நிம்மதியைத் தருகின்றது. ஆனால் அவர்கள் எப்போது மிருகத்தனமாகத் தாக்கப்படுவார்களோ என்ற பயமும் உள்ளது.

Balasingam Kajeepan:

நேற்றைய தினம் (Jan 11) இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்பாக எனக்கு கற்பித்த ஒரு ஆசிரியர் என்னிடம் கேட்ட போது ஒரு சில விசயங்கள என்னிடம் கேட்டார்..? வழமையாக அவருடனான விவாதங்களின் போது ஏதாவது ஒன்றை சொல்லி என் தரப்பை நியாயப்படுத்திவிடுவேன். இந்த தடவை ஏதோ ஊமை போல ஆகிவிட்டேன் .

1. “உங்களால ஒரு சின்ன பல்கலைக்கழகத்தோட ஒரு பீடத்துக்குள்ளயே ஒற்றுமையா இருக்க முடில நீங்கள் எல்லாம் ஏன் இன ஒற்றுமை பற்றி பேசுறீங்க…?

02.ஒரே மொழிய பேசுற அண்ணன் தம்பி போல பழகின படிச்ச உங்களாலயே ஒருத்தங்கள ஒருத்தங்க புரிஞ்சுக்க முடிலயே பிறகு பெரும்பான்மையை சேர்ந்தவன் அடக்கினான் என்டு கோசம் போடுறதுல என்ன பயன்…?

03.அரசியல் கைதிகள் போராட்டம், மாவீரர் நாள் இதெல்லாம் செய்யுறப்போ உணர்வு அப்பிடி பொங்கி வழியுது. நம்ம சமூகமும் உங்கள நம்புது .. இதுதான் நீங்க அவங்களோட நம்பிக்கைய காப்பாத்துற விதமா..?

04:ஏற்கனவே நீ 2 வருச படிப்ப 3 வருசமா படிக்குற.. 4 வருச படிப்ப இப்பிடியே 6 வருசமாக்கப் போறீங்களா..? இப்போ பல்கலைக்கழகம் இடைநிறுத்தப்பட்டது வசதி படைச்ச பிள்ளைங்களுக்கு சரி ஏதோ வீட்டோட இருக்குற ஒரு விடுமுறை காலமா இருக்கும். நிறைய தூரங்களுல இருந்து எவ்வளவோ கஷ்டத்துல படிக்க வந்திருக்க புள்ளைகளோட நிலை உங்களுக்கு தெரியுமா..? இங்க அந்த புள்ளைகள் படிக்கனும் னு வீட்டுல பசி கிடந்து ஏதோ ஒரு நம்பிக்கைல புள்ளைகல படிக்க வைக்கிறாங்க. உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா..?

05. பல்கலைக்கழக மாணவர்கள் நாலு இடத்துல போய் கஷ்டப்பட்ட புள்ளைங்களுக்கு படிப்பிச்சாங்க நல்லது செய்தாங்க என்டு செய்தில வர்ரது தான படிச்ச உங்களுக்கு அழகு..? அங்க சண்டை 03 பேர் ஆஸ்பத்திரியில என்டதுல என்ன பெருமை..?

06:பல்கலைகழகம் போன உங்களாலயே ஒழுக்கம், நல்ல விழுமியயம் இதுகள கடைப்பிடிக்க முடில. நாளைக்கு ஆசிரியர் வேலை செய்றம் என்டுற பேர்ல சமூகத்துக்குள்ள இறங்குற உங்களுட்ட படிக்கப்போற பிள்ளைகளோட தரம் எப்பிடி இருக்கும்..? உங்களால எப்பிடி ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். ..?

07: அந்த பிரச்சினையின் போது நின்ற ஒருவராலேனும் பாதிக்கப்பட்ட மாணவனின் உயிருக்கு ஏதேனும் நடந்திருந்தால் அவனுடைய குடும்பத்தை பார்க்கும் துணிவு உள்ளதா.

08: கல்லை வைச்சு அடிக்குறளவுக்கு காட்டுமிராண்டிகளா நீங்க…? அப்புறம் நீங்க படிக்குற படிப்பால என்ன பயன்…?

உண்மையிலேயே இந்த வினாக்களுக்கான பதில் என்னிடம் இல்லை. அத்துடன் இந்தப்பதிவு தனித்து யாரையும் சுட்டும் நோக்கிலேயோ யாரையும் புண்படுத்தும் நோக்கிலேயோ இல்லை.அவர் கேட்ட வினா . ? இல்லை இப்பதிவு தவறு எனில் மன்னித்துக்கொள்ளுங்கள்.

சற்று சிந்தித்தால் பல்கலைக்கழகம் என்ற போர்வையில் எமது சமூகதுக்கான எம்முடைய அடைவு மட்டம் பூச்சியம் மட்டுமே ..!

யாரிடமாவது அந்த ஆசிரியரின் வினாக்களுக்கு பதில் இருந்தால் தெரிவிக்கலாம்…!

(Jeyabalan Thambirajah)