தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [2]

ஈடுசெய்ய முடியாத இழப்பு அவரின் பெருமூச்சில் வெளிப்பட்டாலும், எதையும் தங்கும் உறுதியான மனநிலையை அவர் இழக்கவில்லை. ஸ்டாலின் அண்ணா இல்லை என்ற தனிமை அவரை தளர்வடைய செய்தபோதும், அவர் தன் நிலை தவறவில்லை. அதன் வெளிப்பாடு தான் மாலினி எப்படி இருக்கிறா? என என் மனைவி பற்றிய விசாரிப்பு. 16 வருடங்கள் எந்த தொடர்பும் இன்றி இருந்த என்னை, என் குரலைவைத்தே அடையாளம் கண்ட அக்கா, என் மனைவியின் பெயரையும் ஞபகத்தில் வைத்திருந்தது, அவர் எவ்வளவுதூரம் எம்முடன் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதற்கு சாட்சி. காரணம் தினம் தினம் ஸ்டாலின் அண்ணாவை தேடி செல்லும் எண்ணற்ற தோழர்கள் அக்காவின் கையால், காபி அல்லது காலை உணவு உண்டவர்களே. அத்தனை பேரின் பெயர்களும் அவவுக்கு அத்துப்படி. பல தோழர்கள், அவர்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை அக்கா என்னிடம் கேட்டபோது நான் சற்று வெட்கி தலைகுனிந்தேன். காரணம் அவர் நலன் விசாரித்த எவருடனும் நான் தொடர்பில் இல்லை. அது என் தவறில்லை என்பது மட்டுமே உண்மை. வரதனின் கடைசிமகள் [கேரள சினிமா நடிகை] பற்றிய கூறியபோது அவ இங்கதான் கும்பகோணத்தில் தான் பிறந்தா என, அக்கா கூறிய போது ஆச்சரியப்பட்டேன். ஈ பி ஆர் எல் எப் உறுப்பினர் அனைவரின் விபரங்களும் அக்காவின் மனதில் அழியாத கோலமாக இன்றும் இருப்பது, அவரை என் மனதில் ஒரு தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தியது.

1984ல் ஸ்டாலின் அண்ணாவுடன் காலை உணவு உண்டபின் அவருடன் கடைத்தெருவில் இருந்த, அவர்களுக்கு சொந்தமான கிருஸ்ணா பிஸ்கட்ஸ் பேக்கரி மற்றும் அதனுடன் இணைந்திருந்த எமது சிறிய காரியாலயம், பின்பகுதியில் பாதுகாப்புடன் இயங்கிய, லேத் பட்டறை என்பவற்றை பார்த்து பிரமித்தேன். காரணம் அத்தனையும் ஸ்டாலின் அண்ணாவின் பூர்வீக இடங்கள். அனைத்தையும் அவர் ஈழவிடுதலை வேட்கையுடன் வந்த எம்மவரின் தேவைக்கே பயன்படுத்தினார். போராட்டம் நடக்கும் ஈழ மண்ணில் போராளிகள் மீது பெரும் பணம் படைத்த கனவான்கள் காட்டாத கரிசனையை, கொடுக்காத ஆதரவை, கும்பகோணத்து திராவிட தமிழர் பிரதிபலன் எதிர்பாராது செய்தது என்னை பிரமிக்க செய்தது. மண்ணில் எமது போராட்டத்தில் ஓடும் புளியம் பழமும் போல, ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த பலர் எம்மை பொடியள், இயக்கம் என சற்று இளக்காரமாக பேசிய வேளை, வாய்நிறைய வாங்க தோழர் என வயது வித்தியாசம் இன்றி அனைத்து கும்பகோண மக்களும், எமக்கு மதிப்பளித்தது, ஸ்டாலின் அண்ணா என்ற அந்த பெருமகனால்தான். அண்ணா காட்டும் திசையில் பயணிக்க தயாராக பலர் காத்திருந்தார்கள். அண்ணாவின் கூட்டில் நான் கண்ட முக்கியமானவர்களை நினைவுகூரும் தருணம் இது. வள்ளிநாயகம், பக்கிரி, பேட்டைகுமார், கண்ணையன், ஓட்டி கணேஷ், கண்ணன்.

