விவசாயிகள் தினம் அது தைப் பொங்கல் திருநாள்

இனிய விவசாயிகள் தின வாழ்த்துகள். மற்ற எந்தப் பண்டிகைகளையும் விட தை பொங்கல் திருநாள் எனக்கு எப்போதும் அதிகம் இனித்தே இருந்து வருகின்றது மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான உணவை உற்பத்தி செய்யும் தொழிலை தொழிலாளர்களை மனதில் கொண்டு கொண்டாடப்படும் தினம் என்பதே இதற்கு முக்கிய காரணம். நூன் பிறந்த மண்ணில் மக்கள் தமது வாழ்விற்காக பல தொழில்களை முதன்மையாக செய்தாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் எமது உணவுத் தேவையைக் கருதி பகுதி நேர செயற்பாடாக விவசாயத்தில் ஈடுபட்டோம் என்பது என் மகிழ்விற்கான இன்னொரு காரணம் ஆகும். சொந்தமாக நிலமற்றவர்கள், வீடற்றவர்கள் கூட தாம் வாழும் சூழலில் பயன்தரும் உணவு பயிர்களை நாட்டியதும் இந்த விவசாயத் தொழிலின் ஒரு அங்கம்தான் இதற்கு நாம் பிறந்த நாட்டின் தட்ப வெப்ப நிலையும் காரணம்தான். விவசாயத்திற்கு தேவையான சக்தி வளத்தை வழங்கும் சூரியனை வணங்குதலும் அதற்கு மரியாதை செலுத்துவதும் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் ஒரு நியாயத் தன்மையை கொண்டிருப்பதாகவே உணரப்படுகின்றது.

தை பொங்கல் இதனையும் ஒட்டியப ண்டிகையாகும் கூடவே எங்களில் ஒருவராக கருதப்படும் (கால் நடைகளுக்கு)பசுவிற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு கௌரவ நிகழ்வுகளும் இத்துடன் கலந்திருப்பது என்ற பல்வேறு வலுவான காரணிகள் எனக்கு தை பொங்கல் பண்டிகை மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. கூடவே நமது தேசத்தில் வீசும் வாடைக் காற்றும் இதன் உதவியுடன் பறக்க விடப்படும் பட்டமும் இதற்குள் ஒழிந்திருக்கும் ஒரு போட்டிச் செயற்பாடும் பெருமிதமும் இதனை அனுபவித்து கொண்டாடும் தினமாகவும் தை பொங்கல் பண்டிகை அமைந்திருப்பது எனக்கு இப்பண்டிகையை குதூகலித்து கொண்டாடிய பல தருணங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் அப்பால்தான் தமிழர் புதுவருடம் என்று சிங்களவர் கொண்டாடுகின்றார்கள் என்பதற்காக சித்திரைப் புது வருடத்தை ‘நிராகரிக்கும்’ போக்கும் தமிழ் திருநாள் என்ற தமிழ் அடையாளங்கள் என்று முன்னிலைப்படுத்த முற்படும் தைப் பொங்கலுக்கான அடையாளங்கள் எல்லாம். உணவை உற்பத்தி செய்யும் உழைப்பையும் இதற்கு ஆதாரமான சக்தி வளம், கால் நடைகளை மரியாதை செய்யும் தினம் எனக்கு அர்த்தமுள்ளதாகவும், குதூகலிக்கும் கொண்டாட்டமாகவும் உணரப்படுவதில் வியப்பொன்றும் இல்லையே