இவர்களில் கண்ணன் மட்டுமே தற்போது உயிர் வாழ்கிறார். நான் அண்ணா வீட்டுக்கு சென்றபோது மெலிந்த உருவத்தில் பத்திரிகை படித்து கொண்டிருந்தவர் தான் கண்ணன். அண்ணாவின் பால்யகால நண்பர். எஸ் எஸ் எல் சி முடித்த பின் கண்ணன் அந்தமானுக்கு சென்றுவிட்டார். சில வருடங்கள் கழித்து வந்த போது அண்ணன் BA BL  முடித்திருந்தார். கண்ணனை கண்ட மாத்திரத்தில் தனது லேத் பட்டறையில் அவரை அண்ணன் இணைத்துக்கொண்டார். பின்னாளில் எமது ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக, மோட்டார் எறிகணைகளை உற்பத்தி செய்வதில் கண்ணனின் கைவண்ணம் மிளிர்ந்தது. அடையாளம் காண முடியாத அளவிற்கு மெலிந்து மாறுதலாக இருந்ததால் என்னால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அக்கா, இவரு… கண்ணனை ஞாபகமிருக்கிறதா என்று கேட்ட பின்பே நான் எழுந்து சென்று கண்ணன் கரம் பற்றினேன். அண்ணனை நினைத்து பல பழைய சம்பவங்களை நினைவூட்டினார். அதில் முக்கியமானது S S  என அடையாளமிட்ட மோட்டார் எறிகணை. அது ஸ்டாலின் S சின்னவன் S கூட்டு தயாரிப்பு. ஈரோஸ் வேலைத்திட்டத்தில் பாலஸ்தீன பயிற்சி முடித்துவந்த தம்பலகாமம் சின்னவன் [செல்வராஜா] பின்பு நாபாவின் அழைப்பில் ஈ பி ஆர் எல் எப் ல் தன்னை இணைத்துக்கொண்டார். ஆங்கில படிப்பறிவு மட்டுமே அவரிடம் இல்லை. ஆயுதங்கள் பற்றிய பட்டறிவு நிறையப்பெற்றவர். தான் பாலஸ்தீன பயிற்சியில் கண்ட மோட்டார் எறிகணை பற்றி அண்ணாவுக்கு விளக்க, முகுந்தன் [முருகநேசன்] மூலம் சென்னையில் இருந்து அது சம்மந்தமான ஆங்கில புத்தகங்களை வாங்கி அண்ணா, சின்னவன் முயற்சியில், கண்ணன் போன்றவர் பங்களிப்பில் உருவாகி, இலங்கை இராணுவத்தை முகாங்களுக்குள் முடக்கிய மோட்டர் தாக்குதல் எறிகணை தான், S S எறிகணை.

சென்னையில் ஈழ விடுதலைக்கான நேச சக்திகளை அணிதிரட்டும் வேளையில், நாபாவுக்கு கிடைத்த அறிமுகம் தோழர் வள்ளி என்று எம்மால் அழைக்கப்பட்ட வள்ளிநாயகம். சுசீந்திரத்துக்கு அருகில் இருந்த வள்ளியூர் எனும் இடத்தில் தான் பிறந்ததால், தனக்கு வள்ளி என பெயர் சூட்டியதாக பெருமைப்படுவார். அவரின் தோழமை நாபாவை ஸ்டாலின் அண்ணாவுக்கு அறிமுகம் செய்தது. நாபாவின் நிழலாக இருந்தவர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு கூட எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்தவர், அறியமுடியா காரணத்தால் ஒதுங்கிக்கொண்டார். ஆனால் இன்றுவரை அவர் மனைவி ஓவியா எம்மை விட்டு விலகவில்லை. அண்மையில் நடந்த ஸ்டாலின் அண்ணாவின் பட திறப்பு விழாவுக்கு சென்னையில் இருந்து கும்பகோணம் சென்று கலந்து கொண்டார்.

நாபாவிற்கு நம்பிக்கையான தோழனாக இருந்து அண்ணாவின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த வள்ளி, இறப்பில் அண்ணணனை முந்திக்கொண்டார். தன் பலன்தரும் நிலத்தை எமது பயிற்சி முகாமாக்க தந்த கண்ணையன், அண்ணாவின் கண்ணசைவில் செயல்ப்படும் பக்கிரி, பேட்டை குமார், நாபாவின் வாகனத்தை செலுத்துவதை பெரும்பேறாக கொண்ட ஓட்டி கணேஷ் கூட அண்ணாவை முந்திக்கொண்டனர். கண்ணன் மட்டுமே நடைபிணமாய் கண்ணீர் மல்க என் கரம் பற்றி ஸ்டாலின் அண்ணாவுடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

[ நீட்சி – தொடர் 3ல் ]

– ராம் –